எப்படி சமாளிக்கப் போகிறோம்?


எப்படி சமாளிக்கப் போகிறோம்?
x
தினத்தந்தி 2 Jan 2017 8:30 PM GMT (Updated: 2 Jan 2017 2:44 PM GMT)

தமிழகம் முழுமையும் வரலாறு காணாத ஒரு வறட்சி நிலையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. எல்லோருடைய மனதிலும் அரசும், மக்களும் சரி, அடுத்த ஒரு ஆண்டு காலத்துக்கு எப்படி வறட்சியை சமாளிக்கப்போகிறோம்? என்ற கவலைதான் அதிகமாக இருக்கிறது. ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது

மிழகம் முழுமையும் வரலாறு காணாத ஒரு வறட்சி நிலையை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது. எல்லோருடைய மனதிலும் அரசும், மக்களும் சரி, அடுத்த ஒரு ஆண்டு காலத்துக்கு எப்படி வறட்சியை சமாளிக்கப்போகிறோம்? என்ற கவலைதான் அதிகமாக இருக்கிறது. ‘நீரின்றி அமையாது உலகு’ என்பது அய்யன் வள்ளுவன் வாக்கு. நீர் என்பது மழைபெய்தால்தான் உண்டு. தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், இரண்டு பருவமழையை நம்பித்தான் மாநிலத்தின் தண்ணீர் வளமே இருக்கிறது. ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம்வரை தென்மேற்குப் பருவமழையும், அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம்வரை வடகிழக்குப் பருவமழையும் பெய்தாலும், தென்மேற்குப் பருவமழை பெருமளவில் தமிழ்நாட்டில் பெய்வதில்லை. கர்நாடகம் போன்ற அண்டை மாநிலங்களில் தென்மேற்குப் பருவமழை அதிகமாக பெய்து அங்குள்ள அணைகள் நிறையும் போது, மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்படும். அந்த தண்ணீர்தான் காவிரி டெல்டா பாசன மாவட்டங்களில் விவசாயத்துக்கு பெரும் துணையாக இருக்கும்.

இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை பொய்த்ததால், மேட்டூர் அணைக்கும் எதிர்பார்த்த தண்ணீர் வரவில்லை. தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் தென்மேற்குப் பருவமழை 14 நாட்கள் பெய்யும். இந்த ஆண்டு 3 நாட்கள்தான் பெய்தது. இனி வடகிழக்குப் பருவமழை அதிகளவில் பெய்து வறட்சி நிலையிலிருந்து மக்களை காப்பாற்றும் என்று எதிர்பார்ப்பு இருந்தது. இந்திய வானிலை ஆராய்ச்சி மையம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக ஆய்வு, ஏன் பஞ்சாங்கங்கள்கூட சராசரி அளவைவிட பெரியஅளவு மழைபெய்யும் என்று கணித்தன. ஆனால், எல்லோருடைய கணிப்பும் பொய்த்துவிட்டது. வடகிழக்குப் பருவமழையும் முற்றிலுமாக பெய்யாமல், வரலாறு காணாத அளவுக்கு கடும் தண்ணீர் பற்றாக்குறையால் தமிழ்நாடு முழுவதும் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. பயிர்கள் எல்லாம் கருகி விட்டன. ஆறுகள், குளங்கள், அணைகள், ஏரிகள், குட்டைகள் எல்லாமே வறண்டுபோய்விட்டன. 1901–ம் ஆண்டுக்குப்பிறகு, இந்த ஆண்டுதான் மோசமான வடகிழக்குப் பருவமழையை தமிழ்நாடு சந்தித்திருக்கிறது. அப்போதுகூட இந்தளவுக்கு பாதிப்பில்லை. வழக்கமாக வடகிழக்குப் பருவமழை சராசரியாக பெய்தால் 441 மில்லிமீட்டர் பெய்திருக்கவேண்டும். ஆனால், இந்த ஆண்டு 168.4 மில்லிமீட்டர் மழைதான் பெய்திருக்கிறது. 62 சதவீதம் குறைவாக மழை பெய்திருக்கிறது.

இப்போது வாழ்பவர்களில் பலருக்கு 1974–ம் ஆண்டு தண்ணீர் பஞ்சம் நினைவில் இருக்கும். அப்போதுகூட 176 மில்லிமீட்டர் மழை பெய்து 60 சதவீத மழை பற்றாக்குறை இருந்தது. ஆக, இப்போது வாழ்பவர்கள் தங்கள் வாழ்க்கையில் சந்திக்கப்போகும் மிகக்கடுமையான வறட்சி ஆண்டு இதுதான். இந்த நிலையில், தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவித்து மத்திய அரசாங்கத்தை தமிழக அரசு உடனடியாக வற்புறுத்தி, போதிய நிதியைப்பெற்று நிலைமையை சமாளிக்க நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். நிலத்தடிநீரும் மிகவும் கீழே போய்விட்டது. உடனடியாக இப்போதுள்ள தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம், உதவிகளை வழங்கவும் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்? என்பதை ஆய்வு செய்து, நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்களை குறுகிய காலத்தில் கடலோர பகுதிகள் அனைத்திலும் அடுத்தடுத்து தொடங்குவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா? என்பதை பரிசீலித்து, உடனடியாக செய்தால்தான் குடிநீர் பற்றாக்குறையை ஓரளவுக்கு சமாளிக்க முடியும். நிலத்தடிநீர் எங்கெங்கு வளமாக இருக்கிறது என்பதை ஆய்வுசெய்து, அந்தந்த இடங்களில் ஆழ்குழாய் கிணறுகளை அமைத்து, அருகிலுள்ள இடங்களுக்கு சப்ளை செய்ய ஏற்பாடுகள் செய்ய வேண்டும். நிச்சயமாக இந்த ஆண்டு வேளாண்விளைச்சல் எதிர்பார்க்கும் அளவுக்கு இருக்கப்போவதில்லை. தேவையான உணவுப்பொருட்களை வெளிச்சந்தையில் வாங்கி இருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும். பயிர்கள் கருகியதால் 60–க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்து விட்டனர். மேலும், இந்த நிலை நீடிக்காமல் தடுக்க, விவசாயிகளுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டும். மொத்தத்தில், இந்த ஆண்டு பட்ஜெட்டிலும், அரசின் முனைப்பான திட்டங்களிலும் சரி, வறட்சியை சமாளிப்பதை முதல் கடமையாகக் கொண்டு செயலாற்ற வேண்டும்.


Next Story