புனிதம் நிறைந்த இரட்டை சுண்ணாம்பு சிகரம்


புனிதம் நிறைந்த  இரட்டை சுண்ணாம்பு சிகரம்
x

கர்நாடகா மாநிலத்தில் வடகன்னட மாவட்டம் கும்தாவின் காடுகளுக்கு இடையே அமைந்திருக்கிறது, யானா என்ற மலைக் கிராமம். இந்த கிராமம் மேற்குத் தொடர்ச்சி மலையின் சக்யாத்ரி என்ற மலைத் தொடரில் இடம்பெற்றுள்ளது. உலகின் ஈரப்பதம் நிறைந்த கிராமமாக இது போற்றப்படுகிறது.

கர்நாடகாவின் முதன்மையான தூய்மை கிராமம் என்றும், இந்தியாவின் இரண்டாவது தூய்மை கிராமம் என்றும் இது பட்டியலிடப்பட்டுள்ளது. யானா கிராமத்திற்கு அருகில் உள்ள இரண்டு தனித்துவமான பாறைகள், புராணக் கதையை தாங்கியும், சிறப்பான சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் அதிகாரி பிரான்சிஸ் புக்கானன்-ஹாமில்டன் என்பவர் 1801-ல் இந்த இடத்தை ஆய்வு செய்தார். அந்த நேரத்தில், அவரது அறிக்கையின்படி, இந்த இடத்திலும் அதைச் சுற்றிலும் பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் இருந்தனர். பல ஆண்டுகளாக, மக்கள் தங்கள் தொழிலைத் தொடர மற்ற பகுதிகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர். தற்போது, இந்த இடத்தில் ஒரு சில குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றன. அவற்றில் கோவிலின் அர்ச்சகர் குடும்பமும் ஒன்று.

அடர்ந்த காடுகள் மற்றும் நீரோடைகளால் சூழப்பட்ட இரண்டு பாறைகள் அல்லது மலைகள், யானா கிராமத்திற்கு அருகிலுள்ள பகுதிக்கு மேலே கூர்மையாக உயர்ந்து நிற்கின்றன. யானா கிராமத்திற்கும், முழு மலைத்தொடருக்கும் இவை ஒரு தெளிவான அடையாளத்தை அளிக்கின்றன. இந்த இரண்டு பாறைகளில் ஒன்று

'பைரவேசுவர சிகரம்' என்றும், மற்றொன்று 'மோகினி சிகரம்' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த இரண்டு சிகரங்களால் யானா கிராமம் பிரபலமானது. பிரமாண்டமான பாறைகள் திடமான கருப்பு படிக சுண்ணாம்பு கற்களால் ஆனவை. பைரவேசுவர சிகரம் 120 மீட்டர் (390 அடி) உயரமும், மோகினி சிகரம் 90 மீட்டர் (300 அடி) உயரமும் கொண்டவை.

பைரவேசுவர சிகரத்திற்குக் கீழே உள்ள குகைக் கோவிலால் யானா கிராமம், ஒரு புனித யாத்திரை மையமாகவும் அறியப்படுகிறது. இந்தக் குகைக் கோவிலுக்குள் சிவபெருமான், சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். இவரின் தலைக்கு மேல் உள்ள விமானத்தில் இருந்து இடைவிடாது சொட்டும் நீர், இந்த இடத்தின் புனிதத்தை மேலும் அதிகரிக்கிறது. சிவலிங்கத்தின் இயற்கையான உருவாக்கம், சுண்ணாம்புப் பாறை மற்றும் புற்றுப் பாறைகளால் உருவாகியது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பைரவேசுவர சிகரத்தில், 3 மீட்டர் (9.8 அடி) அகல திறப்பு உள்ளது. இது ஒரு குகைக்குள் செல்கிறது. குகைக்குள், துர்க்கையின் அவதாரமான 'சண்டி' என்ற தெய்வத்தின் வெண்கல சிலை உள்ளது. இந்த குகைக்குள் தான் சுயம்பு லிங்கமும் இருக்கிறது. சண்டிதுளை என்று அழைக்கப்படும் ஒரு சிறிய துளையில் இருந்து வெளியேறும் நீரோட்டமானது, அங்கிருந்து புறப்பட்டு இறுதியில் உப்பினபட்டனம் என்ற இடத்தில் உள்ள 'அகனாட்சினி' என்ற ஆறுடன் இணைகிறது. உள்ளூர் மக்கள் இதை 'கங்கோத்பவா' (கங்கை ஆறு ) என்ற ஆற்றின் தோற்றம் என்று கூறுகிறார்கள்.

