பவானிசாகர் வனப்பகுதியில் உள்ளஆதி கருவண்ணராயர் கோவில் பொங்கல் விழா


பவானிசாகர் வனப்பகுதியில் உள்ளஆதி கருவண்ணராயர் கோவில் பொங்கல் விழா
x

பவானிசாகர் வனப்பகுதியில் உள்ள ஆதி கருவண்ணராயர் கோவில் விழாவுக்கு சென்ற வாகனங்களை தீவிர சோதனைக்கு பின்னரே வனத்துறையினர் அனுமதித்தனர்.

ஈரோடு

பவானிசாகர்

பவானிசாகர் வனப்பகுதியில் உள்ள ஆதி கருவண்ணராயர் கோவில் விழாவுக்கு சென்ற வாகனங்களை தீவிர சோதனைக்கு பின்னரே வனத்துறையினர் அனுமதித்தனர்.

ஆதி கருவண்ணராயர்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உள்பட்டது பவானிசாகர் வனப்பகுதி. இந்த வனப்பகுதியில் தெங்குமரஹடா கிராமத்துக்கு செல்லும் வழியில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள பகுதி கெஜலெட்டி. இங்கு மிகவும் பிரசித்தி பெற்ற ஆதி கருவண்ணராயர் பொம்மா தேவி கோவில் உள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த உப்பிலி நாயக்கர் சமுதாய மக்களுக்கு இந்த கோவில் குலதெய்வ கோவிலாக உள்ளது.

பொங்கல் விழா

இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் பவுர்ணமியையொட்டி 3 நாட்களுக்கு பொங்கல் விழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த உப்பிலி நாயக்கர் சமுதாய பொதுமக்கள் வேன், லாரி, பஸ்கள் மூலம் தங்கள் குடும்பத்துடன் இந்த கோவிலுக்கு வருவார்கள். பின்னர் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து ஆடு மற்றும் கோழி பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவர். மேலும் கோவில் வளாகத்தை சுற்றியுள்ள வனப்பகுதியில் சமைத்து சாப்பிட்டு விட்டு செல்வது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான மாசி பொங்கல் விழா நேற்று தொடங்கியது. இன்றும் (திங்கட்கிழமை) மற்றும் நாளையும் (செவ்வாய்க்கிழமை) பவுர்ணமி பொங்கல் விழா நடைபெறுகிறது.

வாகனங்கள் சோதனை

இதைத்தொடா்ந்து கோவிலுக்கு நேற்று காலை 6 மணி முதல் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வாகனங்களில் வர தொடங்கினர். பவானிசாகர் வனத்துறை சார்பாக வனச்சரகர் சிவக்குமார் தலைமையில் காராச்சிகொரை வன சோதனை சாவடியில் வாகனங்கள் தீவிரமாக சோதனை செய்யப்பட்டது. வாகனங்களில் மது மற்றும் போதை பொருட்கள் இருக்கிறதா? என வனத்துறையினர் ஆய்வு செய்தனர். மேலும் பக்தர்கள் கோவிலை சென்றடையும் வரை வனப்பகுதிக்குள் வழியில் வாகனத்தை விட்டு இறங்க கூடாது. வனப்பகுதியில் தீப்பற்ற வைக்க கூடாது. வனவிலங்குகளை பார்த்தால் அவைகளை தொந்தரவு செய்யக்கூடாது போன்றவை உள்பட பல்வேறு அறிவுரைகளை வழங்கி கோவிலுக்கு செல்ல பக்தா்களை வனத்துறையினர் அனுமதித்தனர். நாளை மாலை 6 மணியுடன் பொங்கல் விழா நிறைவுபெறுகிறது.

1 More update

Next Story