தேன்கூட்டில் கை வைக்கக்கூடாது பீட்டா


தேன்கூட்டில்  கை  வைக்கக்கூடாது  பீட்டா
x
தினத்தந்தி 22 Jan 2017 9:30 PM GMT (Updated: 22 Jan 2017 5:50 PM GMT)

மாணவர்களின், இளைஞர்களின், ஏன் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் அறவழி போராட்டம் இப்போது தீவிரம் அடைந்துவிட்டது.

மாணவர்களின், இளைஞர்களின், ஏன் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் அறவழி போராட்டம் இப்போது தீவிரம் அடைந்துவிட்டது. பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் அன்று மாட்டை, வீர இளைஞர்கள் தழுவிஅடக்கும் போட்டிதான் ஜல்லிக்கட்டு. 2006–ம் ஆண்டு வரை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தடைகள் இல்லாமல் நடந்து வந்த ஜல்லிக்கட்டு போட்டி, அப்போது தொடரப்பட்ட வழக்கில் இருந்து பல முட்டுக்கட்டைகளை சந்திக்கவேண்டியிருந்தது. 2009–ல் தமிழக அரசு அளித்த உறுதிமொழி, சட்டசபையில் இயற்றிய சட்டம் ஆகியவற்றை ஏற்று, உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தற்காலிக அனுமதி வழங்கியது. இதை பொறுக்கமுடியாத பீட்டா அமைப்பினர், முதலில் உச்சநீதிமன்றத்தில் ஒருவழக்கை தொடர்ந்தனர். மீண்டும் 2011–ம் ஆண்டு ஒருவழக்கை தொடர்ந்தனர். இப்படி தமிழர்களின் வாழ்வோடு உரசி, இடைஞ்சல்கள் செய்யத்தொடங்கியது பீட்டா அமைப்பு. அகிம்சையின் வழியில் எடுத்துக்காட்டாய் விளங்கும் எங்கள் இளைஞர்கள், ஏற்கனவே 2 ஆண்டுகள் நீதிமன்ற தீர்ப்பால் ஜல்லிக்கட்டு விளையாட்டு இல்லாத நிலையில், இந்த ஆண்டும் அது நடக்கமுடியாத நிலை வந்தபோது தாங்கிக்கொள்ள முடியாமல் போராட்டத்தில் குதித்து இருக்கிறார்கள். மாணவர்கள், இளைஞர்கள் மட்டுமல்லாமல், சின்னஞ்சிறு மழலைகள், பெண்கள், மூத்த குடிமக்கள் என்று ஒட்டுமொத்த தமிழகமே போராட்டக்களத்தில் இரவும், பகலுமாக இருக்கிறார்கள். இப்படியொரு போராட்டம் உலகில் எங்கும் நடந்ததில்லை என்ற வகையிலான அகிம்சை போராட்டம் இது. தமிழகத்தின் ஒட்டுமொத்த போராட்ட உணர்வுகளின் எதிரொலியாக தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தாலும், இது போதாது நிரந்தர தீர்வு காணும் வரையில் போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ள இளைஞர் பட்டாளம் போராட்டத்தை தீவிரப்படுத்திவிட்டது.

இந்த போராட்டத்தில், ‘‘ஜல்லிக்கட்டு வேண்டும்’’ என்ற முழக்கத்தை முழங்கும் தமிழர் சமுதாயத்தின் அடுத்த கோரிக்கை, ‘‘பீட்டாவை தடை செய்ய வேண்டும்’’ என்பதுதான். யார் இந்த பீட்டா?, பிராணிகளை அறவழியில் நடத்தும் மக்கள் (பீப்பிள் பார் எத்திகல் டிரீட்மெண்ட் ஆப் அனிமல்ஸ்) என்ற பெயரில் விலங்கு வகைகளை காப்பதற்காக உருவாக்குகிறோம் என்று 1980–ம் ஆண்டு மார்ச் மாதம் 22–ந் தேதி அமெரிக்காவின் வெர்ஜினியாவில் உள்ள நார்போல்க் நகரை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்ட அமைப்புதான் இது. விலங்குகளின் நலனுக்கே இவர்கள்தான் பாதுகாவலர்கள் போல செயல்படும் இந்த அமைப்பு, தமிழ்நாட்டில் உள்ள களநிலவரம் புரியாமல், ஜல்லிக்கட்டுக்கு எதிராக செயல்படுகிறது. ஜல்லிக்கட்டு விளையாட்டு நடந்தால்தான் எங்கள் நாட்டு காளைகளின் இனம்பெருகும் என்பது எங்கோ அமெரிக்காவில் உருவான இந்த அமைப்புக்கு நிச்சயம் தெரியாது. இந்தியாவிலும் 2000–ம் ஆண்டு முதல் இந்த அமைப்பு இருக்கிறது. இப்போது தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்திருக்கிறது. ‘தேன்கூட்டில் கை வைப்பதை போல’, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தால் அதை எதிர்ப்பதற்கான சட்டவழிமுறைகள் குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுப்போம் என்று ஏற்கனவே கூறியிருக்கிறது பீட்டா.

தமிழ்நாட்டில் இப்போது கடும் புயல் வீசிக்கொண்டு இருக்கிறது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்ட தடைக்கே முழுக்காரணம் பீட்டா அமைப்பும், விலங்குகள் நலவாரியமும்தான் என்ற கோபம் தமிழக இளைஞர்களிடையே இருக்கிறது. தமிழக மக்களின் சக்தியை எல்லோரும் பார்த்துவிட்டார்கள், இனிமேலும் ஜல்லிக்கட்டை எதிர்த்து ஏதாவது நடவடிக்கையில் பீட்டா இறங்கினால், தமிழக மக்கள் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள். நடந்துவரும் போராட்டத்தில் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்பதுதான் 2–வது பெரிய கோரிக்கையாக இருக்கிறது. முதல் கோரிக்கையாக ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு என்று 7 நாட்களாக நடத்தும் அறவழி போராட்டத்தில் 2–வது கோரிக்கையின் சத்தமும் தமிழகத்தோடு நிற்காது. இந்தியா முழுவதும் பீட்டா அமைப்புக்கு எதிரான சக்தியாக பெரிய அளவில் உருவாகிவிடும். எனவே, இனியும் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தலையிடாமல் ஒதுங்கி நிற்பதுதான் பீட்டா அமைப்புக்கு நல்லது.

Next Story