காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து விடுங்கள்


காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து விடுங்கள்
x
தினத்தந்தி 6 Jan 2017 8:30 PM GMT (Updated: 6 Jan 2017 1:05 PM GMT)

மத்திய, மாநில அரசுகள் பல நேரங்களில் அவர்களாகவே முடிவெடுத்து, அறிவிக்க வேண்டிய பல நடவடிக்கைகளை அவர்கள் தரப்பில் ஏற்படும் தயக்கம், தாமதத்தின் காரணமாக நிறைவேற்றாமல், இழுத்துக்கொண்டே போகிறார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தின் நீண்ட நெடிய

த்திய, மாநில அரசுகள் பல நேரங்களில் அவர்களாகவே முடிவெடுத்து, அறிவிக்க வேண்டிய பல நடவடிக்கைகளை அவர்கள் தரப்பில் ஏற்படும் தயக்கம், தாமதத்தின் காரணமாக நிறைவேற்றாமல், இழுத்துக் கொண்டே போகிறார்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தின் நீண்ட நெடிய படிக்கட்டுகளில் ஏறி கதவைத் தட்டி, தங்கள் பிரச்சினைகளுக்காக வழக்கு தொடருகிறார்கள். இந்த வழக்கு விசாரணை இறுதியில் உயர்நீதிமன்றமோ, உச்சநீதிமன்றமோ, அரசாங்கம் எடுக்க வேண்டிய நடவடிக்கையை உடனடியாக எடுங்கள் என்று உத்தரவிட்ட பிறகு, வேறுவழியில்லாமல் நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகி விடுகிறார்கள். இது போன்ற நிலைமைதான் தற்போது காவிரி நதிநீர் பிரச்சினையில் மத்திய அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், 13 காவிரி டெல்டா மாவட்டங்களின் வாழ்வோ, தாழ்வோ காவிரி நதிநீரில் ஓடும் தண்ணீரை வைத்துத்தான் இருக்கிறது. கர்நாடகம் ஆண்டுதோறும் மேட்டூர் அணைக்கு திறந்துவிடும் தண்ணீரைத்தான் இந்த 13 மாவட்டங்களிலும் விவசாயம் நடக்கிறது. தமிழ்நாட்டுக்கும், கர்நாடகத்திற்கும் இடையே காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக ஆண்டாண்டு காலமாக பிரச்சினைகள் இருந்து வருகிறது. இருமாநில அரசுகளும் பேச்சுவார்த்தை மூலம் ஒரு தீர்வுகாண முடியாத நிலையில், ‘காவிரி நடுவர்மன்றம்’ அமைக்கப்பட்டு, அதன் தீர்ப்பும் 2007–ம் ஆண்டு வழங்கப்பட்டது. ஆனால், அதில் மிகமுக்கியமான ஒரு அம்சம் இருமாநிலங்களுக்கு இடையேயுள்ள காவிரி நீர் பங்கீடு தொடர்பான பிரச்சினைகளைத்தீர்க்க காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதுதான். ஆனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கர்நாடக அரசும் ஒத்துழைக்கவில்லை. மத்திய அரசாங்கமும் அதற்கான உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை.

இந்த நிலையில், காவிரி நடுவர்மன்றத்தின் இறுதி தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு 9 ஆண்டுகளாக இழுத்துக் கொண்டே இருந்தது. இவ்வளவுநாள் அமைதிகாத்த மத்திய அரசாங்கம், திடீரென்று உச்சநீதிமன்றத்தில் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்பது காவிரி நடுவர்மன்றத்தின் பரிந்துரையே தவிர உத்தரவில்லை. காவிரி மேலாண்மை வாரியத்தை பாராளுமன்றம்தான் அமைக்கமுடியும் என்று முரண்பாடான ஒருகருத்தை உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்தது. அதுமட்டுமல்லாமல், கடந்த மாதம் காவிரி நடுவர்மன்ற தீர்ப்பு தொடர்பாக எந்த விதமான மேல்முறையீட்டு மனுக்களையும் விசாரிக்க உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை. இந்த நடுவர்மன்ற தீர்ப்புதான் இறுதியானது என்றும் வாதிட்டது. ஆனால், உச்சநீதிமன்றம் தனது 88 பக்கத்தீர்ப்பில் அரசியல் சட்டத்தின் பலபிரிவுகளை மேற்கோள்காட்டி, உச்சநீதிமன்றம் இத்தகைய மேல்முறையீட்டு மனுக்களையும் விசாரிக்க அதிகாரம் படைத்தது என்று கூறிவிட்டது.

மேலும் கடந்த 4–ந் தேதி பிறப்பித்த உத்தரவில் உச்சநீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பாக ஒரு தீர்ப்பு வழங்கி, கர்நாடகம் தினமும் 2 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடவேண்டும். பிப்ரவரி 7–ந் தேதி முதல் தினமும் இந்த வழக்கு விசாரணை நடந்து 3 வாரங்களுக்குள் விசாரணை முடிவடையும் என்ற ஒரு நல்லசெய்தியை தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்ற பெஞ்சு தீர்ப்பு என்பதால், இனி அப்பீல் இருக்காது. வழங்கப்போகும் தீர்ப்பே இறுதியானது என்றவகையில் தமிழகத்துக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதும் இந்த வழக்கில் ஒரு அங்கமாக இருக்கிறது. இவ்வளவு நாளும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக  ஒரு நிச்சயமற்ற நிலைமை நீடித்துவந்தது. இப்போது  ஒரு புதிய நம்பிக்கை தமிழக மக்களுக்கு குறிப்பாக, காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழக விவசாயிகள் அனைவரும் இந்தத்தீர்ப்பு, தங்களுக்கு நியாயம் வழங்கும், காவிரி பிரச்சினைக்கே ஒரு முடிவு கட்டிவிடும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நீதிமன்ற தீர்ப்புவந்து, அதையொட்டி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆட்பட்டு, அதன்பிறகு அமைப்பதைவிட, மத்திய அரசாங்கம் இப்போதே உச்சநீதிமன்றத்தில் தெரிவித்து விட்டு, காவிரிநீர் மேலாண்மை வாரியத்தை தாங்களே முன்வந்து அமைப்பது சாலச் சிறந்ததாகும்.


Next Story