உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்தவேண்டும்


உள்ளாட்சி  தேர்தலை  உடனடியாக  நடத்தவேண்டும்
x
தினத்தந்தி 25 Dec 2016 9:30 PM GMT (Updated: 25 Dec 2016 6:37 PM GMT)

இந்தியா ஒரு ஜனநாயக நாடு. பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் ஆட்சி அமைத்து, மத்திய அரசாங்கத்தையும், மாநிலங்களில் சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற கட்சி மாநில அரசாங்கத்தையும் இயக்கிக்கொண்டிருக்கிறது.

ந்தியா ஒரு ஜனநாயக நாடு. பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றவர்கள் ஆட்சி அமைத்து, மத்திய அரசாங்கத்தையும், மாநிலங்களில் சட்டசபை தேர்தலில் வெற்றிபெற்ற கட்சி மாநில அரசாங்கத்தையும் இயக்கிக்கொண்டிருக்கிறது. இதுதவிர, பஞ்சாயத்து ராஜ் சட்டம் வந்தபிறகு, உள்ளாட்சி அமைப்புகள் சர்வாதிகாரம் படைத்தவர்களாக மாறிவிட்டன. மக்களின் அன்றாடவாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் அடிப்படை தேவையான வசதிகளை அளிக்கும் பொறுப்பு உள்ளாட்சி அமைப்புகளுக்குத்தான் இருக்கிறது. இப்போதெல்லாம் பல திட்டங்களுக்கான நிதி ஆதாரம் நேரடியாக உள்ளாட்சி அமைப்புகளுக்குத்தான் வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள், 12,524 கிராம ஊராட்சிகள் இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக இந்த உள்ளாட்சி அமைப்புகள் அனைத்திலும் இருந்து 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு லட்சத்து 31 ஆயிரத்து 794 மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். கடைசியாக இவர்களின் பதவிகாலம் அக்டோபர் 24–ந்தேதி முடிந்தது. அதற்கு முன்னதாக 17, 19 ஆகிய இருதேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடக்கும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் முடிவடைந்தநிலையில், தி.மு.க. சார்பில் இந்த தேர்தலுக்காக பழங்குடியினருக்கு இடஒதுக்கீடு அறிவிக்கப்படவில்லை. எனவே, தேர்தலை ரத்து செய்யவேண்டும் என்று மனுதாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி என்.கிருபாகரன், இந்த தேர்தல் தேதி பஞ்சாயத்து சட்டங்கள் அடிப்படையில் அறிவிக்கப்படவில்லை என்று கூறி, தேர்தலை ரத்துசெய்து, மீண்டும் டிசம்பர் 31–ந்தேதிக்குள் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். டிசம்பர் 31–ந்தேதி நெருங்குகிறது.

எனவே, இந்த காலகட்டத்துக்குள் மாநில தேர்தல் ஆணையம் தேதியை அறிவித்துவிடும் என்று பொதுமக்கள் எல்லாம் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்த நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு தொடர்பான சிலவழக்குகள் நீதிபதி என்.கிருபாகரன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, தமிழ்நாடு தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான மூத்தவக்கீல், குற்றப்பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கும் வகையில், சில நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. இதையொட்டி, அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் குற்றப்பின்னணி உள்ளவர்களை வேட்பாளர்களாக அறிவிக்கவேண்டாம் என்று ஒருகடிதம் எழுதியுள்ளோம். அரசியல்கட்சிகள் பதில் அளித்ததும், இதற்குரிய சில நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியதிருக்கிறது. ஆகவே, தேர்தலை நடத்துவதற்கு காலஅவகாசம் வேண்டும் என்று பட்டவர்த்தனமாக தெரிவித்துவிட்டார். உள்ளாட்சி தேர்தலை டிசம்பர் 31–ந்தேதிக்குள் நடத்தவில்லை என்றாலும் அதற்குரிய அறிவிக்கை வெளியிடுவதற்கான உடனடி எண்ணத்திலும் தேர்தல் ஆணையம் இல்லை. நிச்சயமாக இது தமிழக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

என்னதான் தனி அதிகாரிகள் நிர்வாகத்தில் உள்ளாட்சி அமைப்புகள் இருந்தாலும், மக்களை பொறுத்தமட்டில் சின்னசின்ன தேவைகளுக்கு தாங்கள் தேர்ந்தெடுத்த வார்டு உறுப்பினர்களைத்தான் நாடுவார்கள். சில திட்டங்களை நிறைவேற்ற பஞ்சாயத்து என்றாலும், நகரசபை என்றாலும், மாநகராட்சி என்றாலும் சரி, உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றினால்தான் நிதிஒதுக்கீடு எளிதாக இருக்கும். மேலும், உள்ளாட்சி அமைப்புகளை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, மக்களுக்காகவே பணியாற்றும்  பிரதிநிதிகள் நிர்வகித்தால்தான், பணிகள் சிறப்பாக இருக்கும் என்றவகையில், எவ்வளவு விரைவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்தமுடியுமோ?, அவ்வளவு விரைவில் நடத்துவதற்கான முடிவுகளை மாநில தேர்தல் ஆணையம் எடுக்கவேண்டும். தமிழக அரசும் இதுகுறித்த முடிவுகளை தாமதமின்றி எடுக்கவேண்டும் என்பதே பொதுவான கோரிக்கையாக இருக்கிறது.

Next Story