மற்ற மாநிலங்களிலும் ஜல்லிக்கட்டு பாதிப்பு


மற்ற மாநிலங்களிலும் ஜல்லிக்கட்டு பாதிப்பு
x
தினத்தந்தி 24 Jan 2017 9:30 PM GMT (Updated: 24 Jan 2017 1:12 PM GMT)

தமிழர்களின் கலாசாரமாகவும், பண்பாடாகவும், பாரம்பரியமாகவும், பண்பாட்டு நெறிமுறையாகவும், வழிப்பாட்டு நெறிமுறையாகவும் சரித்திர காலம்தொட்டு எந்த வித இடையூறும் இல்லாமல்

மிழர்களின் கலாசாரமாகவும், பண்பாடாகவும், பாரம்பரியமாகவும், பண்பாட்டு நெறிமுறையாகவும், வழிப்பாட்டு நெறிமுறையாகவும் சரித்திர காலம்தொட்டு எந்த வித இடையூறும் இல்லாமல், எல்லோரும் உள்ளம் மகிழ நடத்தப்பட்டு வந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு பெரிய பாறாங்கற்களை கொண்டு முட்டுக்கட்டைப்போட்டது போன்ற செயல் 2011–ம் ஆண்டு ஜூலை 11–ந் தேதி ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் நடந்தபோது மேற்கொள்ளப்பட்டது. அந்தநாளில் அப்போதைய மத்திய மந்திரி ஜெயராம் ரமேஷ், செய்த காரியத்தின் விளைவாகத்தான், இன்று ஜல்லிக்கட்டுக்கு தடையாக அமைவதற்கு காரணமாக அமைந்துவிட்டது. அந்தநாளில் மிருகவதை சட்டம் 1960–ன் கீழ் ஒரு அறிவிக்கை வெளியிடப்பட்டது. இந்த அறிவிக்கையின்கீழ், சிங்கம், புலி, கரடி, சிறுத்தை, குரங்கு போன்ற விலங்குகளை காட்சி பொருளாக அடைத்துவைத்து வித்தைக்காட்டுவதை மத்திய அரசு தடைசெய்தது. அதன்காரணமாகத்தான் இந்த மிருகங்களையெல்லாம் சர்க்கசில் பார்க்கமுடியாமல் போய்விட்டது. இதாவது பரவாயில்லை. இந்த பட்டியலோடு, காளையையும் தேவையில்லாமல் சேர்த்ததால்தான் ஜல்லிக்கட்டு விளையாட்டு நடத்த முடியாத சூழ்நிலைக்கு அச்சாரமாக அமைந்துவிட்டது. கடந்த ஆண்டு ஜனவரி 7–ந் தேதி காட்சி பட்டியலில் இருந்து காளையை நீக்கும் அரசாணையை பா.ஜ.க. அரசாங்கம் வெளியிட்டது. இதற்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்தது. இதுபோன்ற சூழ்நிலைகளால் 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்த முடியாமல் போய்விட்டது.

இந்த நிலையில், முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான தமிழக அரசு எடுத்த நல்ல முயற்சியால், அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து, சட்டசபையில் அதற்கான மாற்றுசட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில், ஜல்லிக்கட்டுக்கு இருக்கும் தடை இப்போது முழுமையாக நீங்கிவிட்டது. ஆனால், இந்த சட்டம் அமலுக்கு வந்த பிறகு, இதை எதிர்த்து யாராவது உச்சநீதிமன்றத்துக்கு எளிதாக போக வாய்ப்பு இல்லாத நிலை உருவாக்கப்படவேண்டும். இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு ஏற்பட்ட தடையால், தமிழ்நாடு மட்டும் பாதிப்படையவில்லை. எப்படி தைத்திருநாளில் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறதோ, அதுபோல அசாம் மாநிலத்தில் நாம் தை மாதம் என்று சொல்லுவதுபோல, ‘மாக்’ என்ற மாதம் அழைக்கப்படுகிறது. அந்த நாளில் முதல் நாளான ஜனவரி 15–ந் தேதி அங்கு எருமை மாட்டுச்சண்டை நடப்பது வழக்கம். இது அவர்களின் பாரம்பரியம். ‘மோ ஜூஜ்’ என்று சொல்லப்படும் எருமை மாட்டுச்சண்டை விளையாட்டு, இது எங்கள் கலாசாரம் என்று அந்த மாநிலத்தில் சில இடங்களில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறி, எருமை மாட்டுச்சண்டையை நடத்திக்காட்டிவிட்டார்கள். இதுபோல, கர்நாடக மாநிலத்தில் பாரம்பரிய விளையாட்டாக ‘கம்பளா எருது பந்தயம்’ என்று நடத்திவந்தார்கள். சிவபெருமானின் மறு அவதாரமாக கருதப்படும் ‘கத்திரி மஞ்சுநாதா’வுக்கு நன்றி கூறும் வகையில், அறுவடைகாலத்தில் சேறும் சகதியுமான நிலத்தில் விவசாயிகள் எருமை மாடுகளை கூட்டி ஓடவிடும் பந்தயம் நடப்பதுண்டு. பீட்டா அமைப்பு தொடர்ந்த வழக்கால், கர்நாடக உயர்நீதிமன்றம் ஜல்லிக்கட்டு தடையை கருத்தில்கொண்டு, ‘கம்பளா’வுக்கும் தடைவிதித்துள்ளது. தமிழகத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தைப்பார்த்து, கர்நாடக மக்களும் ‘கம்பளா’ பந்தயத்தை நடத்தியே தீரவேண்டும் என்று உறுதியாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப்போட்டிக்கான சட்டத்துக்கு மத்திய அரசாங்கம் உறுதுணையாக இருந்ததுபோல, ‘கம்பளா’ விளையாட்டுக்கும் உதவியாக இருக்கவேண்டும் என்று கர்நாடக முதல்–மந்திரி கூறியிருக்கிறார். ஜல்லிக்கட்டுக்கு எப்போதும் தடையில்லாத நிலை இருந்தால்தான் இதெல்லாம் சாத்தியமாகும். அதற்கேற்ற வகையில், நேற்று உச்சநீதிமன்றத்தில், காட்சிபட்டியலில் இருந்து காளையை நீக்கி வெளியிட்ட அறிவிக்கையை திரும்பப்பெறும் வகையில், இன்று இடைக்கால மனுதாக்கல் செய்வதாக மத்திய அரசு கூறியிருக்கிறது. அந்த அறிவிக்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்புதான் இப்போது நிலுவையில் உள்ளது. அந்த அறிவிக்கையே இல்லையென்றால், வழக்கு இல்லை. தமிழக அரசு நிறைவேற்றியுள்ள சட்டம் சர்வவல்லமை படைத்ததாகிவிடும். ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை என்றால், மற்ற மாநிலங்களுக்கும் தீர்வாக அமைந்துவிடும்.

Next Story