பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு

பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
வைகுண்ட ஏகாதசியையொட்டி பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பிரசன்ன வெங்கடேசப்பெருமாள்
கூத்தாநல்லூர் அருகே உள்ள வேளுக்குடியில் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று வைகுண்ட ஏகாதசியையொட்டி, அதிகாலையில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் சொர்க்கவாசல் திறந்ததும் அதன் வழியாக கோவில் பிரகாரம் சென்று தனி மேடையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் கோவிலின் நான்கு புறமும் வீதி உலா காட்சி நடைபெற்றது. முன்னதாக பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி வாசன திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் சொர்க்கவாசலில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோதண்டராமர் கோவில்
வடுவூர் கோதண்டராமர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. இதையொட்டி நேற்று நடந்த சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் வசந்த மண்டபத்தில் லட்சுமணன், சீதாதேவி, அனுமன் சமேதராக கோதண்டராமர் வில்லேந்திய திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
சந்தானராமர் கோவில்
நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் வைகுண்டஏகாதசியையொட்டி பரமபதவாசல் திறப்பு நேற்று நடைபெற்றது. இதையொட்டி சீதா, லட்சுமணன், அனுமன் சமேத சந்தானராமர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதனை தொடர்ந்து நடந்த பரமபதவாசல் திறப்பில் சந்தானராமர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மணிகண்டன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
அபயவரதராஜப்பெருமாள்
இதேபோல் ஆலங்குடி அபயவரதராஜப்பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது. இதையொட்டி நடந்த பரமபதவாசல் திறப்பில் ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத அபயவரதராஜப்பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நீடாமங்கலம் லெட்சுமி நாராயணப்பெருமாள் கோவிலிலும் வைகுண்ட ஏகாதசி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பக்தவச்சலபெருமாள் கோவில்
கொரடாச்சேரி ஒன்றியம் திருக்கண்ணமங்கையில் பக்தவச்சலபெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பக்தவச்சலபெருமாள் மற்றும் அபிஷேகவல்லி தாயார் கோவில் பாராயணம் செய்யப்பட்டு குடமுழுக்கு நடைபெறுகிறது. இதனால் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறவில்லை. இதை அறியாத பக்தர்கள் கோவிலுக்கு வந்து பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் சென்றனர். ஆனாலும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் அங்கிருந்த விஷ்ணுபாதத்தை தரிசனம் செய்தனர்.
அரங்கநாத பெருமாள் கோவில்
திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரங்கம் அரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று வைகுண்ட ஏகாதசியையொட்டி அதிகாலையிலேயே சாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதனை தொடர்ந்து சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல திருத்துறைப்பூண்டி அபிஷ்ட வரதராஜப்பெருமாள் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. பின்னர் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பெருமாள் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோவிந்தா என கோஷம் எழுப்பினர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சிங்காரவேலு, தலைமை பட்டாச்சாரியார் வெங்கடேசன் ஆகியோர் செய்திருந்தனர்.






