குறைகளை தீர்க்க ‘ரெயில் கேப்டன்கள்’


குறைகளை தீர்க்க ‘ரெயில் கேப்டன்கள்’
x
தினத்தந்தி 13 Jan 2017 9:30 PM GMT (Updated: 13 Jan 2017 2:41 PM GMT)

நாடு முழுவதிலும் தினமும் 12,617 ரெயில்கள், 2 கோடியே 30 லட்சம் பயணிகளை ஏற்றிக்கொண்டு 7,172 ரெயில் நிலையங்கள் வழியாக சென்றுகொண்டிருக்கின்றன. இந்த ரெயில் போக்குவரத்து முழுமையையும் நிர்வகிக்க 16 மண்டலங்கள் இருக்கின்றன.

நாடு முழுவதிலும் தினமும் 12,617 ரெயில்கள், 2 கோடியே 30 லட்சம் பயணிகளை ஏற்றிக்கொண்டு 7,172 ரெயில் நிலையங்கள் வழியாக சென்றுகொண்டிருக்கின்றன. இந்த ரெயில் போக்குவரத்து முழுமையையும் நிர்வகிக்க 16 மண்டலங்கள் இருக்கின்றன. இதில் சென்னையை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தென்னக ரெயில்வேயில் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, புதுச்சேரி, கர்நாடக மாநிலங்களில் ஓடும் ரெயில்கள் இயங்கிக்கொண்டிருக்கின்றன. இங்கு 250 எக்ஸ்பிரஸ் ரெயில்களும், 330 பாசஞ்சர் ரெயில்களும் தினமும் ஓடிக்கொண்டிருக்கின்றன.

சுத்தமில்லாத ரெயில் பெட்டிகள், பாதிவழியிலேயே கழிப்பறையில் தண்ணீர் இல்லாமல் போவது, சில விளக்குகள் எரியாதநிலை, மின்விசிறிகள் சுற்றாத நிலைமை, குளுமைவசதி செய்யப்பட்ட ரெயில் பெட்டிகளில் படுக்கைகள் அழுக்கடைந்த நிலையில் கிழிந்திருப்பது, ஏ.சி. சரியாக இயங்காதது, இவை எல்லாவற்றுக்கும் மேலாக சில பல நேரங்களில் பாதுகாப்பு குறைவு, பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் ‘ரிசர்வே‌ஷன்’ இல்லாத பயணிகள் யாரையும் கண்டுகொள்ளாமல் வந்தமர்வது, அவசர மருத்துவ உதவி போன்ற பல பிரச்சினைகளை தினமும் ரெயில் பயணிகள் சந்தித்துக்கொண்டு இருக்கிறார்கள். இதுபோன்ற நேரங்களில் யாரிடம் போய் சொல்வது என்று தெரியாமல், தங்களையும் நொந்துகொண்டு, ரெயில்வே நிர்வாகத்தையும் குறைப்பட்டுக்கொண்டு மகிழ்ச்சியற்ற பயணத்தை மேற்கொள்கிறார்கள். இந்த நிலையை தவிர்க்க, ரெயில்வே நிர்வாகம் ஒரு சில ரெயில்களில் ‘ரெயில் கேப்டன்’ என்று ஒரு அதிகாரியை ரெயில்களில் பயணம் செய்ய உத்தரவிட்டிருக்கிறது. இந்த ‘ரெயில் கேப்டன்’ என்ற அதிகாரி யார்?, அவரை தொடர்புகொள்ள எந்த செல்போனில் பேசலாம்? என்பதுபோன்ற விவரங்கள் ஒவ்வொரு பெட்டியிலும் ஒட்டப்பட்டிருக்கும், பயணிகள் பட்டியலில் கூறப்பட்டிருக்கும். இது மட்டுமல்லாமல், ரெயில்வே ‘ஹெல்ப்’லைனான 138–க்கு போன் செய்தாலும், அந்த அதிகாரி பெயர், செல்போன் எண்ணை குறிப்பிடுவார்கள். பயணிகளுக்கு நல்ல ஆலோசனை, உதவி, குறைதீர்த்தல் ஆகியவற்றை தனது முக்கியப்பொறுப்பாக ‘ரெயில் கேப்டன்’ மேற்கொள்வார். கடந்த வாரம் சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ள ரெயில் கேப்டன்கள் முறை மிகவும் வரவேற்கத்தக்கதும், பாராட்டுக்குரியதாகும். யாரிடம்போய் குறைகளைசொல்வோம் என்று இதுவரை ஏங்கிக்கொண்டிருந்த ரெயில் பயணிகளுக்கு, இதோ நமது குறையைக்கேட்க ஒரு அதிகாரி நம்முடனேயே இந்த ரெயிலில் வருகிறார் என்ற தெம்பு பயணிகளுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால், இப்போது எல்லா ரெயில்களிலும் இந்த ரெயில் கேப்டன் நியமிக்கப்படவில்லை.

தென்னக ரெயில்வேயில் சென்னை, திருவனந்தபுரம், பாலக்காடு, மதுரை, திருச்சி, சேலம் ஆகிய 6 கோட்டங்கள் இருக்கின்றன. சென்னை கோட்டத்தில் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் கோட்டத்தில் திருவனந்தபுரம் மெயில், பாலக்காடு கோட்டத்தில் மங்களூரு–சென்னை எக்ஸ்பிரஸ், மதுரை கோட்டத்தில் பாண்டியன் எக்ஸ்பிரஸ், திருச்சி கோட்டத்தில் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், சேலம் கோட்டத்தில் மேட்டுப்பாளையம்–சென்னை சென்டிரல் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகிய 10 ரெயில்களில் மட்டுமே இந்த ‘ரெயில் கேப்டன்’ நியமிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடி, கன்னியாகுமரி, நெல்லை, ராமேசுவரம் போன்ற பல்வேறு இடங்களிலிருந்து வரும் பயணிகள்தான் பெரும் வருவாயை ஈட்டித்தருகிறார்கள். எனவே, இப்படி குறிப்பிட்ட 10 ரெயில்களுக்கு மட்டும் ‘ரெயில் கேப்டன்கள்’ நியமிக்கப்படுவதோடு விட்டுவிடாமல், அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் நியமிக்கப்படவேண்டும். ரெயில் கேப்டன்களிடம் சொல்லும் குறைகளைத்தீர்க்க, மின்சாரம் பழுதுபார்க்கும் தொழிலாளி, பிளம்பர், ஏ.சி.மெக்கானிக், துப்புரவு தொழிலாளி போன்ற அடிப்படை பணியாளர்களும் 3 அல்லது 4 பேர் ஒவ்வொரு ரெயிலிலும் நியமிக்கப்பட்டால், நிச்சயமாக பயணிகளுக்கு இருக்கும் குறைகளெல்லாம் நீக்கப்பட்டு மகிழ்ச்சியான பயணம், சுகமான பயணமாக மனநிறைவோடு தங்கள் பயணத்தை நிறைவு செய்யமுடியும்.

Next Story