லாபமா?, நஷ்டமா?


லாபமா?, நஷ்டமா?
x
தினத்தந்தி 14 Dec 2016 9:30 PM GMT (Updated: 2016-12-14T19:38:03+05:30)

பொதுவாக எந்தவொரு தொழில், திட்டங்கள் என்றாலும் சரி, அதைதொடங்கும் முன்பே, இதனால் லாபம் வருமா?, நஷ்டம் வருமா? என்று பார்த்துத்தான் தொடங்குவார்கள்.

பொதுவாக எந்தவொரு தொழில், திட்டங்கள் என்றாலும் சரி, அதைதொடங்கும் முன்பே, இதனால் லாபம் வருமா?, நஷ்டம் வருமா? என்று பார்த்துத்தான் தொடங்குவார்கள். சிலநேரங்களில், எதிர்பார்த்தது ஒன்று, நடந்தது வேறொன்று என்றநிலை இருக்கும். அதுபோன்று, கடந்த மாதம் 8–ந்தேதி பிரதமர் நரேந்திரமோடி திடீரென ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். இந்த நோட்டுகளின் மதிப்பு மொத்த பணப்புழக்கத்தில் 86 சதவீதம் என்று அப்போது அறிவிக்கப்பட்டது. இதனால் லாபமா?, நஷ்டமா? என்பது அதன் விளைவுகளை கணக்கிட்டபிறகுதான் தெரியும். நாட்டிலே புழங்கும் கருப்புபணம், கள்ளநோட்டு, தீவிரவாதிகள் கையிலிருக்கும் ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை ஒழிப்பதற்காகவே இந்தத்துல்லிய தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அப்போது அறிவிக்கப்பட்டது.

இந்தவகையில் பார்த்தால் நிச்சயமாக இது வரவேற்கத்தக்கதாகும். 15 லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூபாய், இந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்தநிலையில், இந்த நோட்டுகளை கையில் வைத்திருப்பவர்கள் இந்த மாதம் 30–ந்தேதிக்குள் வங்கிகளில் டெபாசிட் செய்துக்கொள்ளலாம். ரூ.2½ லட்சம்வரை டெபாசிட் செய்தால் கேட்கமாட்டார்கள். அதற்குமேல் டெபாசிட் செய்தால் வருமானவரிக்கு கணக்கு சொல்லவேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. எப்படியும் குறைந்தது ரூ.3 லட்சம் கோடி கருப்புபணமாவது வங்கிகளுக்கு வராமல் தேங்கிவிடும். ரிசர்வ் வங்கி அந்தப்பணத்தை அச்சடித்து மத்தியஅரசாங்கத்தில், வரியில்லா வருவாய்க்கணக்கில் சேர்த்துவிடலாம் என்பதுதான் திட்டமாக இருந்தது. ஆனால், கடந்த 10–ந்தேதி நிலவரப்படி, ரூ.12.44 லட்சம் கோடி வங்கியில் டெபாசிட்டாக வந்து சேர்ந்துவிட்டது. இது செல்லாது என்று அறிவிக்கப்பட்ட தொகையில் 80 சதவீதமாகும். இன்னும் 20 நாட்களில் எவ்வளவுதொகை வரப்போகிறது என்று தெரியவில்லை. எப்படி கூட்டி கழித்துப்பார்த்தாலும், ரூ.3 லட்சம் கோடி நிச்சயமாக கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. அப்படியென்றால், கருப்புபணம் எவ்வளவு பதுக்கிவைக்கப்பட்டிருந்தது?, கள்ளப்பண புழக்கம் எவ்வளவு இருந்தது? என்பதை கண்டுபிடித்துவிடலாம். ஆனால், ரூ.2½ லட்சத்துக்குமேல் டெபாசிட் செய்தவர்களுக்கு வருமானவரி விதிக்கப்போகும் அபராததொகை ஒரு கணிசமான வருமானத்தை மத்திய அரசாங்கத்திற்கு ஈட்டித்தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரெயில் டிக்கெட், பெட்ரோல்–டீசல் வாங்குவதற்கு 500 ரூபாய் பயன்படுத்துவது முடிவடைந்துவிட்ட நிலையில், மருந்து வாங்குவதற்கான அனுமதியும் இன்றோடு முடிவடைகிறது. எனவே, இருக்கும் மிச்சமீதியும் இனி வங்கிக்கு வந்துவிடும். இந்தநிலையில், மக்கள் கையிலிருந்து செலவழிக்க போதியளவு பணம் இல்லாததால், அனைத்துப்பொருட்கள் வாங்குவதற்கும், செலவழிக்க இயலாதநிலையில் எல்லாப்பொருட்களின் தேவைகளும் மிகவும் குறைந்துவிட்டது. இதனால் விவசாயிகளுக்கும், சிறுவியாபாரிகளுக்கும் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சில்லரைப்பொருட்களின் பணவீக்கம் குறைந்துள்ளது. கார்கள், இருசக்கரவாகனங்களின் விற்பனைகூட வெகுவாக குறைந்துவிட்டது. தொழில்களுக்கும், பொதுமக்களுக்கும், வங்கிகள் கொடுத்துவந்த கடன் தொகைகளும் குறைந்துவிட்டது. ரியல் எஸ்டேட் தொழிலில் வீழ்ச்சி, ஏராளமான தொழிலாளர்களுக்கு வேலைஇழப்பு என்று பல குறைபாடுகள் கூறப்படுகின்றன. இந்தநிலையில், நாட்டின் வளர்ச்சிவிகிதமும் 7 சதவீதமாக குறைந்துவிடும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி கணித்துள்ளது. ஆனால், இந்த ரூபாய்நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதின் பலன் இன்னும் சிலமாதங்களில் தெரியும், நாடு எல்லாவகையிலும், வளர்ச்சியிலும் முன்னேற்றத்தையும் காணும். மக்கள்மீது விதிக்கப்படும் நேரடி மற்றும் மறைமுகவரி விகிதம் குறைப்பதற்கான வாய்ப்பிருக்கிறது என்று நிதிமந்திரி அருண்ஜெட்லி அடித்துச்சொல்கிறார். மொத்தத்தில், இந்த ரூபாய்நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது, லாபமா?, நஷ்டமா? என்பதை காலம்தான் கணித்துச்சொல்லும்.

Next Story