குடிநீருக்கு என்ன செய்யப்போகிறோம்?


குடிநீருக்கு  என்ன  செய்யப்போகிறோம்?
x
தினத்தந்தி 4 Jan 2017 9:30 PM GMT (Updated: 2017-01-04T22:43:43+05:30)

தமிழ்நாட்டில் எல்லாவளங்களும் இருந்தாலும், நீர்வளம் மிகமிக குறைவாகவே இருக்கிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 36 முக்கிய ஆறுகள் இருக்கின்றன. 39 ஆயிரத்து 202 ஏரிகள் இருக்கிறது. 89 பெரிய, சிறிய அணைகள் மாநிலம் முழுவதும் இருக்கின்றன.

மிழ்நாட்டில் எல்லாவளங்களும் இருந்தாலும், நீர்வளம் மிகமிக குறைவாகவே இருக்கிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 36 முக்கிய ஆறுகள் இருக்கின்றன. 39 ஆயிரத்து 202 ஏரிகள் இருக்கிறது. 89 பெரிய, சிறிய அணைகள் மாநிலம் முழுவதும் இருக்கின்றன. சராசரிமழை அளவு 920 மி.மீ. இதில் வடகிழக்கு பருவமழை 48 சதவீதமும், தென்மேற்கு பருவமழை 35 சதவீதமும், கோடைமழை 14 சதவீதமும், குளிர்காலமழை 3 சதவீதமும் பெய்து மக்களின் தண்ணீர் தேவையை பூர்த்திசெய்கிறது. கடந்த ஆண்டை எடுத்துக்கொண்டால், ஜூன் முதல் செப்டம்பர் வரை பெய்யும் தென்மேற்கு பருவமழையும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்யும் வடகிழக்கு பருவமழையும் முற்றிலுமாக பொய்த்துவிட்டது.

புயலைக்கண்டு எல்லோரும் அச்சமடைவார்கள், ஆனால், தற்போதுள்ள சூழ்நிலையில், தமிழக மக்கள் ஏதாவது புயல் வராதா?, அதனாலாவது மழைபெய்துவிடாதா? என்று பரிதாபமாக ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள். அனைத்து நீர்நிலைகளும் வறண்டுபோய்விட்டன. பருவமழையை எதிர்பார்த்து ஏற்கனவே குறுவைபயிரை இழந்த விவசாயிகள், இப்போது சம்பா பயிரும் கருகி, வாடி உதிர்ந்துவிடும் நிலையைப்பார்த்து, தான் பிள்ளைபோல் வளர்த்த பயிர்களும், தனக்கு முன்னாலேயே கருகுவதைக்கண்டு சகித்துக்கொள்ளமுடியாமல் உயிரிழப்பதும், தற்கொலை செய்துகொள்வதுமான நிகழ்வுகள் தமிழ்நாட்டில் தினமும் நடந்தேறிக்கொண்டிருக்கிறது. 1901–ம் ஆண்டுக்குபிறகு இப்படியொரு பற்றாக்குறையான பருவமழையை தமிழ்நாடு சந்தித்தது இல்லை. இந்தநிலையில், தமிழ்நாட்டை உடனடியாக வறட்சிமாநிலமாக அறிவித்து, விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை வழங்கவேண்டும் என்ற பரவலான கோரிக்கை தமிழகம் முழுவதிலும் இருந்து ஒலித்துக்கொண்டிருப்பதைக்கேட்ட தமிழக அரசு அதற்கான நடவடிக்கைகளை இப்போது தொடங்கிவிட்டது. மத்தியஅரசின் புதியவழிகாட்டுதல் நெறிமுறைப்படி, 50 சதவீதத்துக்கு குறைவான மழைபெய்தாலோ, 3, 4 வாரங்கள் ஒருசொட்டு மழைகூட பெய்யாமல் இருந்தாலோ, வறட்சி மாநிலமாக அறிவிக்கலாம். தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், பெரும்பாலான இடங்களில் 60 சதவீதத்திற்குமேல் குறைவாக மழைபெய்துள்ளது. எனவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 10 சதவீத அளவு கிராமங்களுக்கு அதிகாரிகள் நேரடியாகச்சென்று அங்குள்ள பயிர்நிலை குறித்து ஆய்வுசெய்யவேண்டும். அதன்பிறகு, அந்த நிலைகுறித்து அரசுக்கு அறிக்கை அளித்திடவேண்டும்.

தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் அந்த மாவட்ட அமைச்சர் அல்லது அமைச்சர்கள், அவரோடு அரசு நியமித்துள்ள ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி, மாவட்ட கலெக்டர் ஆகியோர் கொண்ட உயர்மட்டக்குழு 10 கிராமங்களில் 9–ந் தேதிவரை சுற்றுப்பயணம் செய்து, 10–ந்தேதி அறிக்கை தாக்கல் செய்ய முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார். இந்த அறிக்கையை பெற்று உடனடியாக வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழக அரசு அறிவிக்கும். விவசாயிகளுக்குரிய நிவாரணத்தொகையை வழங்கும். விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது. ஆனால், குடிநீர் பற்றாக்குறையாலும் மாநிலத்தின் பல்வேறுபகுதிகள் நிச்சயமாக பெருமளவில் தத்தளிக்கும். நீர்த்தேக்கங்களிலும் தண்ணீர் இல்லை. நிலத்தடிநீரும் குறைந்துபோய்விட்டது. முன்பு இதுபோன்ற நேரங்களில் ஒரு மாவட்டத்தில் தண்ணீர் இல்லையென்றால், பக்கத்தில் தண்ணீர் உள்ள மாவட்டங்களில் இருந்து ‘டேங்கர் லாரி’ மூலம் தண்ணீர் கொண்டுவரப்பட்டது. ஆனால், இப்போது எல்லா மாவட்டங்களுமே குடிநீர் பற்றாக்குறையை நோக்கி சென்றுக்கொண்டிருக்கும் நிலையில், குடிநீர் சப்ளைக்காக என்னசெய்வது? என்பதை அரசு தீவிரமாக ஆய்வுசெய்து, திட்டங்களை வகுக்கவேண்டும். அடுத்த சிலநாட்களில் குடிநீர் பற்றாக்குறை நிச்சயமாக கடுமையாக தலைதூக்கிவிடும். அப்போது தவிப்பதைவிட, இப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என்னென்ன முயற்சிகளை மேற்கொள்ளலாம்? என்பதுகுறித்து ஒருவிரிவான திட்டத்தை தீட்டி, எந்தநேரத்திலும் செயல்படுத்த அரசு எந்திரம் தயாராக இருக்கவேண்டும்.

Next Story