மரக்கன்றுகள் நடும் மாபெரும் பணி


மரக்கன்றுகள் நடும் மாபெரும் பணி
x
தினத்தந்தி 16 Dec 2016 9:30 PM GMT (Updated: 16 Dec 2016 1:36 PM GMT)

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் 110–வது விதியின்கீழ் ஒரு அறிக்கை தாக்கல் செய்ய எழுந்தால், எல்லோருடைய கவனமும் மிகஉன்னிப்பாக இருக்கும்.

றைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் 110–வது விதியின்கீழ் ஒரு அறிக்கை தாக்கல் செய்ய எழுந்தால், எல்லோருடைய கவனமும் மிகஉன்னிப்பாக இருக்கும். ஏனெனில், விதி 110–ன்கீழ் அவர் அறிவிப்பை வெளியிட்டால், நிச்சயமாக மின்னல் வேகத்தில் செயல்படுத்தப்படும். அந்தவகையில், கடைசியாக அவர் கலந்து கொண்ட சட்டசபை கூட்டத்தில் விதி 110–ன்கீழ் 29 அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் ஒரு அறிவிப்பு, தற்போது சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்திச்சென்ற ‘வார்தா’ புயலின் பாதிப்பை சீர்செய்ய நிச்சயமாக உதவும். அந்த அறிவிப்பில் அவர், ஊரகப்பகுதிகளை பசுமை மயமாக்க ஊரகச்சாலைகளின் இருமருங்கிலும் பழமரங்கள், கால்நடைத்தீவன மரங்கள் மற்றும் வருவாய் அளிக்கும் மரங்கள் நடப்படும். இந்த ஆண்டில் கிராம ஊராட்சி சாலைகள், ஊராட்சி ஒன்றியச்சாலைகள் மற்றும் பிரதம மந்திரி கிராம திட்ட சாலைகளின் இருமருங்கிலும் 10,000 கிலோ மீட்டர் நீளத்திற்கு ரூ.195 கோடி மதிப்பீட்டில் 20 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படும். சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாத்திடவும், ஊரகப்பகுதிகளை பசுமை மயமாக்கவும், வனத்துறையினருடன் ஒருங்கிணைந்து 68 லட்சம் பழமரக்கன்றுகள் மற்றும் கட்டிடப்பணிகளுக்கு, பயன்படும் மரக்கன்றுகள், தேசிய ஊரக வேலை உறுதிதிட்டத்தின்கீழ் ஊராட்சி நிலங்கள், அரசு நிலங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற பொருத்தமான இடங்களில் ரூ.555 கோடி மதிப்பீட்டில் இந்த ஆண்டு நடப்பட்டு பராமரிக்கப்படும் என்பதாகும்.

ஊரகப்பகுதிகளுக்காக அவர் வெளியிட்ட இந்த அறிவிப்பு, சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நிறைவேற்றப்படவேண்டிய அவசர அவசியம் வந்துவிட்டது. ஏற்கனவே, இந்த ஆண்டு மாபெரும் மரம் நடவு திட்டத்தின்கீழ் ரூ.61.68 கோடி செலவில், 68 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான திட்டம் தீட்டப்பட்டிருந்தது. இந்தஆண்டு ‘வார்தா’ புயலினால் லட்சக்கணக்கான மரங்களை இழந்துவிட்ட இந்த 3 மாவட்டங்களிலும் இந்த திட்டத்தின் பெரும்பகுதியை செயல்படுத்தவேண்டும். சென்னை நகரில், ஏற்கனவே இருக்கும் மரங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு. இப்போது கொஞ்சம்நஞ்சம் இருந்த மரங்களும் இந்த புயலினால் அறவே சாய்ந்துவிட்டநிலையில், சுற்றுச்சூழலும், பசுமைநிலையும் பெரும் பாதிப்புக்குள்ளாகும். இப்போதே மரக்கன்றுகளை நடத்தொடங்கி, அதை வேலியிட்டு பாதுகாத்து, ஒழுங்காக தண்ணீர்விட்டு, உரம் போட்டு வளர்த்தாலும், மரங்கள் முழுமையாக வளர குறைந்தது 5 ஆண்டுகளாகும். தமிழ்நாடு முழுவதுமே மரங்களின் அடர்த்தி மிகக்குறைவாக இருக்கிறது. இந்த புயல் தந்த ஒருபாடமாக தமிழ்நாடு முழுவதிலும் மரக்கன்றுகள் நடுவதை ஒரு தலையாய பணியாக, முக்கியமான பணியாக, முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தவேண்டிய பணியாக, முதல்கடமையாக தமிழக அரசு எடுத்து செயல்படுத்தவேண்டும். ஆண்டுதோறும் அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதாவுக்கு பிறந்தநாள் வரும்போது, அந்த எண்ணிக்கையிலான லட்சக்கணக்கான மரக்கன்றுகள் வனத்துறையினரால் நடப்படுவது வழக்கம். நடப்பாண்டில் 68 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. அடுத்த ஆண்டு 69 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு நிச்சயமாக அறிவிப்பு வெளியாகும். இப்போதுள்ள சூழ்நிலையில், 69 லட்சம் மரக்கன்றுகள் என்பதை, 6 கோடியே 90 லட்சம் மரக்கன்றுகள் தமிழ்நாடு முழுவதும் நடுவதற்காக ஒரு மாபெரும் திட்டத்தைத்தீட்டி, அவர் பிறந்தநாள் அறிவிப்பாக வெளியிடவேண்டும். மரக்கன்றுகளை நடுவது முக்கியமல்ல, நட்ட மரங்கள் அனைத்தும் மரமாக வளரும்வகையில் பராமரிக்கவும் செய்யவேண்டும். அப்போதுதான் இந்த முயற்சி முழுமைபெறும்.

Next Story