பட்ஜெட்டில் நல்ல செய்தி


பட்ஜெட்டில் நல்ல செய்தி
x
தினத்தந்தி 29 Dec 2016 9:30 PM GMT (Updated: 2016-12-29T19:22:42+05:30)

இன்னும் சரியாக பட்ஜெட் தாக்கல் செய்ய ஒருமாதமே இருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திரமோடி பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகளை வெளியிடலாம்? என்பது குறித்து 13 பொருளாதார நிபுணர்கள் மற்றும் திட்டக்குழுவுக்குப்பதிலாக, அமைக்கப்பட்டுள்ள ‘நிதி அயோக்’ குழுவின் நிபுணர்களோடு கலந்து ஆலோசித்தார்.

ன்னும் சரியாக பட்ஜெட் தாக்கல் செய்ய ஒருமாதமே இருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திரமோடி பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகளை வெளியிடலாம்? என்பது குறித்து 13 பொருளாதார நிபுணர்கள் மற்றும் திட்டக்குழுவுக்குப்பதிலாக, அமைக்கப்பட்டுள்ள ‘நிதி அயோக்’ குழுவின் நிபுணர்களோடு கலந்து ஆலோசித்தார். இந்த கூட்டத்தில், சமீபத்தில் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் விவகாரங்கள் குறித்து நேரடியாக விவாதிக்கப்படாவிட்டாலும், அதன்விளைவுகளின் தாக்கம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

இதுமட்டுமல்லாமல், கம்பெனிவரி மற்றும் வருமானவரி முறைகளை எளிமைப்படுத்துவது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது. ஏற்கனவே இந்தக்கூட்டத்துக்கு 2நாட்களுக்கு முன்பு இந்திய வருவாய்த்துறை அதிகாரிகளிடம் உரையாற்றிய நிதிமந்திரி அருண்ஜெட்லி, வருமானவரி மற்றும் கம்பெனிவரி விகிதங்கள் குறையப்போவதை சூசகமாக சுட்டிக்காட்டினார். வரியை குறைத்தால்தான், நிறையபேரை வரிவளையத்துக்குள் கொண்டுவரமுடியும் என்பது அவரது திட்டவட்டமான எண்ணமாகும். பொருளாதாரதளத்தை பரவலாக்க நினைத்தால், நிச்சயமாக வரிவிகிதம் குறைக்கப்படவேண்டும். மற்ற நாடுகளோடு போட்டியிடும்வகையில், உற்பத்தியும், சேவையும் குறைந்த வரிவிகிதத்தில் வழங்கப்படவேண்டும். சர்வதேச அளவில், நமது வரிவிகிதங்கள் போட்டிமிகுந்ததாக இருக்கவேண்டும் என்பதை தெள்ளத்தெளிவாக சுட்டிக்காட்டிவிட்டார்.

மத்திய அரசாங்கத்தின் பட்ஜெட் மதிப்பீடு ரூ.20 லட்சம் கோடியாகும். இந்த ஆண்டு நமது வருவாய் ரூ.16 லட்சம் கோடி அளவிலிருக்கும். இதில், பாதித்தொகை வருமானவரி மூலமும், மீதித்தொகை மறைமுகவரி மூலமாகவும்தான் கிடைக்கிறது. இதில், குறைவு ஏற்பட்டால், நாம் அந்ததொகையை கடன் வாங்கித்தான் சமாளிக்கிறோம். நாட்டை நிர்வகிக்க, ஒவ்வொரு ஆண்டும் கடன் வாங்க வேண்டியநிலை இருக்கிறது என்றும் குறிப்பிட்டார். இந்தியாவில் 125 கோடிக்குமேல் மக்கள்தொகை போய்விட்டது. ஆனால், 3 கோடியே 65 லட்சம் பேர்தான் வருமானவரி கணக்கை தாக்கல் செய்கிறார்கள். ஒரு கோடியே 91 லட்சம் பேர்தான் வரிகட்டுகிறார்கள். இதில், 5 லட்சத்து 50 ஆயிரம் பேர்தான், ரூ.5 லட்சத்துக்குமேல் வருமானவரி கட்டுகிறார்கள். இந்த 5 லட்சத்து 50 ஆயிரம் பேர் கட்டும் வரியிலிருந்துதான் 57 சதவீத வருமானவரி கிடைக்கிறது. இன்னொரு வேடிக்கை என்னவென்றால், 24 லட்சத்து 40 ஆயிரம் பேர்தான் தங்கள் ஆண்டுவருமானம் ரூ.10 லட்சத்துக்குமேல் என்று வருமானவரி கணக்கில் தாக்கல்செய்துள்ளனர். 48 ஆயிரத்து 417 பேர்தான் தங்களுடைய ஆண்டு வருமானம் ரூ.1 கோடிக்குமேல் என்று தெரிவித்துள்ளனர். மத்திய நேரடிவரிகள் வாரியம் 67 லட்சத்து 54 ஆயிரம் பேர் வருமானவரி கணக்கு தாக்கல் செய்யவில்லை என்று கண்டறிந்துள்ளது.

இந்தநிலையில், இப்போது விதிக்கப்படும் வருமானவரியை குறைத்தால், நிச்சயமாக வரிகட்டுபவர்களுக்கு உற்சாகமும், புதிதாக வருமானவரி கட்டவேண்டியவர்கள், மேலும் ஏராளமானவர்களை அந்த வளையத்துக்குள் கொண்டுவரமுடியும். வருமானவரி கட்டுபவர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரித்தால் நிச்சயமாக வருவாய்பெருகும். இதுமட்டுமல்லாமல், வருமானவரி கணக்கு தாக்கல்செய்வதை, எல்லோருமே குறிப்பாக அதிக படிப்பறிவு இல்லாதவர்கள் தாங்களாகவே தாக்கல் செய்யும்வகையில், அதற்குரிய முறைகள் எளிதாக்கப்படவேண்டும். சமீபத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் மிகவும் எளிதாக்கப்பட்டுள்ளதுபோல, வருமானவரி தாக்கல்செய்யும் படிவங்களும் எளிமையாக்கப்படவேண்டும். கடந்த ஆண்டு பட்ஜெட்டில் நிதிமந்திரி, ‘கம்பெனிகள் வரியை அடுத்த 4 ஆண்டுகளில் 25 சதவீதமாக குறைப்போம்’ என்று அறிவித்திருந்தார். சீனா உள்பட பல நாடுகளில் 25 சதவீதம் வரிதான் இருக்கும்நிலையில், இந்தியாவில் மட்டும் 30 சதவீத கம்பெனிகள் வரி இருப்பதால்தான், வெளிநாட்டு நிறுவனங்கள் இங்குவந்து தொழில்தொடங்க தயங்குகிறார்கள். எனவே, இந்த ஆண்டு பட்ஜெட்டில் வருமானவரியும், கம்பெனிவரியும் குறையப்போகிறது என்று கிடைக்கும் தகவல்கள், நிச்சயமாக நாட்டில் பொருளாதாரத்தையும், உற்பத்தியையும் மேல்நிலைக்கு கொண்டுவரும்.

Next Story