வாட்டி எடுத்த ‘வார்தா’ புயல்


வாட்டி எடுத்த ‘வார்தா’ புயல்
x
தினத்தந்தி 13 Dec 2016 9:30 PM GMT (Updated: 2016-12-13T19:27:45+05:30)

நேற்று முன்தினம் சென்னைக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே 40 கி.மீ. அகலத்தில் தன் கோரக்கரங்களை விரித்து 120 கி.மீ. வேகத்தில் தாண்டவமாடிய ‘வார்தா’ புயல், ஒட்டுமொத்த சென்னை நகரையே அப்படியே புரட்டிப்போட்டுவிட்டது.

நேற்று முன்தினம் சென்னைக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே 40 கி.மீ. அகலத்தில் தன் கோரக்கரங்களை விரித்து 120 கி.மீ. வேகத்தில் தாண்டவமாடிய ‘வார்தா’ புயல், ஒட்டுமொத்த சென்னை நகரையே அப்படியே புரட்டிப்போட்டுவிட்டது. உருதுமொழியில் ‘வார்தா’ என்றால், ‘சிவப்பு ரோஜா’ என்று பெயர். இந்த பெயரை பாகிஸ்தான் தான் சூட்டியது. அழகாக இருக்க வேண்டிய இந்த ‘சிவப்பு ரோஜா’, ஒரு நச்சுப்பூவுக்கும் மேலாக பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. பொதுவாகவே, சென்னை நகரில் பருவமழை தவறும்போது, சென்னை நகர மக்கள் ஏதாவது புயல்வராதா?, மழையை கொண்டுவராதா? என்று ஆசைப்படுவது வழக்கம். சிலபல நேரங்களில் புயலாக தோன்றினாலும், சென்னை நகரை நெருங்கும்போது, குறைந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக மாறி மழையை தந்திருக்கிறது.

கடந்த 50 ஆண்டுகளில் கடலூருக்கும், நெல்லூருக்கும் இடையே இப்படி 17 புயல்கள் கரையை கடந்திருக்கிறது. கடைசியாக இதுபோன்று சென்னையை நேரடியாக தாக்கிய புயலால் ஏற்பட்ட பெரும்பாதிப்பு எப்போதென்றால், 1994–ம் ஆண்டு அக்டோபர் 31–ந் தேதி இதுபோல தாக்கிய ஒரு புயல்தான். அப்போது வீசிய அந்தபுயலின் வேகம் 65 கி.மீட்டர். 15 உயிர்களை பலி வாங்கியது. 1,500 மரங்கள் சாய்ந்திருந்தது. எப்போதும் இல்லாத பாதிப்பாக ‘வார்தா’ புயல் சென்னையை ஒரு உலுக்கு உலுக்கிவிட்டது. எந்தத்தெருவுக்கு சென்றாலும், மரங்கள் வேரோடு சாய்ந்து கிடக்கின்றன. 3,400 மின்கம்பங்கள் வளைந்து கிடக்கின்றன. மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டதால் சென்னை நகர மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள். ஏற்கனவே மற்ற நகரங்களை ஒப்பிட்டுப்பார்க்கும்போது, சென்னை நகரில் மரங்களின் அடர்த்தி மிகவும் குறைவு. ஆனால், இப்போது ‘வார்தா’ புயலின் பாதிப்பால் இருக்கும் கொஞ்சம் நஞ்சம் மரங்களில் பெரும்பகுதி சாய்ந்திருக்கிறது. நிழற்சாலையே இல்லாத நகரமாகிவிட்டது சென்னை. இனி மரக்கன்றுகள் நடப்பட்டு வளர்த்தாலும் பல ஆண்டுகளாகும்.

சென்னை மெரினா கடற்கரையில், சைதை துரைசாமி மேயராக இருந்தபோது தீட்டிய ஒரு திட்டத்தின் அடிப்படையில், நன்றாக வளர்ந்த 213 மரங்கள் கொண்டுவரப்பட்டு, மிக ஆழமாக குழித்தோண்டப்பட்டு நடப்பட்டன. இந்த புயலில் அந்த மரங்கள் மட்டும் அப்படியே இருக்கின்றன. எனவே, அடுத்தாற்போல சென்னை நகரில் மரக்கன்றுகளை நடும்போது, இதுபோல வளர்ந்த மரக்கன்றுகளை ஆழமாக குழித்தோண்டி நடும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். இவ்வளவு மரங்களின் பாதிப்பு நிச்சயமாக பசுமைக்கும், சுற்றுசூழலுக்கும் பெரிய பாதிப்பாகும். இவ்வளவு ஆயிரக்கணக்கான மரங்களிலும் கூடுகட்டி வாழ்ந்த பறவைகளின் நிலையை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. இதுபோல, மின்இணைப்பை சரிசெய்யவும் இவ்வளவு காலதாமதமாகாமல் உடனடியாக மின்சப்ளையை சீர்செய்ய என்னென்ன திட்டங்களை எதிர்காலத்தில் மேற்கொள்ளலாம்? என்று ஒருவிரிவான திட்டம் வகுக்கப்பட வேண்டும். பூமிக்கு அடியில் கேபிள் பதித்தால் இதுபோன்ற பாதிப்பு இருக்காது என்கிறார்கள். எனவே, தமிழ்நாடு முழுவதும் அந்த முயற்சியையும் மேற்கொள்வதுபற்றி அரசு தீவிரமாக ஆராயவேண்டும்.

பொதுவாக, சமீப ஆண்டுகளாக டிசம்பர் மாதந்தோறும் பெரும் மழை அல்லது புயல் ஏற்படுகிறது. எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நவம்பர் மாதத்திலேயே தொடங்கவேண்டும். இந்த ‘வார்தா’ புயல் பாதிப்பின்போதும், அனைத்து கடைகளும் மூடப்பட்ட நிலையில், மக்களுக்கு இலவசமாக உணவளிக்கும் அன்னபூரணியாக ‘அம்மா உணவகங்கள்’ திகழ்ந்தன. யார் வந்தாலும் பசியாற காசு வாங்காமல் சோறுபோட்ட ‘அம்மா உணவகம்’ நிச்சயமாக பாராட்டுக்குரியது. இயற்கை பேரழிவு வரும்போது, அதன் பாதிப்புக்கு யாரும் குறை சொல்ல முடியாது என்றாலும், நிவாரண பணிகளுக்கு இன்னும் வேகமான சீரமைப்புகள் ஏற்படும் வகையில், பேரிடர் மேலாண்மையில் அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

Next Story