திருவொற்றியூர்: வட்டப்பாறை அம்மன் உற்சவம் தொடங்கியது
கொடியேற்றத்திற்கு முன்னதாக, மங்கல வாத்தியங்கள் முழங்க கொடி மரம் அருகே உற்சவ தாயார் எழுந்தருளினார்.
சென்னை:
சென்னை திருவொற்றியூரில் 2,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவிலில் கண்ணகி, காளி வடிவில் வட்டப்பாறை அம்மனாக திகழ்கிறார். வட்டப்பாறை அம்மன் ஆலயத்தில் யானை வடிவில் விமானம் அமைக்கப்பட்டு மிக விசேஷமாக வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, சித்திரை மாதம் 7 நாட்கள் வட்டப்பாறை அம்மன் உற்சவம் வெகு விமரிசையாக நடக்கும்.
அவ்வகையில், இந்த ஆண்டுக்கான வட்டப்பாறை அம்மன் உற்சவம் நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, கோவில் வளாகத்தில், வடதிசை நோக்கி வீற்றிருக்கும் வட்டப்பாறை அம்மனுக்கு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின், மங்கல வாத்தியங்கள் முழங்க, கொடி மரம் அருகே உற்சவ தாயார் எழுந்தருளினார். தொடர்ந்து, வேத மந்திரங்கள் உச்சரிக்க கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டது. கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் பக்தி முழக்கமிட, கொடியேற்றம் நடந்தது.
தொடர்ந்து, விழா நாட்களில், அபிஷேகம் மற்றும் உற்சவம் நடைபெறும். 7ம் தேதி கொடியிறக்கத்துடன் விழா நிறைவுறும்.
விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் துணை ஆணையர் ஹரிகரன், உதவி ஆணையர் சுப்பிரமணியம் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.