சேதமடைந்து கிடக்கும் வரதராஜ பெருமாள் கோவில்

வெள்ளகோவிலில் சேதம் அடைந்துள்ள வரதராஜ பெருமாள் கோவிலை சீரமைக்க இந்து சமய அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.
வெள்ளகோவிலில் சேதம் அடைந்துள்ள வரதராஜ பெருமாள் கோவிலை சீரமைக்க இந்து சமய அறநிலையத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது.
கோவிலுக்குள் புகும் மழைநீர்
வெள்ளகோவில், மூலனூர் ரோட்டில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் 150 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த கோவிலாகும், இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில் ஸ்ரீதேவி பூமாதேவி வரதராஜ பெருமாள், ஆஞ்சநேயர், மகாலட்சுமி, தும்பிகையாழ்வார், கருடாழ்வார், கிருஷ்ணன் ஆகிய தெய்வங்கள் உள்ளன.
சாலையை உயர்த்திக் கொண்டு போவதால், இக்கோவில் தற்போது நில மட்டத்திற்கு கீழ் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் சாலையில் ஓடும் கழிவுநீர் கோவிலுக்குள் புகுந்து மூலவர் வரை சென்று விடுகிறது. கோவில் வளாகம் முழுவதும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் மழைக்காலங்களில் பக்தர்கள் கோவிலுக்குள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் கடந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசிக்கு சொர்க்கவாசல் நிகழ்ச்சி நடைபெறவில்லை.
சேதமடைந்துள்ளது
இந்த கோவிலில் வரதராஜ பெருமாளுக்கு 1982-ம் ஆண்டும், ஸ்ரீதேவி பூமாதேவி வரதராஜ பெருமாளுக்கு 1988-ம் ஆண்டும், தும்பிக்கையாழ்வாருக்கு 1993-ம் ஆண்டும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதாக கல்வெட்டுகள் உள்ளன. இக்கோவிலில் தினசரி பூஜைகள் நடைபெற்று வருகின்றன. வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமிக்கும், சனிக்கிழமை அன்று வரதராஜ பெருமாள் மற்றும் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன, அமாவாசை, பவுர்ணமி மற்றும் புரட்டாசி மாதங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது மழைக்காலங்களில் கோவில் வளாகத்திற்குள் நீர் புகுந்து கோவில் சுவர்கள் தரைகள் சேதமடைந்த நிலையில் உள்ளன, மழைக்காலங்களில் கோவிலுக்குள் செல்வதற்காக ஹாலோ பிளாக் கற்கள் போட்டு அதன் மீது நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.
எனவே இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுத்து இக்கோவிலை புதுப்பிக்க வேண்டுமாய் வெள்ளகோவில் சுற்றுவட்டார பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






