உலகையே வியக்கவைத்த தமிழக இளைஞர்கள் பட்டாளம்


உலகையே வியக்கவைத்த தமிழக  இளைஞர்கள் பட்டாளம்
x
தினத்தந்தி 20 Jan 2017 8:30 PM GMT (Updated: 2017-01-20T19:53:20+05:30)

‘‘தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு’’ என்று நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அன்று பாடியதை, இன்று நிரூபித்து விட்டார்கள் தமிழக இளைஞர்கள் பட்டாளம்.

‘‘தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு’’ என்று நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அன்று பாடியதை, இன்று நிரூபித்து விட்டார்கள் தமிழக இளைஞர்கள் பட்டாளம். ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் வீரவிளையாட்டாகும். ஜல்லிக்கட்டு விளையாட்டின் உன்னதமான தார்ப்பரியத்தை புரிந்துகொள்ளாமல், உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளின் காரணமாக ஜல்லிக்கட்டு கடந்த 3 ஆண்டுகளாக நடைபெறவில்லை. இந்தஆண்டு இந்தப்பிரச்சினையை முதலில் மாணவர்களும், பிறகு இளைஞர்களும், தொடர்ந்து ஒட்டுமொத்த தமிழர்களும் கையில் எடுத்து விட்டார்கள். ஜல்லிக்கட்டு நடத்தும் வரை நாங்கள் போராடுவோம் என்று எல்லோரும் வீதியில் அமர்ந்துவிட்டார்கள். அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் கடந்த 5 நாட்களாகவும், சென்னை மெரினா கடற்கரை உள்பட தமிழ்நாட்டில் ஒரு இடம்பாக்கியில்லாமல், அனைத்து நகரங்களிலும் 300–க்கும் மேற்பட்ட இடங்களில் இரவும், பகலும், சுட்டெரிக்கும் வெயிலையும், கடும்பனியையும் பொருட்படுத்தாமல், தூக்கமில்லாமல் அப்படியே உட்கார்ந்து கொண்டு இளைஞர்கள் போராடி வருகிறார்கள். மற்ற போராட்டங்களில் வன்முறை, ஒழுங்குமீறல், அத்துமீறல், குழப்பங்கள் இருக்கும். ஆனால், எங்கள் தமிழ்ச்சமுதாய இளைஞர்கள் நடத்திய இந்தப் போராட்டத்தில், ‘‘காந்தி அன்று நடத்திய அறவழிப் போராட்டத்தின் பிரதிபலிப்புதான் தெரிந்தது’’. இளம்பெண்களும், ஆண்களும் ஜல்லிக்கட்டு நடத்துவது ஒன்றே எங்கள் குறிக்கோள் என்றஅடிப்படையில், வேறுசிந்தனைக்கும் இடம் கொடுக்காமல் தங்கள் லட்சியத்தை அடையும்வரை போராடுவோம் என்று ஒருஅணியில் திரண்டிருப்பதை பார்த்தால், ஒட்டுமொத்த தமிழகமும் இவர்கள் அல்லவோ எங்கள் செல்வங்கள் என்று பெருமைப்பட வைக்கிறது.

உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்கள் தாங்கள் வசிக்கும் நாடுகளில் போராட்டம் நடத்தி உணர்வுகளை வெளிப்படுத்தினார்கள். பச்சிளங் குழந்தைகளான மாணவர்களை பெற்றோர்களே அழைத்து வந்து ஈடுபட வைக்கும் காட்சி நெஞ்சை நெகிழ வைக்கிறது. வசதியில்லாத குடும்பங்களைச் சேர்ந்தவர்களும், இந்த அரும்பெரும் செல்வங்களுக்கு டீ போட்டுக் கொடுப்பதையும், உணவைக் கொண்டு வந்து கொடுப்பதையும் பார்க்கும்போது, ‘இதுதாண்டா தமிழர்’ என்று உச்சியில் நின்று முழங்க வேண்டும் என்பது போலிருக்கிறது. எங்களுக்கு அரசியல் வேண்டாம் என்று அரசியல் ஒருதுளிகூட கலந்து விடாமல் கவனமாக இருக்கிறார்கள். இளைஞர்கள் ஒருபுறம் போற்றுதலுக்குரியவர்கள் என்பதோடு மட்டுமல்லாமல், முதல்–அமைச்சர் பன்னீர்செல்வம் எடுத்த உடனடி நடவடிக்கைகளும் பாராட்டுதலுக்குரியவை. வெறுமனே கடிதம் எழுதிக்கொண்டிருக்காமல் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து ஜல்லிக்கட்டுக்கு அனுமதி தர வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு அழுத்தம் கொடுத்தார். பிரதமரும் தமிழகஅரசின் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்து விட்டார். நேற்று காலையில் டெல்லியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டுக்கு வகைசெய்யும் அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பிக்கும் என்று பிரகடனப்படுத்தி விட்டார்.

மத்திய அரசின் மிருகவதை தடுப்புச்சட்டத்தில் பெரியளவில் திருத்தம் கொண்டு வர முடிவுசெய்து, அவசர சட்டமாக பிறப்பிக்க தமிழக அரசு முடிவெடுத்து விட்டது. இதற்கு மத்திய அரசின் சுற்றுசூழல் அமைச்சகம்  பரிந்துரை செய்து விட்டது. மேற்கு வங்காள சுற்றுப் பயணத்தை முடித்து விட்டு ஜனாதிபதி நேற்று இரவு டெல்லி திரும்பியிருக்கிறார். உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலோடு இன்று அவரது கையெழுத்தை பெற்று, மும்பையில் இருந்து இன்று மாலை சென்னை திரும்பும் தமிழக கவர்னரிடம் அனுப்பி, அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என்ற உறுதியான நம்பிக்கையை தமிழக அரசு கொண்டிருக்கிறது. நானே தொடங்கி வைப்பேன் என்கிறார் முதல்–அமைச்சர். போராடிக் கொண்டிருக்கும் இளைஞர்கள் அவசர சட்டம் பிறப்பிக்கும்வரை எங்களது போராட்டம் தொடரும் என்ற தங்களது கொள்கையை உறுதிபட கூறிவிட்டனர். எனவே, இன்று இரவு அவசரசட்டம் பிறப்பிக்கப்பட்டால், நாளை வாடிவாசல் திறந்து தமிழகம் முழுவதும் மக்களின் உள்ளம் மகிழ ஜல்லிக்கட்டு விளையாட்டு நடக்கும். இளைஞர்கள் நினைத்தால், எதையும் நடத்திக்காட்டுவார்கள் என்ற நம்பிக்கையும், அரசு உறுதியாக இருந்தால் மக்களின் எந்தக்கோரிக்கைகளும் நிறைவேறும் என்ற உறுதியும், தமிழ்ச்சமுதாயத்துக்கு ஏற்பட்டுள்ளது. இந்தப்போராட்டம் வெற்றிபெறும். இதற்கு காரணமாக இருந்த ஒட்டுமொத்த தமிழ் இளைஞர்களுக்கும் ஒருபெரிய பாராட்டு வணக்கம்.Next Story