நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள்


நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள்
x
தினத்தந்தி 19 Dec 2016 8:30 PM GMT (Updated: 2016-12-19T20:17:31+05:30)

சாலைபோக்குவரத்தில், வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது போக்குவரத்து விதிமீறல் குற்ற நடவடிக்கைகளுக்காக என்னதான் நடவடிக்கைகள் எடுத்தாலும், விபத்துகளின் எண்ணிக்கை மட்டும் ஆண்டு தோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நாடு முழுவதும் கடந்த 2015–ம் ஆண்டு மட்டும் 5

சாலைபோக்குவரத்தில், வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீது போக்குவரத்து விதிமீறல் குற்ற நடவடிக்கைகளுக்காக என்னதான் நடவடிக்கைகள் எடுத்தாலும், விபத்துகளின் எண்ணிக்கை மட்டும் ஆண்டு தோறும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நாடு முழுவதும் கடந்த 2015–ம் ஆண்டு மட்டும் 5 லட்சத்து ஓராயிரம் சாலை விபத்துகள் நடந்துள்ளன. இந்த கணக்குப்படி பார்த்தால், ஒவ்வொரு நாளும் 1,374 விபத்துகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆண்டு முழுவதும் நடந்த விபத்துகளில், ஒரு லட்சத்து 46 ஆயிரம் பேர்கள் உயிரிழந்துள்ளனர். அதிக விபத்துகள் நடக்கும் மாநிலங்களில் தமிழ்நாடுதான் முன்னணியில் இருக்கிறது என்பது மிகவும் வேதனைக்குரிய ஒன்றாகும். கடந்த ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் 67 ஆயிரத்து 250 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில், 15 ஆயிரத்து 190 பேர் உயிரிழந்துள்ளனர். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதுதான் பெரும்பான்மையான விபத்துகளையும், உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகிறது என்று எல்லோரும் சொல்லி வந்தார்கள். அதிலும் குறிப்பாக, தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகளில் நடக்கும் ஏராளமான விபத்துகளுக்கு குடிபோதைதான் காரணம். இந்த சாலைகளின் ஓரங்களில் எளிதில் மது கிடைப்பதால்தான், வாகனங்களை ஓட்டிக்கொண்டு போகிறவழியில் மதுஅருந்திவிடுகிறார்கள் என்பதுதான் பெரியகுறையாக கூறப்பட்டு வந்தது.

இந்த குறைபாடுகளையெல்லாம் போக்கும்வகையில், உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.எஸ்.தாக்குர், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் கொண்ட பெஞ்சு ஒரு அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது. நாட்டில் நடக்கும் சாலைவிபத்துகளுக்கு குடிபோதையில் வாகனம் ஓட்டுவதுதான் ஒரு முக்கியக்காரணமாக கூறிய நீதிபதிகள், உடனடியாக தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் வைக்க லைசென்சு கொடுப்பதற்கு மாநில, யூனியன்பிரதேச அரசுகளுக்கு தடை விதித்துள்ளது. 2017 மார்ச் 31–ந் தேதிக்குப்பிறகு இப்போது இருக்கும் நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகளுக்கு லைசென்சை புதுப்பிக்கக்கூடாது. ஊருக்கு வெளியேயுள்ள சாலைகள் மட்டுமல்ல, மாநகராட்சிகள், நகரங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து ஊர்களின் வழியாகச் செல்லும் இந்த நெடுஞ்சாலைகளிலும் மதுக்கடைகள் இருக்கக் கூடாது. சாலைகளில் மட்டுமல்லாமல், சாலைகளின் ஓரங்களிலிருந்து 500 மீட்டர் தூரத்துக்குள்ளும் எந்த மதுக்கடையும் இருக்கக் கூடாது. இதுமட்டுமல்லாமல், சாலையிலிருந்து பார்த்தால் எந்த மதுக்கடைகளும் கண்ணில் தெரியக் கூடாது. மதுவிற்பனை, விளம்பர பலகைகள் சாலை ஓரங்களிலிருந்து உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்ற தீர்ப்பை வழங்கியுள்ளனர். நிச்சயமாக இது மிகவும் பாராட்டுக்குரியதும், வரவேற்புற்குரியதுமான தீர்ப்பாகும்.

தமிழ்நாட்டை எடுத்துக் கொண்டால், மொத்தமுள்ள 6,200 கடைகளில், 2,000 கடைகள் இவ்வாறு சாலை ஓரங்களில்தான் இருக்கிறது. உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி, இந்த கடைகள் உடனடியாக அகற்றப்பட்டால், மொத்த மதுக்கடைகளின் எண்ணிக்கை 4,200 ஆகிவிடும். ஆக, மார்ச் மாதத்துக்குப்பிறகு இந்த 2 ஆயிரம் கடைகளும் இருக்காது. மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா, கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும்போது வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், ‘‘மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு, பூரண மதுவிலக்கு என்ற நிலை எய்தப்படும். முதலில் சில்லறை மதுபான கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படும். பின்னர் சில்லறை மதுபான கடைகளுடன் இணைந்த பார்கள் மூடப்படும். குடிப்பழக்கத்துக்கு உள்ளாகி உள்ளோரை மீட்பதற்கான மீட்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும். இவை அனைத்தும் செயல்படுத்தப்பட்டு, படிப்படியாக பூரணமதுவிலக்கு என்னும் லட்சியத்தை நாம் அடைவோம்’’ என்று கூறியுள்ளார். சொன்னதை செய்யும் வகையில் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தவுடன், ‘டாஸ்மாக்’ கடைகள் திறந்திருக்கும் நேரத்தை குறைத்தார். 500 கடைகளை மூடினார். பூரணமதுவிலக்கு என்னும் லட்சியத்தை அடையும்வகையில் உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி, இந்த 2 ஆயிரம் கடைகளை மூடுவதை ஒரு அரியவாய்ப்பாக பயன்படுத்தி மூடலாம். பூரண மதுவிலக்குக்கு இது நல்லதொடக்கமாக அமையட்டும்.

Next Story