சேமிப்பு கணக்குக்கு கட்டுப்பாடா?


சேமிப்பு கணக்குக்கு கட்டுப்பாடா?
x
தினத்தந்தி 5 Feb 2017 8:30 PM GMT (Updated: 2017-02-05T17:07:22+05:30)

‘‘நாரதர் கலகம் நன்மையில் முடியும்’’ என்று பொது வான ஒரு வழக்குமொழி உண்டு.

‘‘நாரதர் கலகம் நன்மையில் முடியும்’’ என்று பொதுவான ஒரு வழக்குமொழி உண்டு. அது போலத் தான், ரிசர்வ் வங்கிக்கும், தேர்தல் கமி‌ஷனுக்கும் இடையே நடந்த ஒரு கருத்து மோதல் நன்மையில் முடிந்துள்ளது. உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தல்களில், பஞ்சாப், கோவா தேர்தல்கள் முடிந்து விட்டது. இந்தத் தேர்தலில், உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட் மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் ரூ.28 லட்சமும், கோவா, மணிப்பூர் மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் ரூ.20 லட்சமும் தேர்தல் செலவுக்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற ஒரு உச்சவரம்பை தேர்தல் கமி‌ஷன் பிறப்பித்திருந்தது.

வேட்பாளர்கள் எல்லோரும், ‘‘ஒருவாரம் அதிகபட்சமாக வங்கிக் கணக்கில் இருந்து ரூ.24 ஆயிரம்தானே எடுக்க முடியும். அடுத்த சில நாட்களில் தேர்தலை சந்திக்கயிருக்கும் நாங்கள், ரூ.28 லட்சம், ரூ.20 லட்சம் என்று எங்கள் வங்கிக் கணக்கில் இருந்து எப்படி எடுக்க முடியும்?’’ என்று தேர்தல் கமி‌ஷனிடம் முறையிட்டனர். இதை ரிசர்வ் வங்கியின் கவனத்துக்கு கொண்டுசென்ற தேர்தல் கமி‌ஷன், இந்த 5 மாநிலங்களிலுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தது. முதலில் ரிசர்வ் வங்கி இதற்கு முழுமையாக மறுப்பு தெரிவித்தது. தொடர்ந்து ரிசர்வ் வங்கியும், தேர்தல் கமி‌ஷனும் நடத்திய பேச்சுவார்த்தையின் விளைவாக, இதற்கு ஒரு விடிவு காலம் பிறந்து விட்டது. தொடர்ந்து வங்கிகளில் நடப்புகணக்குகளில் இருந்து எவ்வளவு பணம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. தேர்தல் கமி‌ஷனும், அனைத்து வேட்பாளர்களையும் வங்கிகளில் நடப்பு கணக்கு தொடங்கி, அதிலிருந்து செலவழிக்க சொல்லி விட்டது. ஒருபக்கம் தேர்தலில் போட்டியிடுபவர்கள் இதன்மூலம் பயனடைந்தாலும், மறுபக்கம் நாடுமுழுவதும் வியாபாரிகள் மற்றும் சிறு நடுத்தர நிறுவனங்கள் நடத்துபவர்கள் பெரும் நன்மை பெறுவார்கள். நடப்புகணக்கு வைத்திருப்பவர்களுக்கு நல்லபலன் கொடுக்கும் வகையில் இவ்வாறு கட்டுப் பாடுகளை தளர்த்தியிருப்பது நிச்சயமாக வரவேற்புக்குரியது. ஆனால், சேமிப்புக்கணக்கு வைத்திருக்கும் சாதாரண பொதுமக்களுக்கு இந்த உச்சவரம்பு இன்னும் தளர்த்தப் படவில்லை. அதிகபட்சம் வாரத்துக்கு ரூ.24 ஆயிரம் எடுத்துக் கொள்ளலாம் என்ற உத்தரவு அப்படியே இருக்கிறது. ஏ.டி.எம்.மில் அதிகபட்சமாக ஒருநாளைக்கு ரூ.10 ஆயிரம் மட்டும் எடுத்துக் கொள்ளலாம் என்பது மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. பல ஏ.டி.எம்.கள் மூடியேக் கிடக்கின்றன. இதனால் பணம் எடுக்கமுடியாமல் தவிக்கும் நிலை உள்ளது.

பொதுமக்களை பொறுத்தமட்டில், நடப்புகணக்கு வைத்திருப்பவர்களைப்போல, முழுமையாக எவ்வளவு பணம் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் என்ற நிலைமை வரும்போது தான், எங்களுக்கு பயன் என்கிறார்கள். பொருளாதார ஆய்வறிக்கையில்கூட ‘பணம் செல்லாது என்ற நடவடிக்கை காரணமாக உள்நாட்டு பொருளாதார உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், புதியநோட்டுகள் புழக்கத்தால் ரொக்கப்பற்றாக்குறை ஏப்ரல் மாதத்தில் சரியாகிவிடும்’ என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், நிச்சயமாக அது முடியுமா? என்பது சந்தேகம்தான். பணம் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நேரத்தில், ரூ.17 லட்சத்து 74 ஆயிரம் கோடி புழக்கத்தில் இருந்தன. ஆனால், கடந்த ஜனவரி 20–ந்தேதி கணக்குப்படி, இப்போதுள்ள நோட்டுகளின் புழக்கம் ரூ.9 லட்சத்து 62 ஆயிரத்து 869 கோடிதான். ஆக, பாதிக்கணக்கை தாண்டிய நிலையில் நாட்டில் ரூபாய் புழக்கம் இருக்கிறது. இந்தநிலையில், வங்கிகளில் சேமிப்புக்கணக்கு வைத்திருப்பவர்களின் கட்டுப்பாட்டை ரூ.24 ஆயிரம் என்ற நிலைமையை கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி, வெகுவிரைவில் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் எடுக்கலாம் என்ற நிலைமை வரவேண்டும். விரைவில் நிலைமை சீராகும் என அறிவிக்கப்பட்டாலும், அதற்குரிய நடவடிக்கையை மத்திய அரசு வேகமாக எடுக்க வேண்டும். அதுதான் மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக இருக்கிறது.


Next Story