காசோலை மூலம் சம்பளம்


காசோலை மூலம் சம்பளம்
x
தினத்தந்தி 26 Dec 2016 8:30 PM GMT (Updated: 2016-12-26T23:02:28+05:30)

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த நவம்பர் மாதம் 8–ந் தேதி திடீரென ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தார். நாட்டின் மொத்த பணப்புழக்கத்தில் 86 சதவீதத் தொகை இப்படி திடீரென செல்லாது என்று அறிவிக்கப்பட்டது, யாரும் எதிர்பார்க்காத ஒன்றாகும். ஏற்கனவே நவம்பர் 27–ந் தேதி ‘மனதில் குரல்’ என்ற தலைப்பில் மாதந்தோறும் நரேந்திரமோடி,

பிரதமர் நரேந்திர மோடி, கடந்த நவம்பர் மாதம் 8–ந் தேதி திடீரென ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தார். நாட்டின் மொத்த பணப்புழக்கத்தில் 86 சதவீதத் தொகை இப்படி திடீரென செல்லாது என்று அறிவிக்கப்பட்டது, யாரும் எதிர்பார்க்காத ஒன்றாகும். ஏற்கனவே நவம்பர் 27–ந் தேதி ‘மனதில் குரல்’ என்ற தலைப்பில் மாதந்தோறும் நரேந்திரமோடி, பொதுமக்களிடம் உரையாற்றும் நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக ‘டிஜிட்டல் வங்கி’ முறைப்பற்றியே பெரிதும் பேசினார். உழைப்பாளி சகோதர, சகோதரிகளிடத்தில் நான் கூறவிரும்புவது, ‘வங்கிகளில் உங்களுக்கென ஒரு கணக்கு தொடங்கப்பட்டு, உங்கள் சம்பளத் தொகை வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் என்ற விதிமுறை பின்பற்றப்படுவதை இதன்மூலம் உறுதி செய்ய முடியும்’ என்று சூசகமாக ஏதோ ஒரு அறிவிப்பை நிறைவேற்றப் போவதை தெரிவித்திருந்தார். பிரதமரைப் பொறுத்தமட்டில், ரொக்கமில்லா பணபரிமாற்றம் இருந்தால்தான் கருப்பு பணம் ஒழியும், லஞ்ச ஊழல் ஒழியும் என்பதில் தீவிரமாக இருக்கிறார்.

இப்போது ரூ.18 ஆயிரத்துக்கு குறைவாக மாதசம்பளம் பெறுபவர்களுக்கு ‘காசோலை’ மூலமோ, மின்னணு பரிமாற்றம் மூலமோ அவர்களின் மாத சம்பளத்தை வழங்கும் வகையில் 1936–ம் ஆண்டு சம்பளம் வழங்குதல் சட்டத்தை திருத்துவதற்கு ஒரு அவசரசட்டம் பிறப்பிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சட்டத்திருத்தம் அனைத்து வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களுக்கும் பொருந்தும். இதுமட்டுமல்லாமல், ஊழியர்களின் சம்பள பணத்தை வங்கிக் கணக்கிலேயே நிறுவனங்கள் செலுத்திவிடும். இந்த சட்டதிருத்தத்தின்படி, தொழிலாளியிடம் எனக்கு காசோலை மூலமாகவோ, மின்னணு பரிமாற்றம் மூலமாகவோ சம்பளத்தை அனுப்பலாம் என்று ஒப்புதல் கடிதத்தை பெறவேண்டும் என்பது அவசியமில்லை. ரொக்கமில்லா பொருளாதாரத்தை நோக்கி நடைபோடும் வகையில், ரொக்கமில்லா பணபரிமாற்றத்துக்கு இந்த நடவடிக்கை வழிகாட்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால், நோக்கம் நல்ல நோக்கம், அதை நிறைவேற்றுவதற்கு இன்னும் கொஞ்சகாலம் காத்திருக்கலாம். அதற்கேற்ற முன்னேற்பாடுகளை செய்திருக்கலாம் என்பதுதான் எல்லோருடைய கருத்தாகவும் இருக்கிறது. ஏனெனில், கடந்த 2014–ம் ஆண்டு நிலவரப்படி, உலகவங்கி வெளியிட்டுள்ள அறிக்கைப்படி, இந்தியாவில் 53 சதவீதம்பேர்தான் வங்கிக்கணக்கு வைத்திருக்கிறார்கள். அதில், 15 சதவீதபேர்தான் தங்கள் வங்கிக் கணக்கில் பணம் போடவும், எடுக்கவும் பயன்படுத்துகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் இன்னும் எல்லா இடத்திலும் வங்கி சேவைகள் இல்லை. இன்னமும் வங்கிக்கணக்குப்பற்றி தெரியாத எவ்வளவோ ஏழைகள் இருக்கிறார்கள். அதிலும் ரூ.18 ஆயிரத்துக்கு குறைவாக சம்பளம் வாங்குபவர்கள் என்றால் எல்லோருமே எல்லா விவரங்களும் தெரிந்தவர்களாக இருக்க முடியாது. காசோலைகளை வாங்கி வங்கிக் கணக்கில் போட்டு, அதன்பிறகு வங்கியிலோ, ஏ.டி.எம்.மிலோ பணம் எடுக்கும் முறையெல்லாம் அவர்களுக்கு பழக்கமானபின் கொண்டுவந்திருந்தால் சிறப்பாக இருக்கும். கிராமங்களில், மலைப்பிரதேசங்களில் உள்ள சிறுநிறுவனங்களில் வேலைபார்ப்பவர்கள் வாரத்துக்கு ஒருநாள் அருகிலுள்ள நகருக்கு வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவார்கள். அத்தகைய தொழிலாளிகளுக்கு காசோலை கொடுத்தால் அவர்கள் எந்த வங்கிக்கு சென்று போடுவார்கள்?. அந்த காசோலை கிளீயரான பிறகுதான் அவர்களின் செலவுக்கு பணம் எடுக்கமுடியும் என்பதெல்லாம் நிச்சயமாக சிரமமான ஒன்றாகும். மேலும், இப்போது வங்கிகளில் பணம் எடுப்பதற்கு நிற்கும் வரிசை, இன்னும் சிலமாதங்கள் இருக்கும் என்கிறார்கள். அது போன்ற நிலையில், ரூ.18 ஆயிரத்துக்கு குறைவாக சம்பளம் வாங்குபவர்களும் வரிசையில் நிற்க வேண்டியநிலை ஏற்பட்டால் இன்னும் குழப்பமாகிவிடும். எனவே, எல்லா இடங்களிலும் வங்கிக்கிளைகளை தொடங்கி, எல்லா நாட்களிலும் வங்கிகள் இயங்கி, எல்லோருக்கும் வங்கிக்கணக்குகளை பயன்படுத்தும் முறைகளை பழக்கப்படுத்தும் நிலை முடிந்த பிறகுதான், இந்த காசோலை மூலம் சம்பளம் திட்டம் என்ற நல்லதிட்டம் வெற்றிகரமாக இயங்க முடியும்.


Next Story