வீட்டுமனைகளுக்கு வரன்முறை


வீட்டுமனைகளுக்கு வரன்முறை
x
தினத்தந்தி 31 Jan 2017 7:44 PM GMT (Updated: 31 Jan 2017 7:44 PM GMT)

தங்களுக்கென ஒரு தனிவீடு வேண்டும் என்பது எல்லோருடைய ஆசையாகும். அந்தவகையில், வசதிப்படைத்தவர்கள் பெரிய வீட்டுமனைகளை வாங்கினாலும், வசதி இல்லாதவர்கள் 2 அல்லது 3 சென்ட் என்றும், நடுத்தர மக்கள் அதிகபட்சமாக 5 சென்ட் என்றும் வீட்டுமனைகளை வாங்குகிறார்கள்.

ங்களுக்கென ஒரு தனிவீடு வேண்டும் என்பது எல்லோருடைய ஆசையாகும். அந்தவகையில், வசதிப்படைத்தவர்கள் பெரிய வீட்டுமனைகளை வாங்கினாலும், வசதி இல்லாதவர்கள் 2 அல்லது 3 சென்ட் என்றும், நடுத்தர மக்கள் அதிகபட்சமாக 5 சென்ட் என்றும் வீட்டுமனைகளை வாங்குகிறார்கள். நகரமோ, கிராமமோ என்றாலும், ஊருக்குள் வீட்டுமனை வாங்குவது என்பது எட்டாக்கனி. எனவே, ஊருக்கு வெளியே குறைந்தவிலையில் ஏராளமானோர் வீட்டுமனைகளை வாங்கியதால் ரியல் எஸ்டேட் தொழில் கொழித்துவந்தது. வீட்டுமனைகளுக்கான அங்கீகாரம் அல்லது அப்ரூவல் சென்னைப்பகுதியில் சி.எம்.டி.ஏ.வாலும், மற்றபகுதிகளில் டி.டி.சி.பி. என்று சொல்லப்படும் நகர் ஊரமைப்பு இயக்கத்தாலும், கிராமப்பகுதிகளில் பஞ்சாயத்துகளாலும் வழங்கப்பட்டுவந்தது. இந்தநிலையில், ஏற்கனவே மத்தியஅரசாங்கம் கொண்டுவந்த ரியல்எஸ்டேட் மசோதா, இந்ததொழிலை பெரிதும் பாதித்தது. இப்போது உயர்நீதிமன்றம், தமிழ்நாட்டில் விதித்ததடையாலும், ரூபாய்நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பாலும் ரியல் எஸ்டேட் தொழில் அடியோடு நசிந்துவிட்டது. ஏராளமான விளைநிலங்கள் வீட்டுமனைகளாக பட்டாப்போட்டு விற்கப்படுகிறது என்பது உண்மைதான். இதை தடுக்கவில்லையென்றால், எதிர்காலத்தில் உணவு உற்பத்தி தமிழ்நாட்டில் பெருமளவு பாதிக்கப்படும் என்பதும் ஏற்புடைய கருத்துதான். ஆனால், ஊருக்கு வெளியே, விவசாயம் செய்வதற்கு தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கும் இடங்களெல்லாம் நில உரிமையாளர்களுக்கு பெரும் சுமையாக இருந்தநிலையில், இதுபோன்று வீட்டுமனை விற்பனை அவர்களுக்கு கைகொடுத்து வந்தது.

இந்தநிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில், இதுபோன்று பஞ்சாயத்துகள் அனுமதிகொடுத்து விற்பனை செய்யப்பட்ட அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகள் 25 லட்சம் ஏக்கர் விளைநிலங்களை கபளீகரம் செய்துவிட்டது. எனவே, இதற்கு தடைவிதிக்கவேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, விளைநிலங்களை அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளாக மாற்றி விற்பனைசெய்யும்போது அதை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று உத்தரவிட்டது. இதனால், ஏற்கனவே இதுபோன்று வீட்டுமனைகளை வாங்கியிருந்த பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகிறார்கள். நிலத்தை வாங்கிவிட்டோம். இனி வீடுகட்டவும் முடியாது. வேறு யாருக்கும் விற்பனை செய்யலாம் என்றால், அதற்கும் தடைஇருக்கிறது என்று கடன்வாங்கி வீட்டுமனைகளை வாங்கியவர்கள் கலங்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்தநிலையில் கடந்த அக்டோபர் 20–ந்தேதிக்கு முன், ஏற்கனவே பத்திரப்பதிவு செய்யப்பட்ட மனைகளை மீண்டும் விற்கலாம் என்றநிலையில், மறுபத்திரப்பதிவு செய்ய தமிழக அரசு ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால், இந்த உத்தரவை நிறைவேற்றுவதற்கும் ஐகோர்ட்டு அனுமதிக்கவில்லை. இதுபோன்று அங்கீகாரம் இல்லாமல் விற்கப்பட்ட மனைகளை எவ்வாறு வரையறை செய்யப்போகிறீர்கள்? என்பதை அரசு விளக்கவேண்டும் என்று கூறிவிட்டார்கள்.

குஜராத் மாநிலத்தில் இதுபோல ஒரு சிக்கல் வந்தபோது, நரேந்திரமோடி முதல்–மந்திரியாக இருந்தார். அப்போது அவர் ஒரு ‘சமாதன்’ திட்டத்தைக்கொண்டுவந்தார். இதன்படி, அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகளையெல்லாம் ஒரு சிறியதொகையை செலுத்தி, அனுமதிபெற்ற வீட்டுமனைகளாக கொண்டுவரலாம் என்று அறிவித்திருந்தார். இதுபோல, ஒரு நடைமுறையை அரசு கொண்டுவரலாம். இதுமட்டுமல்லாமல், கிராமப்புறங்களில் பஞ்சாயத்துகளுக்கு இதுபோன்ற அனுமதிவழங்க அதிகாரம் இருக்கிறதா?, அப்படி இருக்கிறதென்றால், எந்தெந்த வழிமுறைகளை எந்தெந்த அதிகாரியின் ஒப்புதலின்படி வழங்கலாம் என்பதை தெளிவுபடுத்தவேண்டும். எல்லா இடங்களிலும் உள்ள வீட்டுமனைகளுக்கு நகர் ஊரமைப்பு இயக்கத்திடம் சென்று கிராம மக்களால் அனுமதி வாங்குவது என்பது இயலாத காரியம். ஆகவே, சி.எம்.டி.ஏ., டி.டி.சி.பி. என்று கூறப்படும் நகர் ஊரமைப்பு இயக்கம், இதற்கு அடுத்தாற்போல மூன்றாம் மற்றும் நான்காம் கட்ட, இதுபோன்ற வீட்டுமனைகளுக்கு அங்கீகாரம் பெறுவதற்கு ஒரு அமைப்புகளை தமிழக அரசு உடனடியாக உருவாக்கி கோர்ட்டுக்கு தெரிவிக்கவேண்டும். மொத்தத்தில், கோடிக்கணக்கான மக்களுக்கு வாழ்வளிக்கும் ரியல் எஸ்டேட் தொழில் அழிந்துவிடக்கூடாது.

Next Story