திருப்பதிக்கு இரு சக்கர வாகனங்களில் செல்கிறீர்களா..? நேர கட்டுப்பாட்டை கவனத்தில் கொள்ளுங்கள்
செப்டம்பர் 30-ம் தேதி வரை மலைப்பாதைகளில் இரு சக்கர வாகனங்கள் செல்வதற்கான கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.
திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் இருசக்கர வாகனங்களுக்கு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தேவஸ்தானத்தின் துணை வன பாதுகாவலர் கூறியதாவது:-
திருப்பதி மலைப்பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதம் வனவிலங்குகளின் இனப்பெருக்க காலம் ஆகும். இதனால் மலைப்பாதைகளில் வனவிலங்கள் சுற்றித்திரியும். குறிப்பாக, வனவிலங்குகள் முதல் மலைப்பாதை வழியாக அடிக்கடி சாலையை கடக்கும். அப்போது வாகன ஓட்டிகள் மீது வனவிலங்குகள் தாக்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
எனவே பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் வன விலங்குகளின் நலனைக் கருத்தில் கொண்டு திருமலை மலைப்பாதைகளில் வருகிற செப்டம்பர் மாதம் இறுதி வரை இரு சக்கர வாகனங்கள் இரவு நேரங்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே இரு சக்கர வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடு உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.
செப்டம்பர் 30-ம் தேதி வரை இந்த கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும். இரவு நேரங்களில் இரு சக்கர வாகனங்களுக்கு மலைப்பாதையில் பயணிக்க அனுமதி கிடையாது. பக்தர்கள் அனைவரும் இந்த மாற்றத்தை கவனத்தில் கொண்டு, தேவஸ்தானத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
செய்திகளை எக்ஸ் தளத்தில் அறிந்துகொள்ள... https://x.com/dinathanthi