ஒதுக்கிய பணத்தை செலவழிப்பதில் தாமதம் ஏன்?


ஒதுக்கிய பணத்தை செலவழிப்பதில் தாமதம் ஏன்?
x
தினத்தந்தி 1 Feb 2017 8:30 PM GMT (Updated: 2017-02-01T18:46:51+05:30)

நேற்று மத்திய அரசாங்க பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. விரைவில் தமிழக அரசும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

நேற்று மத்திய அரசாங்க பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. விரைவில் தமிழக அரசும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. பட்ஜெட்டில் அரசாங்கம் ஒரு திட்டத்திற்காக நிதி ஒதுக்கிவிட்டால், அந்த நிதியை வைத்து மத்திய–மாநில அரசாங்கங்கள் அதற்காக விரிவான திட்டங்களை வகுத்து, அந்த தொகையைக் கொண்டு நிறைவேற்றி முடிக்க வேண்டும் என்பதுதான் நியதி. ஆனால், இப்போது பல திட்டங்களுக்காக மத்திய அரசில் ஒதுக்கப்பட்ட நிதியும், மாநிலங்களில் நிறைவேற்றப்படுவதற்காக மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதியும் பல நேரங்களில் செலவழிக்கப்படாமல், எந்த நோக்கத்திற்காக நிதி ஒதுக்கப்படுகிறதோ?, அந்த நோக்கமே நிறைவேற்றப்படாமல் நிதியும் வீணாகப் போய்விடுகிறது.

2012–ம் ஆண்டு டிசம்பர் மாதம், டெல்லியில் ஓடும் பேருந்தில் நிர்பயா என்ற பிசியோதெரபி மாணவி காமுகர்களால் கதற கதற கற்பழித்து, கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு, இந்த நாடே பெண்களுக்கு முழுமையாக பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதில் ஒன்றாக எழுந்து நின்றது. அப்போது மத்திய நிதி மந்திரியாக இருந்த ப.சிதம்பரம், 2013–ம் ஆண்டு பட்ஜெட்டில், பெண்கள் பாதுகாப்புக்காக பல்வேறு திட்டங்களை நாடு முழுவதும் செயல்படுத்துவதற்காக ‘நிர்பயா நிதி’ என்ற பெயரில் ரூ.1,000 கோடியை ஒதுக்கினார். தொடர்ந்து இந்த நிர்பயா நிதிக்காக ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டு வருகிறது. ஆனால், 2013–2014, 2014–2015, 2015–2016 ஆகிய 3 ஆண்டுகளிலும் ஒதுக்கப்பட்ட இந்த ‘நிர்பயா நிதி’ எந்தத் திட்டத்திற்காகவும் செயல்படுத்தப்படாமல் அப்படியே தூங்கிக் கொண்டிருக்கிறது என்ற அதிர்ச்சியான தகவல், பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையிலிருந்து தெரிகிறது. இதுபோல, மனிதக் கழிவுகளை அகற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு மாற்றுவேலைவாய்ப்பு மற்றும் மறுவாழ்வுக்காக ஒதுக்கப்பட்ட ரூ.461 கோடியும் செலவழிக்கப்படாமல் இருக்கிறது. நக்சல்வாதிகள் அதிகமுள்ள இடங்களில் இணைப்பு சாலைகள் போடுவதற்காக ரூ.920 கோடி ஒதுக்கியும் செலவழிக்கப்படாமல் இருக்கிறது.

இதுபோல, பல மத்திய அரசாங்க திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி செலவழிக்கப்படாமல் இருக்கின்றன. மத்திய அரசாங்கம்தான் அப்படியென்றால், தமிழகஅரசும், மத்திய அரசாங்கம் ஒதுக்கிய பலத்திட்டங்களை செயல்படுத்தப்படவில்லை. ஜவஹர்லால்நேரு தேசியநகர்ப்புற புனரமைப்பு திட்டத்தின் கீழ் சென்னை பெருநகரத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய குடிநீர் வழங்கல், பாதாள சாக்கடை, திடக்கழிவு மேலாண்மை திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டு செலவழிக்கப்படாமல் இருக்கும் நிதி ரூ.353 கோடியே 6 லட்சமாகும். இந்தநிதியை செலவழித்து திட்டங்களை நிறைவேற்ற, மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தால் பிப்ரவரி 15–ந்தேதிவரை காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. காலக்கெடுவுக்குள் இந்தத்திட்டங்கள் நிறைவேற்றப்படாவிட்டால், இந்த நிதியும் அப்படியே மத்திய அரசாங்கத்திற்கு திருப்பி அனுப்பப்பட வேண்டியநிலை ஏற்பட்டு விடும். இதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் உள்ள 50 ஏரிகளில் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக மத்திய அரசாங்கம் தனது பங்காக ரூ.50 கோடி கடந்த ஆண்டு ஒதுக்கியிருந்தது. இந்தத் திட்டமும் நிறைவேற்றப்படாமல் அப்படியே கிடப்பில் இருக்கிறது. மார்ச் மாதத்திற்குள் இந்தத் திட்டத்தின்படி, ஏரிகளுக்கான தூர்வாரும் பணிகள் உள்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படாவிட்டால், இந்தத் தொகையும் அப்படியே மத்திய அரசாங்கத்திற்கு திரும்பச் சென்று விடும். அரசாங்கங்களை குறை சொல்லி பயனில்லை. பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், அரசு துறைகள் அதற்கான திட்டங்களை வகுக்காததால்தான் நிதி செலவழிக்கப்படாத நிலை ஏற்படுகிறது. இதுபோல, மத்திய–மாநில அரசாங்கங்கள் எந்தெந்த திட்டங்களுக்கு, எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது?, அந்தத்திட்டங்களெல்லாம் செயலுக்கு வருவதற்கான முயற்சிகள் தொடங்கப்பட்டு விட்டதா? என்பதை உன்னிப்பாக கவனித்து முனைப்புடன் பணியாற்ற வேண்டும். எம்.எல்.ஏ.க்களும், எம்.பி.க்களும் எந்தெந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால், தங்கள் தொகுதி பயன்பெறும் என்பதை கண்காணித்து, அந்தத் திட்டங்களுக்கான நிதி முறையாக செலவழிக்கப்படுகிறதா? என்பதை பாராளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் தெரிவித்து, அதிகாரிகளை ஊக்குவிக்க வேண்டும்.

Next Story