தமிழகத்தின் உணர்வு வெளிப்பாடுதான் ஜல்லிக்கட்டு போராட்டம்


தமிழகத்தின்  உணர்வு  வெளிப்பாடுதான் ஜல்லிக்கட்டு  போராட்டம்
x
தினத்தந்தி 18 Jan 2017 8:30 PM GMT (Updated: 2017-01-18T19:01:20+05:30)

தமிழ்நாடு மட்டுமல்லாமல், புதுச்சேரியிலும் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ஒட்டுமொத்த மக்களின் உணர்ச்சிகள் பொங்கியெழுந்ததால் பற்றி எரிந்துக் கொண்டிருக்கிறது.

மிழ்நாடு மட்டுமல்லாமல், புதுச்சேரியிலும் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் ஒட்டுமொத்த மக்களின் உணர்ச்சிகள் பொங்கியெழுந்ததால் பற்றி எரிந்துக் கொண்டிருக்கிறது. தமிழ் சமுதாயத்தின் அடையாளமான பொங்கல் பண்டிகை என்பது ஒருநாள் கொண்டாட்டமல்ல, மூன்று நாட்கள் மகிழ்ச்சி கொண்டாட்டமாகும். முதல்நாள் ‘‘பொங்கலோ பொங்கல்’’ என்று ஆனந்த கூத்தாடும் நாள். இரண்டாம் நாள் தனக்கு பேருதவியாக இருந்த மாட்டுக்கு பொங்கலிடும் மாட்டு பொங்கல், வீரமிக்க தமிழர்கள் காலம்காலமாக ‘ஏறுதழுவுதல்’ என்றபெயருடன் சீறிவரும் மாட்டைத்தழுவி அடக்கும் ஜல்லிக்கட்டு அன்றுதான் நடக்கும். 3–ம் நாள் காணும் பொங்கல். காலம்காலமாக நடந்து வந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி, 2006–ம் ஆண்டு மதுரை உயர்நீதிமன்ற கிளை ஜல்லிக்கட்டை நடத்தக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்ததையொட்டி, தொடர்ந்து நீதிமன்றங்களில் நடந்த நெடிய போராட்டங்களினால் பல நிபந்தனைகளுடன் நடத்தப்பட்டது.

2011–ம் ஆண்டு மத்திய அரசாங்கம், காளைமாட்டை காட்சியாக இதுபோல விளையாட்டுக்காக பயன்படுத்த தடைசெய்யும் வகையில், வித்தைக்காட்ட தடைவிதிக்கப்பட்ட விலங்குகளின் பட்டியலில் காளைமாட்டையும் சேர்த்து விட்டது. இதனால் காளைமாடுகளை ஜல்லிக்கட்டில் பயன்படுத்த ஒரு மறைமுகத்தடை ஏற்பட்டது. இதேபோல், மீண்டும் 2014–ம் ஆண்டு மே மாதம் 7–ந்தேதி ஜல்லிக்கட்டு நடத்த நிரந்தர தடையை விதித்து தீர்ப்பு கூறியது. கடந்த 2 ஆண்டுகளாக போட்டிகள் நடத்தப்படாதநிலையில், இந்தஆண்டும் அந்தத் தடை அமலில் இருந்ததால், சட்டப்பூர்வமான முறையில் நடத்தப்படவில்லை. ஆனாலும், பல இடங்களில் தடையைமீறி ஜல்லிக்கட்டு நடந்தது. பலஇடங்களில் கைது நடவடிக்கைகளும் நடந்தது. இதை எதிர்த்து அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் மட்டும் போராட்டம் இல்லாமல், தமிழ்நாட்டிலுள்ள அனைத்து ஊர்களிலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் கிளர்ந்துஎழுந்துள்ளது. சென்னை உள்பட பல இடங்களில் நேற்று முன்தினம் காலைதொடங்கிய இந்த போராட்டத்தில் தொடர்ந்து ஏராளமான மாணவ–மாணவிகள் இரவிலும் கொட்டும் பனியில் அப்படியே அசையாமல் உட்கார்ந்து போராடிக் கொண்டே இருந்தார்கள். 1965–ம் ஆண்டு ‘இந்தி எதிர்ப்பு’ போராட்டத்தின் போது எப்படி மாணவர்கள் ஒற்றுமை ஓங்கியிருந்ததோ, அதுபோல ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டமும் இப்போது வலுத்துவிட்டது. ஆனால், வன்முறைக்கு சிறிதும் இடமில்லாமல், தமிழர்களின் உணர்வு வெளிப்பாடாகத்தான் போராட்டம் நடக்கிறது.

மாணவர்களுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த தமிழகமே ஒன்றாக களத்தில் இறங்கியுள்ளது. மாணவர்கள், பெற்றோர்கள், விவசாயிகள், பணியில் இருப்பவர்கள் என்று ஒருதரப்பும்கூட பாக்கியில்லாமல் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில், வீதிக்குவந்து போராட்டம் நடத்தும் தமிழக மக்களின் உணர்வுகளை நிச்சயமாக மத்தியஅரசாங்கம் மதித்தே ஆக வேண்டும். இன்னும் எந்த நடவடிக்கைகளையும் எடுக்காமல் அமைதி காப்பதில் எந்தவிதபயனுமில்லை. போராட்டத்தில் களத்தில் இருப்பவர்கள் சில கோரிக்கைகளைத்தான் கூறுகிறார்கள். ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் காட்சி விலங்குகள் பட்டியலில் இருந்து காளையை இப்போதே எடுக்க வேண்டும். அடுத்தது இதுதொடர்பாக அவசர சட்டம் உடனடியாக பிறப்பிக்க வேண்டும். அமெரிக்காவில் வெர்ஜினியாவில் நார்போல்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ‘பீட்டா அமைப்பு’ ஜல்லிக்கட்டுக்கு எதிராக இருக்கிறது. அதை நிச்சயமாக தடை செய்ய வேண்டும். அனைத்துக்  கட்சி எம்.பி.க்களும் ஒன்றாக சென்று பிரதமரை சந்தித்து அவசர சட்டத்துக்கு அழுத்தம் கொடுக்கவேண்டும். தமிழக சட்டசபைகூடி இதற்காக தீர்மானம் நிறைவேற்றவேண்டும். இந்தப் போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை நிபந்தனையின்றி விடுதலைசெய்யவேண்டும். ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றத்தின் அனுமதியை பெறவும், மத்திய–மாநில அரசாங்கங்கள் முயற்சிக்கவேண்டும். தமிழகத்தின் உணர்வுகளை மதிக்க இந்த கோரிக்கைகளை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றியே தீர வேண்டும். அமைதி நிலவும் தமிழ்நாட்டில், ஜல்லிக்கட்டு பிரச்சினை பெரிய சட்டம்–ஒழுங்கு பிரச்சினையாக மாறிவிடக் கூடாது. அவர்களின் ஒட்டுமொத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற நிலையில், மத்திய அரசாங்கம் இனியும் அமைதியாக இருப்பதில் பயனில்லை. ‘காட்டுத்தீ’ பற்றி எரிவது போல வேகமாக பரவிக் கொண்டிருக்கும் மக்களின் ‘உணர்வு தீ’ கோரிக்கைகள் நிறைவேறாமல் அணையாது.

Next Story