தல வரலாறு

இந்த இடம், புராணங்களில் சொல்லப்பட்டுள்ள பஸ்மாசுரன் என்ற அசுரனின் வாழ்க்கையோடு இணைந்துள்ளது. பஸ் மாசுரன், தனது கடுமையான தவத்தால், சிவனிடமிருந்து ஒரு வரம் பெற்றான். அதன்படி தான் ஒருவரின் தலையில் கையை வைத்தால், அவர் எரிந்து சாம்பலாக மாறிவிடவேண்டும் என்பது அவன் பெற்ற வரம். சிவபெருமானும் அவன் கேட்டபடியே வரத்தை அளித்தார். ஆனால் அந்த வரத்தை சோதிக்கும் பொருட்டு, வரமளித்த சிவனின் தலையிலேயே கை வைத்துப் பாா்க்க நினைத்தான், பஸ்மாசுரன். அவனால் துரத்தப்பட்ட சிவன், விஷ்ணுவின் உதவியை நாடினார். சிவனுக்கு உதவுவதற்காக விஷ்ணு தன்னை 'மோகினி' என்ற அழகான பெண்ணாக மாற்றிக் கொண்டு, அசுரன் முன் தோன்றினார். தன்னுடைய அழகால் ஈர்க்கப்பட்ட அசுரனை, ஒரு நடனப் போட்டிக்கு அழைத்தார் மோகினி.

நடனப் போட்டியின் போது, மோகினி புத்திசாலித்தனமாக தனது தலையில் கை வைத்து ஒரு நடன அசைவினை செய்தார். இந்தச் செயலின் ஆபத்தை உணராமல், அசுரனும் தன் தலைக்கு மேல் கையை வைத்தான். அடுத்தநொடி அவன் பெற்ற வரத்தின்படி, அவன் தலை வெடித்து பஸ்பமானது. அவன் தன் கைகளின் நெருப்பால் அழிந்து, சாம்பலாக மாற்றப்பட்டான். இந்தச் செயலின் போது வெளிப்பட்ட நெருப்பு மிகவும் தீவிரமாக இருந்ததால், யானா பகுதியில் சுண்ணாம்பு படிவங்கள் ஏற்பட்டதாக நம்பப்படுகிறது.

இப்பகுதியில் உள்ள இரண்டு பெரிய பாறை அமைப்புகளைச் சுற்றி காணப்பட்ட தளர்வான கறுப்பு மண் அல்லது சாம்பல், புராணக்கதைக்கு சான்றாக மேற்கோள் காட்டப்படுகிறது. அவை தீ காரணமாக பஸ்மாசுரனின் மரணத்தால் உருவான சாம்பல் என்றும் பக்தர்கள் கருதுகின்றனர். இந்த நிகழ்வின் காரணமாக இரண்டு மலைகளுக்கு பெயரிடப்பட்டுள்ளன. உயரமான சிகரம் பைரவேசுவரர் சிகரம் (சிவனின் மலை) என்றும், அதற்கு சில படிகள் கீழே, மோகினி சிகரம் (மோகினியின் மலை) என்றும் அழைக்கப்படுகிறது. மேலும், இதன் அருகில் இன்னும் பல சிறிய குகைகளும் உள்ளன. அருகிலேயே ஒரு பிள்ளையார் கோவிலும் இருக்கிறது.

இந்தப் பகுதியில் 'விபூதி அருவி' ஒன்று உள்ளது. சாம்பலாக மாறிய பஸ்மாசுரனின் பெயரில் இந்த அருவி இருப்பதாக சொல்லப்படுகிறது. இதை அடைய இரண்டு பெரிய பாறை சிகரங்கள் உள்ள மலையில் இருந்து அரை கிலோமீட்டர் தூரம் கீழ் இறங்கி மலையேற்றம் செய்ய வேண்டும். மகா சிவராத்திரியின் போது, ஆண்டு தோறும் இங்கு 10 நாள் உற்சவம் நடத்தப்படுகிது. இந்த சமயத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு யாத்திரை மேற்கொள்கின்றனர். குகையிலுள்ள நீரூற்றிலிருந்து வரும் புனித நீரை, அருகில் உள்ள கோகர்ணம் என்ற நகரத்திற்கு கொண்டு சென்று, அங்குள்ள மகாபலேசுவரன் என்ற தெய்வத்திற்கு அபிஷேகம் செய்கின்றனர். மகா சிவராத்திரி விழாவின் போது இங்கு தேரோட்டமும் நடக்கிறது.

16 கி.மீ தூர மலையேற்றம் கொண்ட யானா கிராமம், 20-ம் நூற்றாண்டு முதல் மலையேற்ற வீரர்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான இடமாக இருக்கிறது. இங்கு பல திரைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளன.

1 More update

Next Story