கிருபானந்த வாரியாரின் நாவன்மை


கிருபானந்த வாரியாரின் நாவன்மை
x

கிருபானந்த வாரியாரின் நாவன்மையும்தான் மக்களிடம் இவருக்கு செல்வாக்கு உயரக் காரணம் என்று சொல்லலாம்.

முருகப்பெருமானின் தீவிர பக்தராக இருந்தவர், கிருபானந்தவாரியார். இவரது சொற்பொழிவை கேட்பதற்காகவே கூடும் கூட்டம் ஏராளம். இவரது பேச்சில் இழையோடும் நகைச்சுவையும், எந்த ஒரு எதிர்மறை வார்த்தைகளையும், நேர்மறையாக மாற்றிப் பேசும் இவரது நாவன்மையும்தான் மக்களிடம் இவருக்கு செல்வாக்கு உயரக் காரணம் என்று சொல்லலாம். அவரது வாழ்வில் நடந்த ஒரு சுவாரசிய நிகழ்வை இங்கே பார்க்கலாம்.

ஒரு முறை ஆன்மிக சொற்பொழிவுக்காக ஓரிடத்திற்குச் சென்றிருந்தார், கிருபானந்த வாரியார். அவர் உரை நிகழ்த்தும் மேடைக்கு எதிரே, இறை நம்பிக்கை இல்லாதவர்கள் சிலர், 'திருநீறு இட்டார் கெட்டார்.. திருநீறு இடாதார் வாழ்ந்தார்' என்று எழுதியிருந்தனர்.

அதைப் பார்த்த ஒருவர், கிருபானந்த வாரியாரிடம் "பார்த்தீர்களா சுவாமி.. எப்படி எழுதிப் போட்டிருக்கிறார்கள் என்று' எனச் சென்னார்.

அதற்கு வாரியார், "சரியாகத்தானே எழுதியிருக்கிறார்கள்" என்று கூறியதும், அதிர்ச்சியடைந்தார் அந்த நபர்.

"என்ன சுவாமி.. நீங்களும் இப்படி பேசுகிறீர்கள்?" என்று கேட்க, அதற்கு வாரியார், "அந்த வார்த்தைகளை நன்றாக பதம் பிரித்துப் பாருங்கள். எல்லாம் சரியாகத்தான் இருக்கும்" என்றார்.

அவரே அந்த வார்த்தைகளை பதம் பிரித்து சொல்லவும் செய்தார். "திருநீறு இட்டு யார் கெட்டார் (இட்டு + யார் = இட்டார்)" என்றும், அடுத்த வரியை 'திருநீறு இடாது யார் வாழ்ந்தார் (இடாது + யார் = இடாதார்)" என்று பதம் பிரித்து சொன்னதும், அந்த நபர் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார். இந்த நாவன்மையும், அறிவுக்கொடையும் கிருபானந்த வாரியாருக்கு தந்தவர், முருகப்பெருமான்.

1 More update

Next Story