இது ஒரு நல்ல முயற்சி!


இது ஒரு நல்ல முயற்சி!
x
தினத்தந்தி 15 Jan 2017 8:30 PM GMT (Updated: 2017-01-16T00:01:59+05:30)

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் எப்போதும், ‘‘உங்கள் நண்பர்களை மாற்றிக் கொள்ள முடியும். அண்டை வீட்டுக்காரர்களை மாற்றிக் கொள்ள முடியாது’’ என்ற ஆங்கில பழமொழியை கூறுவார். அண்டை வீட்டுக்காரர்களுடன்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் எப்போதும், ‘‘உங்கள் நண்பர்களை மாற்றிக் கொள்ள முடியும். அண்டை வீட்டுக்காரர்களை மாற்றிக் கொள்ள முடியாது’’ என்ற ஆங்கில பழமொழியை கூறுவார். அண்டை வீட்டுக்காரர்களுடன் நட்போடு இருந்தால்தான், எப்போதுமே ஆத்திர அவசரத்துக்கு உதவியாக இருப்பார்கள். அதே நிலைதான், அண்டை நாடுகளோடும், அண்டை மாநிலங்களோடும் மேம்படுத்த வேண்டிய நல்லுறவு ஆகும்.

மறைந்த முதல்–அமைச்சர் பெருந்தலைவர் காமராஜர், தன்னுடைய அன்பான போக்கினால் அண்டை மாநிலங்களோடு நல்லுறவை வளர்த்து வந்தார். மறைந்த முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். அண்டை மாநில நட்புக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கினார். அண்டை மாநிலங்களை அவர் பகைத்ததே இல்லை. ஆந்திராவில் என்.டி.ராமராவ் முதல்–மந்திரியாக இருந்தபோது, அவர்கள் இருவருக்கும் இடையேயுள்ள ஆழ்ந்த நட்பின் காரணமாக, சென்னைக்கு குடிநீர் சப்ளை செய்ய பேருதவியாக இருக்கும், ‘தெலுங்கு கங்கை திட்டம்’ என்று அழைக்கப்படும் ‘கிருஷ்ணா நதிநீர் திட்டம்’ கொண்டு வரப்பட்டது. இருவரும் அன்போடு தொடங்கி வைத்த திட்டம் தான் இன்றைக்கும், ஆந்திராவுக்கும், சென்னைக்கும் ஒருசேர பயனளிக்கிறது. இதுபோலத்தான், கர்நாடக மாநிலத்தில் குண்டுராவ், ராமகிருஷ்ண ஹெக்டே போன்றோர் முதல்–மந்திரிகளாக இருந்தபோது, நட்பின் அடிப்படையிலேயே காவிரி நீர் பிரச்சினையை பலமுறை சுமுகமாக தீர்த்து வைத்தார். கேரளாவிலும் ஏ.கே.அந்தோணி, நாயனார், கருணாகரன் ஆகியோருடன் அவருடைய ஆழ்ந்த நட்பு பல பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பேருதவியாக இருந்தது.

மொத்தத்தில், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் அனைத்தும் சகோதர மாநிலங்கள்தான். இந்த மாநிலங்களில் உள்ள முதல்–மந்திரிகளுக்கு இடையே நல்லநட்பு இருந்தால், அது அரசிடமும், மக்களிடமும் நிச்சயம் எதிரொலிக்கும். அன்பு மேலோங்கி இருந்தால் மற்ற பிரச்சினைகள் அப்படியே ஆழ்ந்துபோகும். அதன் ஒரு தொடக்க முயற்சியாக முதல்–அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தற்போது சென்னை நகரின் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க, அமராவதி சென்று ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடுவை சந்தித்து, உடனடியாக 5 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட கோரிக்கை விடுத்திருக்கிறார். சந்திரபாபு நாயுடுவும், ‘‘ஒப்பந்தப்படி ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம்தான் 5 டி.எம்.சி. தண்ணீர் தரவேண்டும். நாங்கள் ஏற்கனவே ஒரு டி.எம்.சி. தண்ணீர் தந்துவிட்டோம். மேலும், 1.5 டி.எம்.சி. தண்ணீர் தர நடவடிக்கை எடுக்கிறோம்’’ என்று உறுதிஅளித்துவிட்டு, மீதமுள்ள 2.5 டி.எம்.சி. தண்ணீரை பெற தெலுங்கானா முதல்–மந்திரியையும், கிருஷ்ணா நதிநீர் மேலாண்மை வாரிய அதிகாரிகளையும் தொடர்புகொள்ள கூறியிருக்கிறார். இந்த நதிநீர் பங்கீடு ஒப்பந்தப்படி, தமிழ்நாடு 12 டி.எம்.சி. தண்ணீரை பெறவேண்டும். இதில், 5 டி.எம்.சி.யை ஆந்திராவிடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம். மீதமுள்ள தண்ணீரை மராட்டியம், கர்நாடகம் மாநில ஒதுக்கீட்டில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று இருக்கிறது. முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எடுத்துள்ள முயற்சி, நிச்சயமாக ஒரு நல்ல தொடக்கம். இதேமுயற்சியை தெலுங்கானா, மராட்டியம், கர்நாடக முதல்–மந்திரிகளுடன் பேசி, சென்னை மக்களின் தாகம் தீர்க்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுபோல, கோவைக்கு தண்ணீர் தரும் சிறுவாணி அணை வறண்டுபோய்விட்டது. இதற்கு கேரள மாநிலம் பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட கேரள முதல்–மந்திரியுடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், அண்டைமாநிலங்களின் நட்புதான் பல பிரச்சினைகளை தீர்க்க உதவும் என்ற வகையில், தமிழக முதல்–அமைச்சர், ஆந்திர முதல்–மந்திரியோடு தொடங்கிய இந்த பேச்சுவார்த்தையை மற்ற முதல்–மந்திரிகளுடனும் தொடர்ந்து நடத்தி, எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரு சுமுகத் தீர்வு காண வேண்டும் என்பதே இந்த தைத்திருநாளில் தமிழக மக்களின் தணியாத ஆசையாகும்.


Next Story