பாரம்பரிய விதிமுறைகளை மாற்ற வேண்டாமே?


பாரம்பரிய விதிமுறைகளை மாற்ற  வேண்டாமே?
x
தினத்தந்தி 23 Dec 2016 8:30 PM GMT (Updated: 23 Dec 2016 1:18 PM GMT)

இந்து சமயம் என்பது இன்றைக்கு, நேற்றைக்கு தோன்றியதல்ல. என்றைக்கு இந்து சமயம் உருவானது என்பது இன்றளவும் யாராலும் அறியப்படவில்லை. படைத்தல், காத்தல், அழித்தலுக்கென்று தனித்தனியாக கடவுளை இந்து சமயத்தினர் வழிபட்டுக்கொண்டிருக்கின்றனர். இதுபோல, கல்வி, செல்வம்,

ந்து சமயம் என்பது இன்றைக்கு, நேற்றைக்கு தோன்றியதல்ல. என்றைக்கு இந்து சமயம் உருவானது என்பது இன்றளவும் யாராலும் அறியப்படவில்லை. படைத்தல், காத்தல், அழித்தலுக்கென்று தனித்தனியாக கடவுளை இந்து சமயத்தினர் வழிபட்டுக் கொண்டிருக்கின்றனர். இதுபோல, கல்வி, செல்வம், வீரத்துக்கெனவும் தனித்தனி கடவுளை வழிபடுகிறார்கள். இன்றைக்கும் கிராமப்புறங் களில் குலதெய்வ கோவிலோ, அம்மன் கோவிலோ, பெருமாள் கோவிலோ, சிவன் கோவிலோ இருந்தாலும், அந்த ஊர் எல்லையில் தன்னைக் காப்பதற்கென ஒரு காவல் தெய்வத்தை வழிபடுவது இந்து சமயம் தான். ஒவ்வொரு கோவிலுக்கும் என பண்டைய காலத்தில் இருந்தே வழிபாட்டு முறைகள், பாரம்பரிய முறைகள் வகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கோவிலுக்கும்,  ஒரு ஸ்தல வரலாறு உண்டு, ஸ்தல விருட்சம் உண்டு. பெரும்பாலான கோவில்களில் திருக்குளம் உண்டு. வழிபாட்டுக்கான மலர்களுக்காக தனி நந்தவனங்களும் உண்டு. இந்த கோவில்களில் இன்னென்ன முறைகளில்தான் வழிபடவேண்டும் என்ற முறைகளும், பல கோவில்களில் உடைக் கட்டுப்பாடும் இருக்கிறது.

சபரிமலையை எடுத்துக் கொண்டால், நீலநிறம், காவிநிறம், கருப்புநிற வேட்டியும், சட்டையும், துண்டும்தான் அணிய வேண்டும். திருச்செந்தூர் முருகன் கோவிலில், ஆண்கள் வேட்டியோ, முழுகால் சட்டையோ அணிந்து கொள்ளலாம். ஆனால், மேலே எந்த ஆடையும் அணியக்கூடாது என்று காலம் காலமாக இருக்கிறது. சுசீந்திரம் தாணுமாலையன் கோவிலுக்குள் ஆண்கள் மேலாடை அணியாமல்தான் செல்ல முடியும். இதுபோல, பெண்களுக்கும் இந்த உடைதான் அணிந்து கொண்டு வரவேண்டுமென்று காலம் காலமாக ஆகம விதிமுறைகள் வகுத்துக்கொண்ட நியதியாகும். இதுபோலத் தான், புகழ்பெற்ற திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் சில உடைக்கட்டுப்பாடுகள் காலம் காலமாக இருந்து வந்தது. பெண் பக்தர்கள் சேலை, பாவாடை– சட்டைதான்  அணிந்து வர வேண்டும். அதை மீறி வேறெந்த ஆடைகளும் அணிந்துவந்தால், அதற்குமேல் முண்டு என்று சொல்லப்படும் வேட்டியை கட்டிக்கொண்டுதான் வழிபடுவதற்கு வரவேண்டும் என்று முறை இருந்தது. இடையில் இந்த உடை கட்டுப்பாடுகளை நீக்கவேண்டும் என்று ரியாராஜி என்ற வக்கீல், கேரள ஐகோர்ட்டில் ஒருவழக்கு தொடர்ந்தபோது, ‘இதை பரிசீலியுங்கள்’ என்று கோவில் நிர்வாக அதிகாரிக்கு உத்தரவிட்டது. ஆனால், இவ்வாறு உடைக்கட்டுப்பாட்டை மாற்றப்பட வேண்டிய தேவையேயில்லை என்று கோவில் நிர்வாகக்குழு முடிவெடுத்தப் பிறகும், அந்த கோவில் நிர்வாக அதிகாரி, பெண்கள் சுடிதார் அணிந்து செல்லலாம் என்று உத்தரவை பிறப்பித்து,  அது பக்தர்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி விட்டது. தினமும் போராட்டங்கள், மறியல்கள் என்று எதிர்ப்புகள் வலுத்தது.

இந்த நிலையில், கேரள ஐகோர்ட்டு தெளிவான  உத்தரவை பிறப்பித்திருக்கிறது. சுடிதார், குர்தா அணிந்து வரும் பெண்கள், பத்மநாபசாமி கோவிலுக்குள் அனுமதிக்கப்பட வேண்டியதில்லை என்று உத்தரவிட்டுள்ளது. நிச்சயமாக இது வரவேற்கத்தகுந்த ஒருதீர்ப்புதான். ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டில் பழமையான கோவிலை ஆகம விதிமுறைகள் படிதான் புனரமைக்க வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில், நிபுணர்குழு அமைக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. பெண்களுக்கு ஆடைக்கட்டுப்பாடு என்பது அவசியமில்லை. நாகரிக உலகில் அவரவர் விருப்பத்திற்கேற்ப, வசதிக்கேற்ப எந்த வித உடைகளையும் அணிந்து கொள்ளலாம். ஆனால், கோவில்களுக்கு வரும்போது, அதற்கென சில நியதிகள், பாரம்பரியங்கள் இருக்கும்போது, அதுவும் காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும்போது, அதை மாற்றுவதற்கு எடுக்கும் முயற்சியில் அர்த்தமே இல்லை. வழிபாட்டுமுறைகள் என்பது ஆன்மிக சான்றோர்கள் வகுத்துக் கொடுத்ததாகும். ஒவ்வொரு ஆகமவிதி முறைக்கும், பாரம்பரிய முறைக்கும் நிச்சயமாக காரண காரியங்கள் உண்டு. அதை மாற்றுவதற்கு எந்த முயற்சியும் எடுக்கக் கூடாது. உலகில் கிறிஸ்தவ மதம் என்றாலும், இஸ்லாமிய மதம் என்றாலும் சரி, அவர்கள் வழிபாட்டு முறைகளில் எந்தவித மாற்றமும் செய்வதில்லை. அந்த நிலையில், அர்த்தமுள்ள இந்துமத கோவில்களில் மட்டும் பாரம்பரிய முறைகளை மாற்ற வேண்டும் என்பதை யாரும் எண்ணிக்கூட பார்க்கக் கூடாது.


Next Story