இரவு நேரத்தில் காட்சி தரும் காலதேவி


இரவு நேரத்தில் காட்சி தரும் காலதேவி
x
தினத்தந்தி 5 May 2022 12:51 AM GMT (Updated: 5 May 2022 12:51 AM GMT)

மதுரை மாவட்டத்தில் எம்.சுப்புலாபுரம் என்ற ஊருக்கு அருகில் இருக்கிறது, சிலார்பட்டி. இங்கு காலத்தின் அதிபதியாக, நேரத்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அம்மனுக்கு தனிக் கோவில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆலயத்தின் மூலவராக ‘காலதேவி அம்மன்’ வீற்றிருக்கிறார். இந்த ஆலயத்தின் கோபுரத்தில், ‘நேரமே உலகம்’ என்ற வாசகம் எழுதப்பட்டிருக்கிறது.

புராணங்களில் சொல்லப்படும் ‘காலராத்திரி’ என்பதைத்தான் இங்கே காலதேவியாக, பெண் வடிவில் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது. இந்த காலதேவியின் இயக்கத்தில்தான் பிரபஞ்சம் முழுவதும் இயங்குவதாகவும், படைத்தல், காத்தல், அழித்தல், பஞ்ச பூதங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள், முப்பத்தி முக்கோடி தேவர்களுக்கும் அப்பாற்பட்டு இயங்கும் சக்தி இந்த காலதேவிக்கு உண்டு.

நேரத்தின் அதிபதியாக விளங்கும் காலதேவியால், ஒருவரது கெட்ட நேரத்தையும் நல்ல நேரமாக மாற்ற முடியும் என்பதுதான் இந்த ஆலயம் அமைந்ததற்கான தத்துவம். பொதுவாக அனைத்து கோவில்களும் காலையில் நடை திறக்கப்பட்டு, இரவு 10 மணிக்குள் நடை அடைக்கப்பட்டு விடும். ஆனால் இந்த காலதேவி கோவில், சூரியன் அஸ்தமித்த பிறகு திறக்கப்பட்டு, சூரிய உதயத்திற்கு முன்பாக நடை சாத்தப்படும் வழக்கத்தைக் கொண்டிருக்கிறது.

கருவறையில் வீற்றிருக்கும் காலதேவியின் தலைக்குப் பின்புறம் வட்ட வடிவில் இருக்கும் அமைப்பு, மூன்று பிரிவாக உள்ளது. அதன் மேல் அடுக்கில் 12 ராசிகளுக்கான சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இரண்டாவதாக அமைந்த மைய அடுக்கில் 27 நட்சத்திரங்களைக் குறிப்பிடும் வகையில் நட்சத்திரங்கள் வரிசையாக வடிக்கப்பட்டுள்ளன. உள் அடுக்கில் நவக்கிரங்களின் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. இதனை உற்றுக் கவனித்தால்தான் தெளிவாகத் தெரியும்.

நேரத்திற்கான அன்னை என்பதால், இந்த காலதேவியை ஆலயம் திறந்திருக்கும் வேளையில் எப்போது வேண்டுமானாலும் வழிபடலாம் என்றாலும், பவுர்ணமி மற்றும் அமாவாசை தினங்கள் வழிபாடு செய்வதற்கான சிறப்பு தினங்களாக பார்க்கப்படுகிறது. கோவிலை வலமிருந்து இடமாக 11 சுற்றுகளும், இடமிருந்து வலமாக 11 சுற்றுகளும் சுற்றி வந்து, காலச்சக்கரத்தின் முன் அமர்ந்து 11 வினாடிகள் தரிசித்தால் போதும்.

கெட்டநேரம் அகன்று நல்லநேரம் வரும் என்பது ஆலயத்தின் மீதான நம்பிக்கை.

மதுரையில் இருந்து ராஜபாளையம் செல்லும் பஸ்சில் ஏறி, எம். சுப்பலாபுரம் மெயின் ரோட்டில் இறங்க வேண்டும். அங்கிருந்து நடந்தோ, ஆட்டோவிலோ சிலார்பட்டியை அடையலாம். சாதாரண நாட்களில் பேருந்து வசதிகள் அதிகமாக இருக்காது. ஆனால் பவுர்ணமி, அமாவாசை நாட்களில் போதிய பஸ்வசதி இருக்கும்.

Next Story