மாங்கல்ய வரம் அருளும் மருந்தீஸ்வரர்


மாங்கல்ய வரம் அருளும் மருந்தீஸ்வரர்
x

இறைவனுக்கும், இறைவிக்கும் திலீப சக்கரவர்த்தி இங்கு கோவிலை அமைத்தார். அதுவே திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவில் ஆகும்.

கோவில் தோற்றம்

திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது திருத் துறைப்பூண்டி. இங்கு பெரியநாயகி உடனாய பிறவி மருந்தீஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இந்த ஆலயம் மாங்கல்ய வரம் அருளும் திருத்தலங்களில் முக்கியமானதாகத் திகழ்கிறது. இத்தலம் அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் வழிபட உகந்த தலமாகும். அஸ்வினி நட்சத்திரத்திற்கு மருத்துவ சக்திகள் உண்டு. இந்த நட்சத்திரத்திற்குரிய தேவதைகளும், மருத்துவ தேவதைகளும் தினமும் இத்தல இறைவனை வழிபடுவதாக ஐதீகம்.

திலீப சக்கரவர்த்தி ஒரு முறை வேட்டையாடுவதற்காக காட்டிற்குச் சென்றார். காட்டிற்குள் இரண்டு மான்கள் இருப்பதைக் கண்டு, அதில் ஒரு மான் மீது அம்பெய்தார். அம்பு உடலில் பாய்ந்ததும் அந்த மான், ஒரு முனிவராக மாறியது. அருகில் நின்ற மானும், பெண்ணாக மாறியது. அது அந்த முனிவரின் மனைவி. இதனால் பதறிப்போன சக்கரவர்த்தி, முனிவரின் அருகே ஓடிவந்தார். அதற்குள் அவர் இறந்துவிட்டார். செய்வதறியாது திகைத்த சக்கரவர்த்தி, முனிவரின் மனைவிடம், "தாயே.. நான் மான் என்று நினைத்துதான் அம்பு எய்தேன். ஆனால் இப்படி ஒரு முனிவரைக் கொன்று, தீராத பாவத்திற்கு ஆளாகிவிட்டேன்" என்று கண்ணீர் சிந்தினார்.

அவரைப் பார்த்து, "இதில் உங்கள் மீது எந்த தவறும் இல்லை. தெரியாமல் செய்த உங்களுக்கு மன்னிப்பு உண்டு. ஆனால் என் கணவர் இன்றி என்னால் வாழ இயலாது. எனவே என்னையும் அம்பெய்து கொன்றுவிடுங்கள்" என்றார், முனிவரின் மனைவி.

சக்கரவர்த்தியின் வேதனை இன்னும் அதிகமானது. முனிவரைக் கொன்ற பாவமே மனதை துளைத்தெடுக்கும் போது, ஒரு பெண்ணையும் கொன்று இன்னும் பாவத்தை சேர்த்துக்கொள்வதா? என்று நினைத்த சக்கரவர்த்தி, தன்னுடைய குல குருவான வசிஷ்டரை மனதால் நினைத்தார். அவர் நினைத்த மறுநொடியே அங்கு தோன்றினார், வசிஷ்ட முனிவர்.

அப்போது அங்கிருந்த முனிவரின் மனைவி, வசிஷ்டரின் பாதங்களைத் தொட்டு வணங்கினாள். தன் காலில் ஒரு பெண் விழுந்ததைக் கண்டதும், "தீர்க்க சுமங்கலியாக வாழ்க" என்று கூறிவிட்டார், வசிஷ்டர். அப்படி வாழ்த்திய பிறகுதான், அவருக்கு அந்தப் பெண்ணின் கணவன் இறந்துபோனது தெரியவந்தது.

இருப்பினும் தான் சுமங்கலியாக வாழ வாழ்த்திவிட்டோமே என்று நினைத்த வசிஷ்டர், "பெண்ணே.. உனக்கு ஜல்லிகையின் கதையைக் சொல்கிறேன். கவனமாக கேள்" என்றவர், தொடர்ந்து அந்தக் கதையைக் கூறினார்.

ஜல்லிகை, அசுர குலத்தில் பிறந்த பெண். ஆனால் சிவ பக்தியில் சிறந்தவள். அவளது கணவன், விருபாட்ரன். அவன், தன்னுடைய பசிக்காக மனிதர்களை சாப்பிடுபவன். ஒரு நாள் வேதம் ஓதும் சிறுவன் ஒருவன், தன்னுடைய தந்தைக்கு திதி கொடுப்பதற்காக சென்று கொண்டிருந்தான். அப்போது அவனை வழிமறித்தான் விருபாட்சன். ஜல்லிகை, "வேதம் ஒதுபவர்களை சாப்பிட்டால், அந்த சாப்பாடே விஷமாகி விடும்" என்று கூறியும் கேளாமல், சிறுவனை விழுங்கினான், விருபாட்சன். இறுதியில் உணவு விஷமாகி இறந்து போனான்.

இதையடுத்து திருத்துறைப்பூண்டி இறைவனை நினைத்து வழிபட்ட ஜல்லிகை, "என் கணவர் நல்லவர் அல்ல. ஆனால் அவரின்றி நான் வாழ விரும்பவில்லை. இந்த உலகில் பிறப்பவர்களை அரக்க குணமின்றி பிறக்கச் செய். இல்லையேல் பிறவியை நீக்கிவிடு" என்று வேண்டினாள். அதைக்கேட்டதும் அம்பாளும், இறைவனும் அங்கு தோன்றி, விருட்பாட்சனையும், அவன் விழுங்கிய சிறுவனையும் உயிர்ப்பித்தனர்.

இந்தக் கதையைக் கூறிமுடித்த வசிஷ்டர், "அசுர குல பெண்ணுக்காக இரங்கிய இறைவன், உனக்காகவும் நிச்சயம் இரங்குவார். எனவே நீ உன் கணவனின் உடலை, சக்கரவர்த்தியின் ஆட்கள் உதவியோடு எடுத்துக் கொண்டு, காவிரிக்கரையோரம் வில்வ வனம் உள்ள பகுதிக்குச் செல். அங்கு ஒரு சிவலிங்கமும், அம்பாள் சிலையும் இருக்கும். அந்தக் கோவிலில் ஜல்லிகை தீர்த்தம் உள்ளது. அதில் நீராடி, மூன்று கை தண்ணீர் எடுத்து உன் கணவரின் உடலில் தெளித்தால், அவர் பிழைத்துக் கொள்வார்" என்றார்.

முனிவரின் மனைவியும் அப்படியேச் செய்தாள். முனிவர் உயிர் பெற்றார். அப்போது இறைவனும், இறைவியும் அவர்களுக்கு காட்சி கொடுத்தனர். அப்போது முனிவரின் மனைவி, "தாயே..என்னைப் போலும், ஜல்லிகை போலவும் தன் கணவரின் உடல் நலம் நாடி இங்கு வரும் பக்தைகளுக்கு தீர்க்க சுமங்கலியாய் இருக்கும் வரத்தை தந்தருள வேண்டும்" என்று வேண்டினாள்.

தனக்கு பழிபாவம் வராதபடி, அனைத்தையும் சுமுகமாக முடித்த இறைவனுக்கும், இறைவிக்கும் திலீப சக்கரவர்த்தி இங்கு கோவிலை அமைத்தார். அதுவே திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவில் ஆகும். திருவாரூரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஆலயம் இருக்கிறது.


Next Story