சிறுவாணியும், பவானியும்


சிறுவாணியும்,  பவானியும்
x
தினத்தந்தி 19 Jan 2017 9:00 PM GMT (Updated: 2017-01-19T19:46:11+05:30)

கோயம்புத்தூர் மக்களுக்கு எப்போதுமே, ‘சிறுவாணி தண்ணீரைக் குடிப்பவர்கள் நாங்கள், இதன் இனிமைக்கு ஈடு இணையே கிடையாது’ என்று நெஞ்சை நிமிர்த்திச்சொல்லும் பெருமை உண்டு.

கோயம்புத்தூர் மக்களுக்கு எப்போதுமே, ‘சிறுவாணி தண்ணீரைக் குடிப்பவர்கள் நாங்கள், இதன் இனிமைக்கு ஈடு இணையே கிடையாது’ என்று நெஞ்சை நிமிர்த்திச்சொல்லும் பெருமை உண்டு. 1889–ம் ஆண்டு திட்டமிடப்பட்டு, 1929–ம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வந்தது சிறுவாணித் திட்டம். 1889–ம் ஆண்டில் எஸ்.பி.நரசிம்ம நாயுடு என்ற காங்கிரஸ் உறுப்பினர் சிறுவாணி மலைக்கும், அங்குள்ள முத்துக்குளம் என்ற நீர்வீழ்ச்சிக்கும் சென்றார். அங்கு சென்ற நேரத்தில், சுத்தமான, சுவையான தண்ணீரை பார்த்து பருகியதுடன், இங்கிருந்து கோவைக்கு இந்த தண்ணீரை திருப்பி விட்டால் தானாகவே வேகமாக பாய்ந்து வந்துவிடுமே, கோவை மக்களும் பயன் அடைவார்களே என்ற எண்ணம் அவருக்கு உதித்தது. உடனடியாக இந்தத் திட்டத்தை எப்படி நிறைவேற்றுவது? என்றொரு கருத்துருவை அரசுக்கு அனுப்பினார். ஆனால், 40 ஆண்டுகள் கழித்துத்தான் அந்தத் திட்டம் உயிர்பெற முடிந்தது. 1925–ல் கோவை நகரசபை தலைவராக இருந்த சி.எஸ்.ரத்தினசபாபதி முதலியார், ரூ.41 லட்சம் செலவில் இந்தத் திட்டத்தை தீட்டினார். 1929–ல் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டபோது, ஒரு சில லட்சங்கள் கூடுதலாகச் செலவானது. முத்துக்குளம் பகுதியிலிருந்து கோவைக்கு திருப்பி விடப்பட்டுள்ள தண்ணீர் தான் சிறுவாணி தண்ணீர்.

1973–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 19–ந் தேதி கோவை நகராட்சிக்கு குடிநீர் தேவைகளுக்காக ஆண்டுக்கு 1,300 மில்லியன் கனஅடி தண்ணீர் சப்ளை செய்யும் வகையில் தமிழக அரசுக்கும், கேரள அரசாங்கத்துக்கும் இடையேயான ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில், தொடர்ந்து கோவைக்கு சிறுவாணி தண்ணீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது. இந்த 90 ஆண்டுகளில் இதுவரை சிறுவாணி குடிநீர் திட்டத்தின்கீழ் தண்ணீர் சப்ளை நிறுத்தப்பட்டதில்லை. கடந்த சில நாட்களாக இந்த குடிதண்ணீர் சப்ளை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால், கோவை மக்கள் கடும் பாதிப்பில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். தற்போது சிறுவாணி தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பில்லூர் அணை தண்ணீர்தான் கோவைக்கு கைகொடுக்க வேண்டும். இது ஒருபுறமிருக்க, கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட மக்களின் தாகம் தீர்க்கும் தண்ணீராகவும், விவசாயத்துக்கான உயிர்தண்ணீராகவும் விளங்கும் பவானி ஆற்று தண்ணீரையே தமிழ்நாட்டுக்கு வராமல் தடுக்கும் வகையில் உடனடியாக தேக்குவட்டி, மஞ்சகண்டி ஆகிய இடங்களில் 2 தடுப்பு அணைகளை கட்டும் முயற்சிகளை கேரளா அரசாங்கம் தொடங்கியுள்ளது. பவானி ஆற்றின் தொடக்கமே தமிழ்நாடு தான். நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தியாகி, கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்திலுள்ள அட்டப்பாடி பள்ளத்தாக்கு வழியாக ஓடி முக்காலி என்னும் இடத்தில் கிழக்குநோக்கி திரும்பி தமிழகத்தில் நுழைகிறது. வழியில் பில்லூர் அணையை நிறைக்கும் இந்த தண்ணீர்தான் கோவை மக்களுக்கு குடிநீர் சப்ளை செய்யும் தண்ணீராகவும் வருகிறது.

முதலில் இந்த 2 இடங்களிலும் தடுப்பணைகளைக்கட்டி, அடுத்து சாலையூர், சீரக்கடவு, பாடவயல், சாவடியூர் ஆகிய மேலும் 4 இடங்களிலும் தடுப்பணைகளை கட்டுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. இந்த 6 தடுப்பணைகளையும் கட்டிவிட்டால், நிச்சயமாக பவானி ஆறு பாலைவனமாகி, 3 மாவட்ட மக்களுக்கும் குடிதண்ணீருக்கும், விவசாயத்துக்கும் ஒருசொட்டு தண்ணீர்கூட இல்லாநிலை உருவாகி விடும். ஆகவே, இந்த முயற்சிகளையெல்லாம் உடனடியாக கேரள அரசு நிறுத்த வேண்டும் என்று கோரும் நடவடிக்கைகளை தமிழக அரசு உடனே எடுக்க வேண்டும். முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எந்த பிரச்சினையென்றாலும், உடனடியாக நேரில் போய் தன்கோரிக்கைகளை சொல்கிறார் என்ற ஒரு நல்லபெயர் அவருக்கு இருக்கிறது. சென்னை குடிநீர் தேவைக்காக ஆந்திராவுக்கு சென்று முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடுவை சந்தித்து ஓரளவுக்கு தண்ணீர் பெற நடவடிக்கைகளை எடுத்தார். நேற்றும் ஜல்லிக்கட்டு பிரச்சினைக்காக டெல்லிக்குச் சென்று பிரதமரை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது மேலும் சில கோரிக்கைகளையும் வலியுறுத்தினார். இதே முயற்சியோடு உடனடியாக கேரளா முதல்–மந்திரியையும், தமிழக முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க செல்ல வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் எண்ணமாக இருக்கிறது.

Next Story