பட்ஜெட்டில் நிறைய எதிர்பார்க்கிறோம்


பட்ஜெட்டில் நிறைய எதிர்பார்க்கிறோம்
x
தினத்தந்தி 27 Jan 2017 9:30 PM GMT (Updated: 2017-01-27T20:02:35+05:30)

ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் வருகிறது என்றால், நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும். பட்ஜெட் உரை என்பது மிகவும் ரகசியமானது.

வ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் வருகிறது என்றால், நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும். பட்ஜெட் உரை என்பது மிகவும் ரகசியமானது. பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளுக்கு முன்பு பட்ஜெட் பற்றிய தகவல்கள் வெளியே கசிந்து, அதனால் ஆட்சியை இழந்த வரலாறும் மாநிலங்களில் உண்டு. அந்தளவுக்கு மத்திய அரசு பட்ஜெட் என்றாலும் சரி, மாநில அரசு பட்ஜெட் என்றாலும் சரி, அந்த உரை அச்சடிக்கும் பணி மிக ரகசியமாக நடைபெறும். மத்திய அரசாங்கத்தில் இந்த பட்ஜெட் தயாரிக்கும் பணியின் தொடக்கம் என்பது விசே‌ஷமான பணியாக நடைபெறும். அதாவது, பட்ஜெட் உரை தயாரிக்கும் பணி தொடக்கவிழாவை நிதிமந்திரி அல்வா கிண்டி தொடங்கிவைப்பார். கேட்பதற்கு இந்த தகவல் ஆச்சரியமாக இருக்கும். ஆனால், இது ஆண்டாண்டு காலமாக நடைபெறும் பணியாகும். ஒரு பெரிய இரும்புக்கடாயில் நிதிமந்திரி பட்ஜெட் அச்சிடும் பணியில் ஈடுபடும் 100–க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கூடியிருக்க அல்வா கிண்டுவார். அந்த அல்வா அங்குள்ள உயர் அதிகாரிகளிலிருந்து, கடைநிலை ஊழியர்வரை எல்லோருக்கும் வழங்கப்படும். அதன் பிறகு, அந்த அதிகாரிகள், பணியாளர்கள் அனைவருக்கும் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்வரை உலகமே துண்டிக்கப்பட்டுவிடும். அவர்கள் பணிமுடிந்து தினமும் வீட்டிற்கு செல்லமுடியாது, தங்கள் குடும்பத்தினரோடு செல்போன் மூலம் கூட பேசமுடியாது. அவர்களை பொறுத்தமட்டில், இப்போது உலகமே பட்ஜெட் உரை தயாரிக்கும் பணிதான். இந்த ஆண்டு பட்ஜெட்டுக்கான அல்வா கிண்டும் நிகழ்ச்சி கடந்த 19–ந் தேதி நடந்தது.

பிரதமர் நரேந்திரமோடி அரசாங்கத்தின் 3–வது முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யப்போகும் நிதிமந்திரி அருண்ஜெட்லி அல்வா கிண்டி இந்த பணிகளை தொடங்கிவைத்தார். தற்போது பட்ஜெட் உரை அச்சிடும் பணி முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. இந்த பட்ஜெட் இதுவரை தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டைவிட, பல வி‌ஷயங்களில் வித்தியாசமான பட்ஜெட்டாகும். பட்ஜெட் பிப்ரவரி மாதம் கடைசியில் தாக்கல் செய்யப்படுவதுதான் மரபு. கடந்த ஆண்டு பிப்ரவரி 29–ந் தேதி தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு இதுவரையில் இல்லாத அளவுக்கு பிப்ரவரி 1–ந் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. ஏப்ரல் 1–ந் தேதி நிதி ஆண்டு தொடக்கத்திலேயே அனைத்து ஒதுக்கீடுகளும் தொடங்கப்பட்டு பணிகள் வேகமாக நிறைவேற்றப்படவேண்டும் என்ற அடிப்படையில், இந்த வரலாறு காணாத மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வழக்கமாக பொது பட்ஜெட்டுக்கு முந்தையநாள் ரெயில்வே பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்படும். இந்த ஆண்டுமுதல் ரெயில்வே பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்படாமல், பொது பட்ஜெட்டோடு இணைந்து ஒன்றாக ஒரே பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது. மேலும், வழக்கமாக திட்டம் சார்ந்த செலவுகளுக்கான ஒதுக்கீடு, திட்டம் சாரா ஒதுக்கீடு என்றளவில் இருக்கும். இந்த பட்ஜெட்டில் அந்தமுறை மாற்றப்பட்டு, மூலதன செலவுகள் மற்றும் வருவாய் செலவுகள் என்று ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்படுகிறது.

அடுத்து சரக்கு சேவைவரி அறிமுகப்படுத்தப்படவுள்ள நிலையில், அதைநோக்கி அனைத்து முதலீடுகளையும், திட்டங்களையும் செயல்படுத்தப்போகும் பட்ஜெட் இது. மேலும், ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நிலை, பொருளாதார வர்த்தகம் உள்பட பலதுறைகளில் பெரியமாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இது. அதுமட்டுமல்லாமல், இந்த ஆண்டு பட்ஜெட்டில் தனிநபர் வருமானவளையத்தை பரவலாக்கும் வகையில் பல மாற்றங்கள் வரும். வரிவிகிதம் குறைக்கப்படும். ஏற்கனவே நிதிமந்திரி அறிவித்தபடி, நிறுவன வரிகள் குறைக்கப்படும். சமையல் கியாஸ் மானியங்களை சீரமைத்ததுபோல, மேலும் பல மானியங்கள் சீரமைக்கப்படும் என்பதுபோல பல எதிர்பார்ப்புகள் மக்களிடையே இருக்கிறது. எதிர்பார்த்ததை தராவிட்டால், அல்வா கொடுத்துவிட்டார்கள் என்று ஒரு பேச்சுமொழி தமிழ்நாட்டில் உண்டு. அல்வா கிண்டி பட்ஜெட் உரையின் பணியை தொடங்கினீர்கள் மகிழ்ச்சி. ஆனால், எங்களுக்கு பட்ஜெட் உரையில் அல்வா கொடுத்துவிடாதீர்கள் என்றுதான் பட்ஜெட் பற்றி எல்லோரும் கூறுகிறார்கள்.

Next Story