விளம்பர பட்ஜெட் அல்ல


விளம்பர பட்ஜெட் அல்ல
x
தினத்தந்தி 2 Feb 2017 8:30 PM GMT (Updated: 2017-02-02T18:46:20+05:30)

பா.ஜ.க. அரசாங்கத்தின் 4–வது பட்ஜெட்டை நிதிமந்திரி அருண்ஜெட்லி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

பா.ஜ.க. அரசாங்கத்தின் 4–வது பட்ஜெட்டை நிதிமந்திரி அருண்ஜெட்லி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். ரூ.21 லட்சத்து 47 ஆயிரம் கோடியை செலவழிக்கும் வகையிலான பட்ஜெட் இது. பொதுவாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அது மக்களின் அன்றாட வாழ்க்கையில் என்ன பாதிப்புகளை ஏற்படுத்துகிறது?, என்ன பலனை கொடுத்துள்ளது? என்பதைத் தான் எல்லோரும் முதலில் மதிப்பிடுவார்கள். ஆனால், இந்த பட்ஜெட் அப்படி பெரிய பாதிப்புகளையோ, அன்றாட வாழ்க்கையில் பலன்களையோ பெரிதாக கொடுத்து விடவில்லை. சிகரெட், பான்மசாலா, பீடி, சுருட்டு, புகையிலை, செல்போன் உதிரிபாகம் போன்ற பொருட்களுக்கான வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன. இதையாரும் பெரிதாக பொருட்படுத்தமாட்டார்கள். இதுபோல, எல்.இ.டி. விளக்குகள், வறுத்த முந்திரிபருப்பு, அலுமினிய தாதுக்கள் போன்ற பல அன்றாடம் மக்கள் பணத்தை செலவழித்து வாங்காத பொருட்களுக்குத்தான் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டினால் விலைகுறையும் பட்டியலில் இணையவழி மூலமாக ரெயில் டிக்கெட் எடுத்தால் சேவை வரியில்லை. பணத்தை செலுத்துவதற்கான ‘சுவைப்’ மெஷினுக்கு வரியில்லை என்பது போல வரிகுறைப்பு, வரிச்சலுகை இது போன்ற காரணங்களாலும், அன்றாடசெலவில் பெரியபலன்கள் மக்களுக்கு எதுவுமில்லை. விலைவாசியை உயர்த்தும் மறைமுகவரிகளை அதிகரிக்கவில்லை. இதற்குக் காரணம், அடுத்த சில மாதங்களில் ‘‘சரக்கு சேவைவரி’’ வரப்போகிறது. அந்த நேரம்தான் எல்லாப் பொருட்களின் விலையும் உயரவோ, குறையவோ வாய்ப்பு இருக்கப் போகிறது. எனவே, இப்போது பலபொருட்களுக்கு வரி உயர்வு இல்லை, விலைவாசி உயராது என்று மகிழ்ச்சி கொள்ளவும் முடியாது.

இந்த ஆண்டு முதன் முதலாக ரெயில்வே பட்ஜெட், பொதுபட்ஜெட்டோடு இணைக்கப்பட்டுள்ளது. ரெயில்கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றாலும் செலவு, சேவையின் தரம், சமுதாய கடமை, மற்ற போக்குவரத்து சேவைகளில் போட்டியை கருத்தில் கொண்டு, ரெயில்வே கட்டணம் நிர்ணயிக்கப்படும் என்று சொல்லி சூசகமாக ரெயில் கட்டணம் உயரப் போவதை அறிவித்து விட்டார். 10 நோக்கங்களின் அடிப்படையில், அதாவது விவசாயிகள், கிராமப்புற மக்கள், இளைஞர்கள், ஏழைகள் மற்றும் நலிந்த பிரிவினர், உள்கட்டமைப்பு வசதி, நிதிபிரிவு, டிஜிட்டல் பொருளாதாரம், பொதுப்பணி, விவேகமுள்ள நிதிமேலாண்மை, வரி நிர்வாகம் என்பவைகளை சார்ந்து பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நிதிமந்திரி தெரிவித்துள்ளார். ஒவ்வொரு தலைப்பின் கீழும் அரசு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கத் திட்டமிட்டுள்ளது? என்பதை விரிவாக விவரித்துள்ளார். ரூ.10 லட்சம் கோடி விவசாயக் கடன்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள ஒரு கோடி குடும்பங்களை ஏழ்மை நிலையிலிருந்து வெளியே கொண்டு வரும் வகையில் திட்டங்களை அறிவித்துள்ளது. 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 5 லட்சம் பண்ணைக் குட்டைகள், 10 லட்சம் கம்போஸ்ட் உரக்குழிகள் உருவாக்கப்படும் என்று அறிவித்துள்ளது வரவேற்புக்குரியது.

உள்கட்டமைப்பு வசதிகளுக்காகவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும், வீட்டுவசதிகளை மேம்படுத்தும் வகையிலும், பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. வருமானவரி வரம்பு உயர்த்தப்படும், வரிவிகிதம் குறைக்கப்படும் என பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், பெரிய சலுகை இல்லாவிட்டாலும், 1997–ம் ஆண்டுக்குப்பிறகு இப்போதுதான் வருமானவரி ஒரு பிரிவினருக்கு மட்டும் அதாவது, ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்திலிருந்து ரூ.5 லட்சம் வரை மட்டும் 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. ரூ.50 கோடிக்கு குறைவாக ஆண்டு வரவு–செலவுள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வருமானவரி 30 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த பிரிவிலுள்ள 96 சதவீத நிறுவனங்கள் பயனடையும். இதுபோன்ற சலுகைகள் நிச்சயமாக வேலைவாய்ப்பை பெருக்கும் என்றாலும், பெரிய நிறுவனங்களுக்கும் வேலைவாய்ப்பு உருவாக்கும் சலுகைகள் அளிக்கப்பட வேண்டும். இது விளம்பர பட்ஜெட் அல்ல. ஆனால், விவசாய வளர்ச்சி, தொழில்வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, உள்கட்டமைப்பு வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி என்பது போன்ற பல வளர்ச்சிகளை ஓரளவுக்கு உள்ளடக்கிய பட்ஜெட் என்பதில் சந்தேகமில்லை.


Next Story