இது ஜல்லிக்கட்டு அல்ல; ‘ஏறுதழுவுதல்’


இது ஜல்லிக்கட்டு அல்ல; ‘ஏறுதழுவுதல்’
x
தினத்தந்தி 12 Jan 2017 9:30 PM GMT (Updated: 12 Jan 2017 1:29 PM GMT)

தமிழர்களுக்கென தனியாக ஒரு பாரம்பரியம், கலாசாரம், வாழ்க்கை முறைகள், வழிபாடுகள் உண்டு. தமிழர்களிடையே பல சாதி, பல இனம் இருக்கிறது. பல மதங்களை கடைபிடிக்கிறார்கள்.

மிழர்களுக்கென தனியாக ஒரு பாரம்பரியம், கலாசாரம், வாழ்க்கை முறைகள், வழிபாடுகள் உண்டு. தமிழர்களிடையே பல சாதி, பல இனம் இருக்கிறது. பல மதங்களை கடைபிடிக்கிறார்கள். ஆனால், எல்லோருக்கும் ஒரு பொதுவான பண்டிகை என்றால், அது ‘‘பொங்கல்’’தான். தனக்கு உணவு அளிக்கப்பயிர்களை விளைவிக்க செய்த இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கலிட்டு, அது பொங்கும்போது, ‘‘பொங்கலோ பொங்கல்’’ என்று உள்ளம் நிறைய குலவையிட்டு வாழ்த்தும் பண்டிகைதான் இது. தனக்கும், வேளாண்மைக்கும் உதவியாக இருந்த மாட்டுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், பொங்கலிட்டு மகிழ்வார்கள். இந்த நாளில் ஊரிலுள்ள இளைஞர்கள் தங்கள் வீரத்தையும், உடல் வலிமையையும் காட்ட, ஒவ்வொரு ஊரிலும் பல்வேறு வகையான வீரவிளையாட்டுக்களை நடத்துவார்கள். அதில் ஒன்றுதான் சங்க இலக்கியங்களில் எல்லாம் ‘ஏறுதழுவுதல்’ என்ற பெயருடன் சீறிவரும் காளைமாட்டை அடக்கும் வீரவிளையாட்டாகும். காலமெல்லாம் ‘ஏறுதழுவுதல்’ என்ற பெயரில் நடந்து வந்தது இந்த வீரவிளையாட்டாகும். பிற்காலங்களில் என்ன காரணத்தினாலோ, ஜல்லிக்கட்டு என்ற பெயர் மாறியது.

இந்த நிலையில், 2006–ம் ஆண்டு இந்த விளையாட்டில் கலந்துகொண்ட ஒரு மாணவன் உயிரிழக்க நேரிட்டது. இதையொட்டி, அந்த மாணவனின் தந்தை மதுரை ஐகோர்ட்டு கிளையில் தொடர்ந்த வழக்கில் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதிக்கப்பட்டது. அதன்பிறகு அப்பீல்கள் தொடர்ந்து வழக்குகள், தீர்ப்புகள் என்றநிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக போட்டி நடக்கவில்லை. ஆனால், இரண்டு ஆண்டுகளாக இந்த ஆண்டு நடந்துவிடும், நிச்சயம் நடந்துவிடும் என்று அரசியல்வாதிகள் உறுதிமொழிகள் கொடுப்பதும், அதனை மக்கள் நம்புவதும் ஒருவாடிக்கையாக நடந்துவருகிறது. ஜல்லிக்கட்டு நடக்கும் நேரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு, பிறகு அந்த எதிர்ப்பு உணர்வுகள் அப்படியே மங்கிப்போய்விடும். இந்த ஆண்டும், பொங்கல் நெருங்குகிற நேரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தமிழ்நாடு முழுவதும் வீறுகொண்ட புதிய போராட்டங்கள் கிளம்பிவிட்டன. அனைத்து ஊர்களிலும் விவசாயிகள், மாணவர்கள் இந்த விளையாட்டை இந்த ஆண்டு நடத்தியே தீரவேண்டும் என்று போர்க்குரல் எழுப்பி வருகிறார்கள். மத்திய அரசாங்கத்தை எடுத்துக்கொண்டால், உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. இந்த வழக்கை மீறி எங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறுகிறது. எதிர்க்கட்சிகள் அவசர சட்டம் பிறப்பித்தால் நடத்த முடியும் என்கிறார்கள். உச்சநீதிமன்றமோ, உடனடியாக எங்களால் தீர்ப்பு வழங்க முடியாது. தீர்ப்பை இப்போதுதான் எழுதிக்கொண்டிருக்கிறோம் என்று நேற்று கூறிவிட்டது. இதற்கிடையில், ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு இடைக்கால மனுதாக்கல் செய்யும் அனுமதியும் மறுக்கப்பட்டது.

இந்த நிலையில், விவசாயிகளெல்லாம் ஜல்லிக்கட்டு இல்லையென்றால், ‘‘எங்களுக்கு கரும்பு பொங்கல் இல்லை, கருப்பு பொங்கல் என்கிறார்கள்’’. பல ஊர்களில் தடையை மீறி, ஜல்லிக்கட்டு நடத்தியே தீருவோம் என்று சூளுரைத்துவிட்டனர். காரைக்குடியில் மஞ்சுவிரட்டு என்றபெயரில், இந்த போட்டி நடந்துவிட்டது. ஆக, இது ஒரு பெரிய சட்டம்–ஒழுங்கு பிரச்சினையாக உருவெடுக்கப்போகிறது. இதை தடுக்க பா.ஜ.க. மூத்த தலைவர் டெல்லி மேல்–சபை உறுப்பினரான இல.கணேசன் அருமையான யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு என்று நடத்தாமல் ‘ஏறுதழுவுதல்’ என்ற பெயரில் புதிய விழாவாக அறிவிக்கலாம். அதற்கான அதிகாரம் தமிழக அரசுக்கு இருக்கிறது என்று ஒருகருத்தை தெரிவித்துள்ளார். பண்டைய இலக்கியங்களில், தமிழர்களின் வீரவிளையாட்டான ‘ஏறுதழுவுதல்’ என்றுதான் இருக்கிறது. கலித்தொகை, திருவிளையாடல் புராணம், நாலடியார் போன்ற இலக்கியங்கள் அனைத்திலும் ‘ஏறுதழுவுதல்’ என்ற பெயரில்தான் நடத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே முதல்–அமைச்சரும் உறுதிமொழி அளித்துள்ளார். மத்திய அரசாங்கம் ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் அவசரசட்டம் பிறப்பிக்கவேண்டும். இல்லையென்றால், இல.கணேசன் கூறிய ஆலோசனையின்படி, ‘ஏறுதழுவுதல்’ என்றபெயரில் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்தமுடியுமா? என்பதை சட்டரீதியாக பரிசீலித்து, எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் தகுந்த முன்னேற்பாடுகள், மருத்துவவசதிகளுடன் இந்தப்போட்டியை நடத்த சட்டநிபுணர்களுடன், மத்திய அரசாங்கமும், தமிழக அரசும் ஆலோசனை நடத்தி உடனடியாக அறிவிக்கவேண்டும்.

Next Story