ஊக்கம் அளிக்கும் ‘டிஜிட்டல்’ பணப்பரிமாற்றம்


ஊக்கம் அளிக்கும் ‘டிஜிட்டல்’ பணப்பரிமாற்றம்
x
தினத்தந்தி 30 Dec 2016 9:30 PM GMT (Updated: 2016-12-30T19:08:56+05:30)

பொதுவாக, அரசாங்கம் எந்தத்திட்டத்தை கொண்டுவந்தாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் அந்த திட்டம் வெற்றிகரமாக முடியும்.

பொதுவாக, அரசாங்கம் எந்தத்திட்டத்தை கொண்டுவந்தாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் அந்த திட்டம் வெற்றிகரமாக முடியும். பல நடைமுறைகளை மக்களுக்கு புரியவைத்து, அதனால் ஏற்படும் பலன்களை அவர்களை அடையவைத்தால், உடனடியாக வலி என்றாலும் பரவாயில்லை தாங்கிக்கொள்வோம், கிடைக்கப்போவது நிரந்தரமான பயன் என்றவகையில் ஏற்றுக்கொள்வார்கள். அதைவிடுத்து, அதிரடியாக நீ இதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும், நடைமுறைப்படுத்தித்தான் ஆகவேண்டும் என்று கட்டாயப்படுத்தினால், அதில் எங்கேயாவது ஓட்டையிருக்கிறதா?, அதன்மூலம் தப்பித்துக்கொள்ளலாமா? என்றுதான் பார்ப்பார்கள். அந்தவகையில்தான், உலகில் பல்வேறு நாடுகள் நடைமுறைக்கு கொண்டுவந்துள்ள ரொக்கமில்லா பணப்பரிமாற்றம் அதாவது, கிரெடிட், டெபிட் கார்டுகள் போன்ற பண அட்டைகளை பயன்படுத்தி, பொருட்கள், சேவைகள் பரிமாற்றத்தை மேற்கொள்ளும் திட்டத்தை மத்திய அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தத்திட்டம் முழுமையாக வெற்றி அடைந்தால், நிச்சயமாக கருப்பு பணமோ, லஞ்ச ஊழலோ, கள்ளப்பணமோ பெருமளவில் ஒழிக்கப்படும் என்பதில் யாருக்கும் சந்தேகமே இல்லை. ஆனால், பெரும்பான்மையான மக்களுக்கு வங்கிக்கணக்கு இல்லாத நிலையிலும், இதுபோன்ற பண அட்டைகளையோ, மின்னணு பணப்பரிமாற்றத்தையோ பயன்படுத்தி பழக்கமில்லாத நிலையிலும், இந்தத்திட்டம் அவர்களை முழுமையாக சென்றடைய வேண்டுமென்றால், அவர்களால் முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டுமென்றால், அவர்கள் முழுமனதுடன் இதை பயன்படுத்த தொடங்கவேண்டும். அதற்கு ஊக்கம் அளிக்கும் வகையில், மாதந்தோறும் மக்களிடம், ‘மனதில் குரல்’ என்ற தலைப்பில் பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றிவருவதின் தொடர்ச்சியாக, கடந்த கிறிஸ்துமஸ் நாளன்று பேசும்போது, ‘கிறிஸ்துமஸ் நன்னாளான இன்று நாட்டு மக்கள் பரிசாக 2 திட்டங்களின் பயன்களை அடைய இருக்கிறார்கள். இது புதிய திட்டங்களின் தொடக்கம். கிராமமாகட்டும், நகரமாகட்டும், படித்தவர்களாகட்டும், பாமரனாகட்டும், ரொக்கமில்லா பரிமாற்றம் என்றால் என்ன?, ரொக்கமில்லா வியாபாரத்தை எப்படி செய்வது?, ரொக்கமில்லாமல் எப்படி பொருட்களை வாங்குவது? என்பதை அறிய நாடு முழுவதும் ஒரு ஆர்வம் இருக்கிறது.

இதற்கு ஊக்கம் அளிக்கும் வகையில், மின்னணு பணம் செலுத்தும் பழக்கம் உருவாகவேண்டும். அதை ஊக்குவிக்கும் வகையில், நுகர்வோருக்காக ‘அதிர்ஷ்டசாலி’ நுகர்வோர் திட்டமும், வியாபாரிகளுக்காக ‘டிஜி தன்’ வியாபார திட்டமும் அறிவிக்கிறேன். ஒவ்வொரு நாளும் டிஜிட்டல் முறையிலும், மின்னணு முறையிலும் பணபரிமாற்றம் செய்யும் 15 ஆயிரம் பேர்களுக்கு குலுக்கல் முறையில் தலா ரூ.1,000 பரிசாக அவர்கள் வங்கிக்கணக்கில் போடப்படும். 100 நாட்கள் இந்த பரிசு குலுக்கல் நடைபெறும். மொபைல் வங்கிசேவைகள், மின்னணு வங்கிசேவைகள், ருபே அட்டை போன்ற டிஜிட்டல் வழிமுறைகள் மூலம் பணபரிமாற்றத்தில் ஈடுபடுபவர்கள் இந்த பரிசுகளைப்பெற தகுதி படைத்தவர்கள். இதுபோல, வாரம் ஒருநாள் பெரியதொரு குலுக்கல் நடைபெறும். அதில் லட்சக்கணக்கான பரிசுகள் கிடைக்கும். ஏப்ரல் 14–ந் தேதி அன்று அம்பேத்கர் பிறந்தநாளன்று பம்பர் பரிசு குலுக்கல் நடைபெறும். இதில் கோடிக்கணக்கான பரிசுத்தொகை வழங்கப்படும். இதுபோல, ‘டிஜி தன்’ வியாபார திட்டத்தின் மூலம் வியாபாரிகள் தாங்களே இந்தத்திட்டத்தில் தங்களை இணைத்துக்கொண்டு, நுகர்வோரையும் ரொக்கமில்லா பணப்பரிமாற்றத்துக்கு இணையச்செய்தால், அவர்களுக்கென்று ஆயிரக்கணக்கில் பரிசுகள் வழங்கப்படும்.

பொதுமக்களை பொறுத்தமட்டில், ரூ.50 முதல் ரூ.3 ஆயிரம்வரை பொருட்கள் வாங்கும் மக்களுக்குத்தான் இந்தப்பலன் கிடைக்கும். ரூ.3 ஆயிரத்துக்கும் அதிகமாக பொருட்கள் வாங்குபவர்களுக்கு இந்த பரிசு கிடையாது. ஏழைகள், கீழ்மட்ட, நடுத்தர வர்க்கத்தினரை மையப்படுத்தி இந்தத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் அறிவித்துள்ளார். பிரதமரின் இந்த அறிவிப்பு நிச்சயமாக வரவேற்கத்தக்க ஒன்றாகும். இந்தத்திட்டம் பற்றி அறியாதவர்களையும் இதை அறியவைக்க ஆர்வத்தைத்தூண்டும். இதுபோன்று எந்தத்திட்டம் என்றாலும் சரி, பொதுமக்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், சலுகைகளை வழங்கினால் நிச்சயமாக அந்தத்திட்டம் வெற்றிப்பாதையில் செல்லும் என்பதில் சந்தேகமே இல்லை.

Next Story