வேதனைதரும் விளைவுகள் ஏற்பட்டு விட்டதே


வேதனைதரும் விளைவுகள் ஏற்பட்டு விட்டதே
x
தினத்தந்தி 23 Jan 2017 8:30 PM GMT (Updated: 23 Jan 2017 6:28 PM GMT)

இது எங்கள் கலாசாரம், இது எங்கள் பாரம்பரியம், இது எங்கள் பண்பாடு. அதுதான் காலம்காலமாக எங்கள் மூதாதையர் காலத்திலிருந்து நடந்துவந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு.

து எங்கள் கலாசாரம், இது எங்கள் பாரம்பரியம், இது எங்கள் பண்பாடு. அதுதான் காலம்காலமாக எங்கள் மூதாதையர் காலத்திலிருந்து நடந்து வந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு. அதற்கு ஒரு தடையென்றால், தாங்கிக் கொள்ள முடியாது என்று ஒட்டுமொத்த தமிழ்நாடும் போராட்டக்களத்தில் குதித்தது. சென்னை உள்பட பல இடங்களில் போராடிய மாணவர்களுக்கு, இளைய சமுதாயத்தினருக்கு, ஜல்லிக்கட்டு விளையாட்டை நேரில் பார்த்த அனுபவம் நிச்சயமாக இருந்திருக்காது. நேரில் பார்க்காவிட்டாலும் எங்கள் சங்க இலக்கியங்களில் ‘ஏறுதழுவுதல்’ என்ற பெயரில் ஜல்லிக்கட்டு நடந்திருக்கிறது, இது எங்கள் தமிழர் பண்பாடு, தமிழர் கலாசாரம், நாங்கள் எல்லாம் தமிழர்கள், என்ற உணர்வுகள் மேலோங்கி இருக்கும் நிலையில், தமிழர் உணர்வு, தமிழ்நாடு என்ற பற்று, இன்றைய இளைஞர்களுக்கு ஏற்பட்டிருப்பது, தமிழ் உள்ளங்களை நிச்சயமாக சிலிர்க்க வைத்திருக்கிறது. ஆங்கில மோகம் இளைஞர்களை ஆட்படுத்திவிட்டதே, தமிழ் உணர்வு மங்கிவிட்டதே என்று கவலைப்பட்டு கொண்டிருந்தவர்களுக்கு, ஒவ்வொரு இளைஞரின் உள்ளத்திலும் ஆழமாக ஊடுருவியிருந்த இந்த தமிழ் உணர்வின் வெளிப்பாடு மிகவும் மகிழ்ச்சியளித்தது. கடந்த 7 நாட்களாக இரவு–பகல் பாராமல், கடும் வெயில் அடித்தாலும், மழை பெய்தாலும், பனி பெய்தாலும், எங்கள் கலாசாரத்தை மீட்டெடுப்போம், ஜல்லிக்கட்டு தடைக்கு நிரந்தர தீர்வு காணுவோம் என்று இளைஞர்கள் போராடிக்கொண்டுவந்தனர். அவர்கள் உள்ள உணர்வுகளை புரிந்துகொண்ட முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும், தமிழக அரசும் துரிதவேகத்தில் இந்த தடையை நீக்கும் வகையிலான அவசர சட்டத்தை 2 நாட்களுக்கு முன்பு பிறப்பித்தனர். தடைநீங்கியது, போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொள்ளுங்கள் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மாணவர்கள் எங்களுக்கு அவசர சட்டம் தேவையில்லை, இது தற்காலிகம்தான், நிரந்தர சட்டம்தான் தேவை என்று தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மீண்டும் முதல்–அமைச்சர் சட்டசபை கூடியவுடன், இந்த அவசர சட்டத்துக்கு பதிலாக மாற்றுசட்டம் அதாவது, நிரந்தர சட்டம் நிறைவேற்றப்படும் என்று கூறினாலும், அதை போராட்டக்காரர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மதுரை செல்லூரில் 5 நாட்களாக ரெயில் மறியல் போராட்டம் நடந்ததால், ரெயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. 40–க்கும் மேற்பட்ட ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் பெரிதும் பாதிப்புக்குள்ளானார்கள்.

இந்த நிலையில், நேற்று அதிகாலையில் போராட்டக்காரர்களை, தமிழகம் முழவதும் கையில் லத்தியில்லாமல் அப்புறப்படுத்தும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டனர். பல போலீஸ்காரர்கள் அது அகிம்சை போராட்டம் என்றால், நாங்கள் எடுப்பதும் அகிம்சை நடவடிக்கை, யாரையும் அடிக்காமல் அப்புறப்படுத்துவோம் என்று பெருமைப்பட கூறினார்கள். யார் கண்பட்டதோ தெரியவில்லை. பல இடங்களில் வன்முறை வெடித்துவிட்டது. போலீஸ்காரர்களும் தாக்கப்பட்டனர். போராட்டக்காரர்களும் தாக்கப்பட்டனர். சென்னையில் போலீஸ்காரர்களின் வாகனங்கள் உள்பட பல வாகனங்கள் தீவைக்கப்பட்டன. போலீசார் சிறைவைக்கப்பட்டனர். இப்போது இருதரப்பிலும் ஒருவர் மீது ஒருவருக்கு கடும்கோபம் கிளம்பி விட்டது. அமைதியான தமிழ்நாடு, பதற்றமான தமிழ்நாடாகிவிட்டது. போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுவிட்டது. இந்த நிலையில், நேற்று மாலையில் சட்டசபை அவசரமாக கூடி, அவசர மசோதாவுக்கு பதிலாக, மாற்று சட்டமசோதா நிறைவேற்றப்பட்டது. ஆக, இந்த பிரச்சினைக்கு ஒரு விடிவுகாலம் தொடங்குவதற்கான வழி பிறந்துவிட்டது. அமைதி பூங்காவாக விளங்கிய தமிழ்நாட்டில் இப்படியொரு வேதனைதரும் விளைவுகள் ஏற்பட்டுவிட்டதே என்று தமிழ் சமுதாயம் கண்ணீர் வடிக்கிறது. உடனடியாக இந்த போராட்ட தீ அணைக்கப்பட்டு, மீண்டும் அமைதிதென்றல் வீச தமிழக அரசு, போலீசார், மாணவர்கள், இளைஞர்கள் உள்பட போராட்டங்களில் ஈடுபட்ட அனைவரும் உறுதிபூண்டு தேவையான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். தமிழகம் என்றுமே அமைதி பூங்காவாக திகழட்டும். நடந்தவற்றை மறந்து நல்லவற்றை தொடர்வோம்.


Next Story