சட்டப்பாதுகாப்புடன் ஜல்லிக்கட்டு விளையாட்டு


சட்டப்பாதுகாப்புடன்  ஜல்லிக்கட்டு  விளையாட்டு
x
தினத்தந்தி 25 Jan 2017 9:30 PM GMT (Updated: 2017-01-25T17:27:52+05:30)

தமிழர்களின் பாரம்பரியச் சின்னமாக, பண்பாட்டுச் சின்னமாக, கலாசாரத்தின் சின்னமாக விளங்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு என்பது, ‘‘சீறிவரும் காளையைத்தழுவி யார் அடக்குகிறார்கள்?

மிழர்களின் பாரம்பரியச் சின்னமாக, பண்பாட்டுச் சின்னமாக, கலாசாரத்தின் சின்னமாக விளங்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டு என்பது, ‘‘சீறிவரும் காளையைத்தழுவி யார் அடக்குகிறார்கள்? என்று வீர இளைஞர்களுக்கு வைக்கும் போட்டிதான்’’. என்வீட்டு ஜல்லிக்கட்டு காளையை எவராலும் அடக்கமுடியாது என்ற பெருமை தங்கள் குடும்பத்துக்கே வரவேண்டும் என்பதற்காக ஜல்லிக்கட்டு காளைகளுக்கு நன்கு பயிற்சிகொடுத்து, குழந்தைகள் போல வளர்க்கும் விவசாயிகள் ஏராளமானவர்கள் தமிழ்நாட்டில் உண்டு. தன் வீட்டில் சாதாரண சாப்பாடு இருந்தாலும், ‘தாங்கள் வளர்க்கும் ஜல்லிக்கட்டு காளைக்கு விசே‌ஷ கவனத்துடன் சத்துமிகுந்த தீவனம் கொடுப்பது இவர்களின் வழக்கம்’. 2011–ம் ஆண்டுவரை தங்குதடையில்லாமல், நடந்துவந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு முதல்தடை வந்ததன் காரணம் சிங்கம், புலி, கரடி போன்ற கடும் விலங்குகள், வித்தைக்காட்டக்கூடாத விலங்குகள் என்ற காட்சிப்பட்டியலில் இருப்பதைப்போல, காளையையும் தேவையில்லாமல் சேர்த்துவிட்டதால்தான். இதை அடிப்படையாகவைத்து, உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் காரணமாக, கடந்த 2 ஆண்டுகளும், இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தாமல் போனநிலை விவசாயிகளுக்கு வருத்தத்தை அளித்தது. பல விவசாயிகள் மழை பொய்த்துப்போனதற்கு காரணமே, மரபைமீறி ஜல்லிக்கட்டுப்போட்டி நடத்தாததுதான் என்று மனம் கலங்கி சொல்கிறார்கள்.

இனி ஜல்லிக்கட்டு போட்டி நடக்க வேண்டுமென்றால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி எதுவும் செய்ய முடியாது. அவசர சட்டம் பிறப்பித்தால்தான் முடியுமென்று கோரிக்கைகள் வலுத்து வந்தன. தமிழக அரசும் ஜல்லிக்கட்டு நடத்தவேண்டுமென்றால், அவசர சட்டம் பிறப்பித்துவிடலாம். ஆனால், அந்த சட்டம் உச்சநீதிமன்றத்தில் யாராவது வழக்கு தொடர்ந்தால் வலுவிழந்து செல்லாமல் போய்விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மிகக்கவனமாக சட்டப்பாதுகாப்புடன் இந்த அவசர சட்டத்தை நிறைவேற்றி நல்ல நடவடிக்கை எடுத்துள்ளது. மாநில அரசு நிறைவேற்றியிருக்கும் இந்த அவசர சட்டத்தில், ஏற்கனவே மத்திய அரசாங்கத்தின் மிருகவதை தடுப்புச்சட்டத்திலுள்ள சில பிரிவுகளில் தமிழ்நாட்டுக்காக திருத்தங்களை கொண்டுவந்து, இதை உள்ளடக்கிய சட்டமாக இருந்தால்தான் நீதிமன்றத்தில் நிற்கும் என்றவகையில், அதற்கான முயற்சிகளையும் தமிழக அரசு எடுத்தது. இதன்படி, மத்திய அரசாங்கத்தின் மிருகவதை தடுப்புச்சட்டத்தில் சில பிரிவுகளில் திருத்தம் கொண்டுவந்து, அதற்கு மத்திய அரசாங்கத்தின் உள்துறை, சுற்றுச்சூழல்துறை ஆகிய துறைகளின் ஒப்புதலும் பெறப்பட்டது. இதுதான் ஜல்லிக்கட்டு நடத்த சரியான நடைமுறை. இதற்கு முன்பு 2009–ம் ஆண்டு தமிழக அரசால் ஜல்லிக்கட்டு நடத்த இயற்றப்பட்ட சட்டம் மத்திய அரசாங்கத்தின் மிருகவதை தடை சட்டத்துக்கு முரணானது என்று உச்சநீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியிருக்கிறார்.

இப்போது மத்திய அரசின் சட்டங்களுக்கு திருத்தம் கொண்டுவந்ததால்தான், இது முறைப்படி சட்டப்பாதுகாப்புடன் நிறைவேற்றப்பட்ட சட்டமாகும். மத்திய அரசாங்கத்தின் மிருகவதை தடுப்புச்சட்டத்தில் 2, 3, 11, 22, 27 மற்றும் 28 ஆகிய பிரிவுகளுக்கு இந்த மாநிலச்சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி, ஜல்லிக்கட்டு என்பது மாநில அரசால் அறிவிக்கப்படும் இடங்களில் ஜனவரி முதல் மே மாதம்வரை போட்டிகள் நடத்தப்படும். பாரம்பரியம் மற்றும் பண்பாட்டை பின்பற்றும் நோக்கத்துடன், காளைகளை ஈடுபடுத்தும் ஒரு நிகழ்வுதான் ஜல்லிக்கட்டு என்று தெளிவாக இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. மத்திய சட்டத்தின் 22–வது பிரிவு, ‘விலங்குகளை காட்சிப்படுத்துதல்’ தொடர்பாக விவரிக்கிறது. இப்போது திருத்தப்பட்ட நடவடிக்கைகளின் விளைவாக, ஜல்லிக்கட்டு நடத்துவது இந்த பிரிவுக்கு பொருந்தாது என்று இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆக, தமிழக அரசின் துரித முயற்சிகளால் ஒரு வலுவான சட்டம் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கவர்னரின் ஒப்புதலும் தொடர்ந்து ஜனாதிபதியின் ஒப்புதலும் பெற்றுவிட்டால், ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதை எதிர்த்து யார் உச்சநீதிமன்றத்துக்கு சென்றாலும், எளிதாக இந்த போட்டிக்கு தடைவாங்கிவிட முடியாது. அனைத்து சட்ட பாதுகாப்பு கவசங்களுடன் தமிழக அரசு சட்டம் நிறைவேற்றியுள்ளது. இதை அடிப்படையாகவைத்து, தமிழகத்தின் சார்பில் எடுத்துவைக்கும் வாதங்கள் வலுவாக இருக்கும் என்று சட்டநிபுணர்கள் கூறுகிறார்கள்.

Next Story