மக்களுக்கு பயனில்லாமல் முடிந்த பாராளுமன்ற கூட்டத்தொடர்


மக்களுக்கு  பயனில்லாமல்  முடிந்த பாராளுமன்ற  கூட்டத்தொடர்
x
தினத்தந்தி 18 Dec 2016 9:04 PM GMT (Updated: 18 Dec 2016 9:03 PM GMT)

ஒவ்வொரு முறையும் பாராளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும்போது, ஒட்டுமொத்த நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கும். நமது எம்.பி. நமக்காக என்ன செய்யப்போகிறார்?, இந்த தொகுதிக்காக, இந்த மாநிலத்தின் நலனுக்காக, இந்த நாட்டின் நன்மைக்காக எப்படி வாதாடி,

வ்வொரு முறையும் பாராளுமன்ற கூட்டத்தொடர் நடக்கும்போது, ஒட்டுமொத்த நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருக்கும். நமது எம்.பி. நமக்காக என்ன செய்யப்போகிறார்?, இந்த தொகுதிக்காக, இந்த மாநிலத்தின் நலனுக்காக, இந்த நாட்டின் நன்மைக்காக எப்படி வாதாடி, போராடி ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளும் நன்மைகள் பெற்றுத்தருவார்கள்? என்று கூட்டத்தொடர் நடக்கும் ஒவ்வொரு நாளும் மக்கள் பாராளுமன்ற அலுவலை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். பாராளுமன்றம் என்பது ஜனநாயகத்தின் புனிதகோவில் என்பது போன்றதால், ‘பிரதமர் நரேந்திரமோடி முதல்நாள் பாராளுமன்றத்தில் நுழையும்போது, மண்டியிட்டு தன்நெற்றி தரையில் தொடுமளவில் வணங்கி உள்ளே சென்றார்’. பண்டித ஜவஹர்லால் நேரு உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட நேரத்தில்கூட, பாராளுமன்றத்திற்கு மதிப்பு கொடுக்கவேண்டும் என்ற நோக்கத்தோடு மிகவும் சிரமப்பட்டுதான் எழுந்துநின்று பேசினார். இந்தியாவின் ஜனநாயகத்தில், எல்லோரும் போற்றிவணங்கும் பாராளுமன்றத்தில் சமீப சில ஆண்டுகளாக மக்களின் நலன் பின்னே தள்ளப்பட்டு, ஆளுங்கட்சிகளுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையேயுள்ள அரசியல் மோதல்கள் தீர்த்துக்கொள்ளும் ஒரு போர்க்களமாக மாறிவிட்டது. அதிலும், கடந்த நவம்பர் மாதம் 16–ந்தேதி முதல் இந்தமாதம் 16–ந்தேதிவரை முடிந்த குளிர்கால கூட்டத்தொடரில், பாராளுமன்றத்தின் இரு அவைகளும் நாள்தோறும் கூச்சல், குழப்பம், தர்ணா, கோஷங்கள் எழுப்புவது என்றவகையில், கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகக்குறைந்த அளவிலான அலுவல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ‘ரூபாய்நோட்டு செல்லாது’ என்று அறிவிக்கப்பட்ட விவகாரம்தான், இவ்வளவு அமளிக்கும் மூலகாரணமாக விளங்கியது.

பாராளுமன்றத்தில் இதுகுறித்து விவாதம் வேண்டும் என்றவகையிலும், மேல்–சபையில் இதுகுறித்த விவாதத்தின்போது பிரதமர் இருந்து பதிலளிக்கவேண்டும் என்றவகையிலும் பெரும் தர்ணா போராட்டங்கள் நடந்தன. இதுமட்டுமல்லாமல், மேலும் பலகோரிக்கைகளுக்காக எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடாது என்றவகையில் பிடிவாதமாக இருந்தது. இதனால் மொத்தத்தில், ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட பல மசோதாக்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்ட 8 மசோதாக்களில், 2 மசோதாக்கள் அவசர அவசரமாக ஆழமான விவாதமில்லாமல் நிறைவேற்றப்பட்டது. பாராளுமன்றத்தில் 96 மணிநேரமும், மேல்–சபையில் 86 மணிநேரமும் மக்களுக்கான அலுவலில் ஈடுபடாமல் வீணாய் போய்விட்டன. பாராளுமன்றம் நடத்துவதற்காக ஒருநாளைக்கு ரூ.2 கோடி செலவாகிறது. அந்தவகையில், மக்களின் வரிப்பணமும் வீணாகிவிட்டது.

இந்தமுறை பாராளுமன்றத்தில் நடந்த அமளியைக்கண்டு, ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி மிகவும் வேதனைப்பட்டு, ‘கடவுளுக்கு பொதுவாகச் சொல்கிறேன், உங்களது பணியினைச் செய்யுங்கள். பாராளுமன்ற நெறிமுறையில் அமளி என்பது முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். மக்கள், பாராளுமன்ற உறுப்பினர்களை தங்களுக்காக பேசுவதற்காகத்தான் தேர்ந்தெடுத்து அனுப்புகிறார்களேதவிர, இது போன்ற தர்ணா போராட்டம் செய்து இடையூறுசெய்வதற்கு அல்ல. போராட்டங்களை நடத்துவதற்கு நீங்கள் வேறுஇடத்தை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்’ என்று வேதனையோடு கூறினார். பா.ஜ.க.வின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, ‘தான் மிகவும் வேதனை அடைந்துள்ளதாகவும், இதற்காக ராஜினாமா செய்து விடலாம் போல தோன்றுகிறது’ என்றும் கூறியிருக்கிறார். டெல்லி மேல்–சபையின் தலைவர் ஹமீது அன்சாரியும் மிகவும் கவலைதோய்ந்து சில கருத்துகளை வெளியிட்டுள்ளார். இந்த அமளிகளால் மக்களுக்கான எந்த பணிகளும் நிறைவேறாமல் போய்விட்டது. இந்த கூட்டத்தொடர் கட்சிவேறுபாடில்லாமல், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒருபாடமாக அமையவேண்டும். ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு செவிகொடுத்து விவாதங்களை நடத்துவதற்கு ஒத்துழைக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் இதுபோல் நாள்தோறும் தர்ணா, அமளியில் ஈடுபடாமல், தங்கள் கோரிக்கைகளை அவையில் எழுப்பி வலியுறுத்தலாம். ‘நடந்தது நடந்தவையாகவே இருக்கட்டும்’. எதிர்காலத்தில் அரசியல் மாறுபாடுகளை அவைக்கு வெளியே போராட்டங்களாக, கண்டனக் கூட்டங்களாக, அறிக்கைப் போர்களாக வைத்துக் கொள்ளலாம். அவையில் ஒட்டுமொத்த மக்களின் நன்மைகளை ஒன்றையே குறிக்கோளாக வைத்து, அந்தவகையில் விவாதங்கள் நடக்கட்டும். ஜனநாயக மலர்கள் பூத்துக் குலுங்கட்டும்.


Next Story