மத்திய அரசாங்கம் உதவவேண்டும்


மத்திய அரசாங்கம் உதவவேண்டும்
x
தினத்தந்தி 15 Dec 2016 9:30 PM GMT (Updated: 15 Dec 2016 2:25 PM GMT)

கடந்த 12–ந் தேதி மரக்காணத்துக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே 130 முதல் 140 கி.மீட்டர் வேகம்வரை வீசிய ‘வார்தா’ புயல், சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை அப்படியே புரட்டிப்போட்டுவிட்டது.

டந்த 12–ந் தேதி மரக்காணத்துக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே 130 முதல் 140 கி.மீட்டர் வேகம்வரை வீசிய ‘வார்தா’ புயல், சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை அப்படியே புரட்டிப்போட்டுவிட்டது. மக்கள் இன்னும் இயல்பு வாழ்க்கைக்கு வரவில்லை. இன்னும் எத்தனை நாட்கள் ஆகுமென்றும் தெரியவில்லை. பெரும்பாலான பகுதிகளில் மின்சார சப்ளை இல்லாததால், தண்ணீருக்கு மக்கள் அல்லாடிக்கொண்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான மரங்கள் அதிலும், நன்றாக வளர்ந்த பெரிய மரங்கள் சாய்ந்து கிடப்பதால், போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இப்போது 5 நாட்கள் ஆவதால், சாய்ந்து கிடந்த மரங்களின் இலைகளிலிருந்து துர்நாற்றம் வீசத்தொடங்கிவிட்டது. உண்மையான பாதிப்பு எவ்வளவு? என்று யாராலும் உறுதியாக சொல்லமுடியவில்லை. இயற்கையான காடுகளால் சூழப்பட்ட வண்டலூர் உயிரியல் பூங்காவில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன. இதுபோல, கிண்டி சிறுவர் பூங்காவிலும் ஏராளமான மரங்கள் சரிந்து கிடக்கிறது. ‘‘சென்னை நகரின் பொலிவே போய்விட்டது’’.

தமிழக அரசு இந்த புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவித்தொகை மற்றும் உள்கட்டமைப்பு சீரமைப்பு பணிக்காக ரூ.500 கோடி ஒதுக்கியுள்ளது. இந்த தொகையில், ரூ.350 கோடி தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கும், ரூ.75 கோடி சென்னை மாநகராட்சிக்கும், ரூ.25 கோடி நெடுஞ்சாலைத்துறைக்கும் என்பதுபோல, பல இனங்களுக்கு பிரித்து ஒதுக்கப்பட்டுள்ளது. புயலால் ஏற்பட்டிருக்கும் பேரழிவுக்கு நிச்சயமாக இந்த தொகை போதாது. தமிழக அரசு ஏற்கனவே நிதிப்பாற்றாக்குறையால் தத்தளித்துக்கொண்டிருக்கும்போது, அனைத்து அழிவுகளையும் சீர்செய்ய வேண்டுமென்றால், இன்னும் பல ஆயிரம்கோடி ரூபாய்க்குமேல் நிச்சயமாக தேவைப்படும். இதையொட்டி, முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். சேதங்களை நேரில் ஆய்வு செய்ய மத்திய குழுவை அவசரமாக மத்திய அரசாங்கம் அனுப்பவேண்டும். மாநில பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து எல்லா சேதங்களையும் சரிசெய்வதற்கான செலவுகளை செய்யமுடியவில்லை. நிவாரணத்துக்காகவும், மறுவாழ்வுக்காகவும், உடனடி சீர்செய்யும் பணிகளுக்காகவும் தேசிய பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து தமிழக அரசுக்கு உடனடியாக ரூ.1,000 கோடி ஒதுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

‘தமிழனுக்கு ஒன்று, தமிழ்நாட்டுக்கு ஒன்று என்றால், இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே’ என்ற நெறிமுறைப்படி, தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரேகுரலில் நிற்பார்கள் என்பதை பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் நிரூபித்துவிட்டார்கள். டெல்லி மேல்–சபையில் பேசிய முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், நிதி உதவிகேட்டு தமிழக அரசு விடுத்துள்ள வேண்டுகோளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இதை முதல் வேலையாக செய்யவேண்டும் என்று கூறியிருக்கிறார். இதுபோல, இந்திய கம்யூனிஸ்டு கட்சித்தலைவர் டி.ராஜா, தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா என எல்லோரும் தமிழக அரசின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், நிபுணர் குழுவை உடனடியாக அனுப்பவேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர், ‘பிரதமர் அலுவலகத்துக்கு முதல்–அமைச்சரின் கடிதம் வந்திருக்கிறது. ஆனால், என்னென்ன வகையில் எவ்வளவு சேதம்? என்ற விளக்க மனுவுக்காக காத்திருக்கிறோம்’ என்றார். தமிழக அரசு உடனடியாக எந்தெந்த தலைப்பில், எவ்வளவு சேதம்? என்ற மனுவை அனுப்பவேண்டும். மத்திய நிதி மந்திரி அருண்ஜெட்லி இந்த அசாதாரண சூழ்நிலையை சீர்செய்யும் வகையில், தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியிருக்கிறார். மத்திய நிபுணர்குழு, பாதிப்பு ஏற்பட்ட ஓரிரு தினங்களுக்குள் வந்தால்தான் முழுமையான சேதத்தை நேரில் பார்க்கமுடியும். தமிழக அரசின் பல்வேறு துறைகள் ஓரளவுக்கு நடவடிக்கை எடுத்தபிறகு வந்தால், உண்மையான பாதிப்பு தெரியாது. எனவே, நிர்வாக ரீதியிலான நடைமுறைகள் ஒருபக்கம் நடந்தாலும், நிபுணர்குழு உடனடியாக இந்த 3 மாவட்டங்களில் விரிவாக பார்வையிட வேண்டும். மத்திய அரசாங்கமும், மாநில அரசு கேட்கும் தொகையை குறைக்காமல் முழுமையாக தரவேண்டும்.

Next Story