தமிழ்நாட்டுக்கு தேவை நிரந்தர கவர்னர்


தமிழ்நாட்டுக்கு தேவை நிரந்தர கவர்னர்
x
தினத்தந்தி 8 Feb 2017 8:30 PM GMT (Updated: 2017-02-08T22:49:34+05:30)

இந்திய அரசியலமைப்பு சட்டம், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு கவர்னர் நியமிக்கப்படவேண்டும் என்பதை பிரிவு 153–ல் தெளிவாக வகுத்துள்ளது.

ந்திய அரசியலமைப்பு சட்டம், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு கவர்னர் நியமிக்கப்பட வேண்டும் என்பதை பிரிவு 153–ல் தெளிவாக வகுத்துள்ளது. 153 முதல் 162–வது பிரிவுவரை, மாநில கவர்னரின் நியமனம், நிர்வாக அதிகார எல்லை போன்ற பல வி‌ஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. கவர்னருக்கு என்று பல பொறுப்புகள் வரையறுக்கப்பட்டுள்ளன. எப்படி நாட்டுக்கு ஜனாதிபதியோ, அதுபோல கவர்னர்தான் மாநிலத்தின் தலைமைப் பொறுப்புக்குரியவர் ஆவார். இது தேர்ந்தெடுக்கப்பட்ட பதவி அல்ல. ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பதவிதான் கவர்னர் பதவி. ஜனாதிபதியை போல, நிர்வாகம், சட்டமன்றம் மற்றும் நீதி அதிகாரங்கள் கவர்னருக்கு உண்டு. மாநிலத்தின் முதல்–அமைச்சர் உள்பட அமைச்சர்கள் போன்ற முக்கிய பதவிகளை கவர்னர் நியமிக்கிறார். சட்டமன்ற கூட்டத்தொடரையும் கவர்னர்தான் உரையாற்றி தொடங்கி வைப்பார். அவசர சட்டம் பிறப்பிப்பதற்கான அதிகாரமும் கவர்னருக்குத்தான் உண்டு.

சுதந்திரமடைந்ததிலிருந்து தமிழ்நாட்டில் இதுவரையில் 28 கவர்னர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். இதில், 6 கவர்னர்கள் தற்காலிக கவர்னர்களாக நிரந்தர கவர்னர்கள் நியமிக்கப்படும்வரை இருந்திருக்கிறார்கள். தற்போது 29–வது கவர்னராகவும், தற்காலிக கவர்னராகவும் மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 7–வது தற்காலிக கவர்னர். ரோசையா பதவியில் இருந்து ஓய்வுபெற்றவுடன், 2016–ம் ஆண்டு செப்டம்பர் 2–ந் தேதி இந்த பொறுப்பை மராட்டிய கவர்னரான வித்யாசாகர் ராவ் கூடுதலாக கவனிக்க ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தார்.

தற்போது இந்தியாவில் 5 மாநிலங்களில் தற்காலிக கவர்னர்கள்தான் பொறுப்பில் இருக்கிறார்கள். அருணாசலபிரதேசம், தெலுங்கானா, தமிழ்நாடு, மத்தியபிரதேசம், மேகாலயா மாநிலங்களில் கூடுதல் பொறுப்பு கவர்னர்கள் பதவி வகித்துக் கொண்டிருக்கிறார்கள். பொதுவாக, ஒரு மாநிலத்தில் கவர்னர் இல்லாத போது, அண்டை மாநில கவர்னர்தான் கூடுதல் பொறுப்பாக கவனிக்க நியமிக்கப்படுவார். ஆனால், தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், ரோசையா ஓய்வு பெற்றவுடன், அண்டை மாநிலங்களோடு இருக்கும் சில பிரச்சினைகள் காரணமாக நிர்வாக ரீதியாக சில சிக்கல் வரும் என்பதால் மராட்டிய மாநில கவர்னர், கூடுதல் பொறுப்பை கவனிக்கும் கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு, மராட்டியம் என்ற இரண்டு மாநிலங்களும் மிகப்பெரிய மாநிலங்களாகும். 2 மாநிலங்களின் நிர்வாக பொறுப்புகளையும் கவனிக்க நிச்சயமாக ஒரே கவர்னரால் முடியாது. அதனால்தான், குடியரசு தினத்தன்று கூட வித்யாசாகர் ராவ் மும்பையில் தேசியக்கொடியேற்றியதால், சென்னையில் இதுவரையில் வரலாற்றில் இல்லாதவகையில் கவர்னர் தேசியக்கொடியேற்றாமல், முதல்–அமைச்சர் தேசியக்கொடியேற்றினார். கவர்னரின் பணி என்பது நிச்சயமாக அன்றாடம் கவனிக்கப்பட வேண்டிய பணியாகும். பல்கலைக்கழக வேந்தர் என்ற பொறுப்பை, அந்த பதவியை அவர்தான் கவனிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் 4 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் இல்லாத நிலையும், இவ்வாறு நிரந்தர கவர்னர் நியமிக்கப்படாத காரணத்தால்தான். பல பல்கலைக்கழகங்களில் செனட், சிண்டிகேட் ஆட்சிமன்ற உறுப்பினர்கள் நியமிக்கப்படவில்லை. அரசியல் சட்டப்படி, பொறுப்பு கவர்னர் என்பதற்கான ஒருபிரிவு இல்லை. கூடுதல் பொறுப்பை கவனித்துக் கொள்ளத்தான் இருக்கிறது. மேலும், இப்போது தமிழ்நாட்டில் நிலவும் அசாதாரண அரசியல் சூழ்நிலைக்கு ஒரு தீர்வுகாண வேண்டுமென்றால், அது கவர்னரால் தான் முடியும். இப்போது ஒரு குழப்பமான அரசியல் நிலைமை உச்சக்கட்டத்தில் இருக்கிறது. இதற்கு தீர்வுகாண வேண்டுமென்றால் ஒரு நிரந்தர கவர்னர் தமிழ்நாட்டுக்கு உடனடியாக தேவை. பல பணிகள் முடங்கிப்போய் இருக்கும் நிலையில், இதுபோன்ற அரசியல் குழப்பங்களுக்கு தீர்வு காண்பதற்காகவும் மத்திய அரசாங்கம் உடனடியாக தமிழ்நாட்டுக்கு ஒரு நிரந்தர கவர்னரை நியமித்து, நிர்வாக எந்திரம் சுமுகமாக இயங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.


Next Story