சென்னிமலைமுருகன் கோவில் தைப்பூச தேர்த்திருவிழா;28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது


சென்னிமலைமுருகன் கோவில் தைப்பூச தேர்த்திருவிழா;28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
x

சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா வருகிற 28-ந் தேதி காலையில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

ஈரோடு

சென்னிமலை

சென்னிமலை முருகன் கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா வருகிற 28-ந் தேதி காலையில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

சென்னிமலை முருகன் கோவில்

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச தேர்த்திருவிழா பல்வேறு நிகழ்ச்சிகளுடன் 15 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக தேரோட்டம் நடைபெறவில்லை.

28-ந் தேதி தொடங்குகிறது

இந்த ஆண்டு தைப்பூச தேர்த்திருவிழா வருகிற 28-ந் தேதி (சனிக்கிழமை) காலையில் மலைமேல் உள்ள முருகன் கோவிலில் சேவல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று இரவு மற்றும் மறுநாள் 29-ந் தேதி இரவு 8 மணிக்கு பல்லக்கு சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

30-ந் தேதி இரவு மயில் வாகனக்காட்சி நடைபெறுகிறது. வருகிற 1-ந் தேதி (புதன்கிழமை) இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்தி புறப்பாடு - வெள்ளி மயில் வாகனக்காட்சி நடக்கிறது.

2-ந் தேதி (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு யானை வாகனக்காட்சியும், 3-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு கைலயங்கிரி வாகனக்காட்சியும், அன்று இரவு 8 மணிக்கு காமதேனு வாகனக்காட்சியும் நடைபெறுகிறது.

4-ந் தேதி (சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு கைலாசநாதர் கோவிலில் வள்ளி- தெய்வானை சமேத முத்துகுமாரசாமிக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. அன்று இரவு 8 மணிக்கு வசந்த திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெறுகிறது.

தேரோட்டம்

முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. அன்று அதிகாலை 3 மணிக்கு கைலாசநாதர் கோவிலில் வள்ளி- தெய்வானை சமேத முத்துக்குமாரசாமிக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து காலை 6.30 மணிக்குள் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் முக்கிய பிரமுகர்கள் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம் பிடித்து இழுத்து தெற்கு ராஜ வீதி சந்திப்பில் நிறுத்துகிறார்கள்.

அன்று காலை 8 மணி முதல் தைப்பூச இசை விழாக்குழு மற்றும் அக்னி நட்சத்திர அன்னதான வழிபாட்டு மன்றம் சார்பில் மலை அடிவாரத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்று மாலை 5 மணிக்கு மீண்டும் தேர் வடம் பிடித்து இழுத்து வடக்கு ராஜ வீதி சந்திப்பில் நிறுத்தப்படுகிறது. 6-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு தேர் நிலை சேர்கிறது. 7-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு பரிவேட்டை குதிரை வாகனக்காட்சி நடைபெறுகிறது.

மகா தரிசனம்

8-ந் தேதி (புதன்கிழமை) இரவு 7 மணிக்கு தெப்போற்சவ நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையொட்டி பார்க் ரோட்டில் உள்ள தெப்பக்குளத்தில் தெப்பத்தேர் விடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து பூத வாகனக்காட்சி நடைபெறுகிறது.

தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மகா தரிசனம் 9-ந் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி அன்று காலை 9 மணிக்கு மகா அபிஷேகமும், இரவு 7 மணிக்கு மகா தரிசனமும் நடைபெறுகிறது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கிறார்கள். அன்று இரவு 4 ராஜ வீதிகள் வழியாக சாமிகள் வலம் வந்து மறுநாள் அதிகாலையில் கைலாசநாதர் கோவிலுக்குள் அழைத்து செல்லப்படுகிறது.

மஞ்சள் நீர்

10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு மஞ்சள் நீர் உற்சவத்துடன் தேர் திருவிழா நிகழ்ச்சிகள் நிறைவு பெறுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக தைப்பூச தேரோட்டம் நடைபெறவில்லை என்பதால் இந்த ஆண்டு அதிக அளவில் சென்னிமலை முருகன் கோவில் தைப்பூசத்திற்கு பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விழாவை முன்னிட்டு தேரை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் எம்.அன்னக்கொடி, கோவில் ஆய்வாளர் ஆர்.ரவிக்குமார், செயல் அலுவலர் ஏ.கே.சரவணன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.


Next Story