வாடும் தமிழகத்துக்கு வேண்டும் உடனடி நிவாரணம்


வாடும்  தமிழகத்துக்கு  வேண்டும் உடனடி  நிவாரணம்
x
தினத்தந்தி 26 Jan 2017 9:30 PM GMT (Updated: 2017-01-26T17:19:57+05:30)

தமிழகம் வரலாறு காணாத ஒரு வறட்சியை சந்தித்துக்கொண்டிருக்கிறது. இதற்கு முன்பு இப்படி ஒரு வறட்சி எப்போது ஏற்பட்டது என்றால், 1846–ம் ஆண்டுதான் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

மிழகம் வரலாறு காணாத ஒரு வறட்சியை சந்தித்துக்கொண்டிருக்கிறது. இதற்கு முன்பு இப்படி ஒரு வறட்சி எப்போது ஏற்பட்டது என்றால், 1846–ம் ஆண்டுதான் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழையின் தண்ணீரைத்தான் நம்பியிருக்கிறது என்றாலும், தென்மேற்கு பருவமழையால் பெரியபலன் எதுவும் கிடைத்துவிடுவதில்லை. வடகிழக்கு பருவமழைதான் தமிழகத்தின் தண்ணீர் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு உதவியாக இருக்கும். ஆனால், நடப்பு ஆண்டை பொறுத்தமட்டில், வடகிழக்கு பருவமழை தமிழ்நாடு முழுவதும் பொய்த்துவிட்டது. தென்மேற்கு பருவமழையும் கைவிரித்துவிட்டது. இதனால் மக்கள் கடுமையான தண்ணீர் பஞ்சத்துக்கு ஆளாகிவிட்டார்கள்.

தமிழ்நாட்டில் மழை பெய்யாவிட்டாலும் பரவாயில்லை. காவிரி–டெல்டா விவசாயப்பகுதிக்கு மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டால் அங்கேயாவது விவசாயம் நடக்கும் என்றால், அதுவும் நடக்கவில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1–ந் தேதி முதல் டிசம்பர் 31–ந் தேதிவரை கர்நாடகா 179 டி.எம்.சி. தண்ணீர் திறந்துவிடவேண்டும். ஆனால், கடந்த ஆண்டு இந்த காலகட்டத்தில் 66.5 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே திறந்துவிடப்பட்டது. இதனால் காவிரி–டெல்டா பகுதியில் விவசாயம் சரிவர மேற்கொள்ளமுடியவில்லை. மொத்தத்தில், தமிழ்நாடு முழுவதும் விவசாயம் செய்யமுடியாமல், பயிர்களெல்லாம் கருகி, வாடி உதிர்ந்துபோய்விட்டது. தென்னை மரம்கூட கருகிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், தமிழக அரசு அனைத்து மாவட்டங்களையும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக அறிவித்துள்ளது. மத்திய அரசாங்கத்திடம் வறட்சி நிவாரணம் கோரி வறட்சிக்குறித்த முழுமையான அறிக்கை பிரதமர் அலுவலகத்தில் அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. இதுதவிர, முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள ஒரு கடிதம், அந்த அறிக்கையோடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது நிலவிவரும் கடுமையான வறட்சி நிலையை கருத்தில் கொண்டு, தேசிய பேரிடர் மீட்பு நிதியில் இருந்தும், மத்திய நிதியிலிருந்தும் நிதி ஒதுக்கீடு செய்ய முதல்–அமைச்சர், பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை, மத்திய அரசாங்கத்தின் வறட்சி மேலாண்மை வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி தயாரிக்கப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்கவும், கால்நடைகளுக்கு தீவனம் வழங்கவும், வேறுபணி இல்லாமல் வாழ்விழந்து தவிக்கும் விவசாய கூலிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும், தங்கள் பயிர்களை இழந்து வாடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கவும், தேசிய பேரிடர் மீட்பு நிதியிலிருந்து ரூ.39 ஆயிரத்து 565 கோடி மத்திய அரசு வழங்கவேண்டும். உடனடி செலவுகளுக்காக ரூ.1,000 கோடி இப்போதே தரவேண்டும் என்று முதல்–அமைச்சர் நேரிலும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய அரசு சில வழிமுறைகளை வைத்திருக்கிறது. அதன்படி, மத்திய அரசாங்க மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி வசுதா மிஸ்ரா தலைமையிலான 10 அதிகாரிகள் கொண்ட மத்திய குழு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வறட்சி நிலையை பார்த்துவிட்டு சென்றிருக்கிறது. அந்தக்குழுவின் அறிக்கைக்குப்பிறகுதான், மத்திய அரசு நிவாரண உதவிகளை வழங்கும். எந்த நடைமுறை என்றாலும், தமிழகத்தில் நிலவும் நிலைமையில் ஒருநாள் தாமதத்தைக்கூட மக்களால் தாங்கிக்கொள்ளமுடியாது.

எனவே, மத்திய அரசு அனைத்து நடைமுறைகளையும் மின்னல் வேகத்தில் முடித்து, இப்போதுள்ள சூழ்நிலையில் வாடிக்கொண்டிருக்கும் தமிழகத்துக்கு ‘தேவை உடனடி நிவாரணம்’ என்றவகையில், தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்று, துரிதமாக நிவாரணம் வழங்கவேண்டும். தமிழ்நாட்டிலுள்ள அரசியல்கட்சிகளும் மற்ற பிரச்சினைகளை ஒதுக்கிவைத்துவிட்டு, ஒருமித்த குரலில் வறட்சி நிவாரணம் வாங்கித்தருவதே எங்கள் கடமை என்றவகையில், மத்திய அரசுடன் வாதாடி, போராடி, வேண்டுகோள் விடுத்து, போதிய அளவு நிவாரணம் பெறவேண்டும். மத்திய அரசும், தமிழகத்தின் நிலைமையை கருணையோடு பார்த்து உடனடியாக நிதி வழங்கவேண்டும்.

Next Story