தேவை உள்ளவர்களுக்கு மானியம்


தேவை  உள்ளவர்களுக்கு  மானியம்
x
தினத்தந்தி 1 Jan 2017 9:30 PM GMT (Updated: 2017-01-01T17:42:25+05:30)

‘‘ஒரு மனிதனுக்கு ஒரு மீனை நீகொடு, அவனுக்கு அந்த ஒருநாள் மட்டும் நீ உணவு கொடுக்கலாம், அவனுக்கு நீ மீன்பிடிக்க கற்றுக்கொடு, அவனுக்கு வாழ்நாள் முழுவதும் நீ வாழ்வளிக்கிறாய்’’ என்பது சீன பழமொழி. இதையே தாரக மந்திரமாகக்கொண்டு மத்திய, மாநில அரசுகள் பின்பற்றவேண்டிய ஒரு அவசர அவசியம் வந்துவிட்டது.

‘‘ஒரு மனிதனுக்கு ஒரு மீனை நீகொடு, அவனுக்கு அந்த ஒருநாள் மட்டும் நீ உணவு கொடுக்கலாம், அவனுக்கு நீ மீன்பிடிக்க கற்றுக்கொடு, அவனுக்கு வாழ்நாள் முழுவதும் நீ வாழ்வளிக்கிறாய்’’ என்பது சீன பழமொழி. இதையே தாரக மந்திரமாகக்கொண்டு மத்திய, மாநில அரசுகள் பின்பற்றவேண்டிய ஒரு அவசர அவசியம் வந்துவிட்டது. மக்களுக்கு பல உதவிகள் நிச்சயம் தேவைதான். அரசியல் கட்சிகள் யாருக்கு தேவை என்றில்லாமல், எல்லோருக்கும் பல்வேறு இலவசங்கள், மானியங்களைக்கொடுத்து அவர்கள் மனதை ஒரு சோம்பேறித்தனமான உணர்வுக்கு ஆட்படுத்திவிடுகிறார்கள். வளர்ச்சித்திட்டங்களுக்கு செல்ல வேண்டிய நிதி, இலவசங்கள், மானியங்களுக்கு சென்றுவிடுவதால், நீண்டகால நிரந்தர வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டு விட்டது. மத்திய அரசாங்கத்தில், மானியங்களுக்கு மட்டும் ஏராளமான தொகை செலவழிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.1 சதவீதம் மானியங்களாக சென்றுகொண்டிருக்கிறது. இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் அதை 1.7 சதவீதமாக குறைக்க மத்திய அரசாங்கம் தீவிர நடவடிக்கை எடுத்ததன் எதிரொலியாக, இந்த ஆண்டு மானியம் ரூ.2 லட்சத்து 32 ஆயிரம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், இப்போது இந்த மானிய தொகைக்கு மேலும் ரூ.20 ஆயிரம் கோடியாக உயர்த்தி திருத்தப்பட்ட கணக்கீட்டின்படி, ரூ.2 லட்சத்து 52 ஆயிரம் கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நவம்பர் 8–ந் தேதி 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நேரத்தில், தங்கள் கையிலுள்ள பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்யச்சொல்லி அரசு அறிவுறுத்தியது. இந்த செல்லாத நோட்டுகளின் மதிப்பு ரூ.15 லட்சத்து 44 ஆயிரம் கோடியாக இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், ரூ.3 லட்சம் கோடியாவது கருப்பு பணம் வங்கிகளுக்கு வராமல் இருக்கும். அந்த தொகைக்கான ரூபாய் நோட்டுகளை அச்சடித்து மத்திய அரசாங்கம் தன் சொந்த நிதிக்கு சேர்த்துக்கொள்ளலாம். இதனால், அரசாங்கத்தின் நிதிப்பற்றாக்குறையை ஓரளவு சமாளிக்க முடியும் என்று இருந்தநிலையில், ஏறத்தாழ ரூ.14 லட்சம் கோடிக்குமேல் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு விட்டது. யாரும் எதிர்பார்க்காத வகையில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதால், அரசாங்கம் எதிர்பார்த்த கருப்பு பணம் மக்களிடம் இல்லை என்று தெரிகிறது. ஆக, கருப்பு பணத்தைவிட, மானியத்திற்கான செலவு அதிகமாகிறது என்பதை பார்த்தால், பொருளாதாரத்தை சீர்படுத்த மத்திய அரசாங்கம் நிச்சயமாக தேவையற்றவர்களுக்கு செல்லும் மானியத்தை தடுத்து நிறுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

ஏற்கனவே இதற்கான நடவடிக்கைகளை குறிப்பாக சமையல் கியாஸ் சிலிண்டர்க்கு கொடுக்கப்படும் மானியங்களை குறைப்பதற்கான எடுத்த நடவடிக்கைகள் நல்ல பலனை தந்துள்ளது. நாடு முழுவதும் 5 கோடி பரம ஏழைகளுக்கு இலவச கியாஸ் சிலிண்டர் கொடுப்பதற்காக ஏற்கனவே, சமையல் கியாஸ் சிலிண்டர் வினியோகத்தில் ‘எங்களுக்கு மானியம் வேண்டாம்’ என்று சொல்பவர்கள், தாங்களாகவே முன்வந்து ‘மானியம் வேண்டாம்’ என்று சொல்பவர்கள், அதுபோல ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்குமேல் வருமானம் பெறுபவர்களின் மானியம் ரத்து செய்யப்படுகிறது என்ற நடவடிக்கையின் விளைவாக, ஒரு கோடியே 50 லட்சம் பேருக்கு வழங்கப்பட்ட மானியம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது, சமையல் கியாஸ் மானியம் மட்டும். இதுபோன்ற நடவடிக்கைகளை இன்னும் வழங்கப்படும் பல்வேறு மானியங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்தால், நிதிச்சுமையிலிருந்து விடுபடலாம். சுவிட்சர்லாந்து நாட்டில் மாதம் ஒவ்வொருவருக்கும் 1.71 லட்சம் ரூபாய் இலவசமாக கொடுக்க அரசாங்கம் நினைத்தபோது, இதுகுறித்து எடுக்கப்பட்ட பொதுவாக்கெடுப்பில், 78 சதவீத மக்கள் ‘‘எங்களுக்கு இலவசம் தேவையேயில்லை’’ என்று சொல்லிவிட்டனர். அத்தகைய உணர்வுகளை தமிழ்நாட்டிலும், ஏன் இந்தியா முழுவதும் மானியம் இல்லாமல் வாழ்க்கையை நடத்த முடியும் என்றநிலையில் உள்ள பெரும்பான்மையான மக்களுக்கு உணர்த்தும் பணிகளை அரசாங்கம் செய்யவேண்டும்.

Next Story