100–ல் ஒரு பங்கு அகழாய்வுதான்


100–ல் ஒரு பங்கு அகழாய்வுதான்
x
தினத்தந்தி 9 Feb 2017 9:30 PM GMT (Updated: 2017-02-09T20:08:21+05:30)

எந்தவொரு நாடு என்றாலும் சரி, மாநிலம் என்றாலும் சரி, சமுதாயம் என்றாலும் சரி, நாங்கள் பண்டைய காலத்திலிருந்தே நாகரிகம் மிக்கவர்கள். எங்கள் மூதாதையர்களின் வாழ்க்கைமுறையும், வரலாறும் எங்களுக்கு மிகவும் பெருமையளிக்கிறது என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்வது வழக்கம்.

ந்தவொரு நாடு என்றாலும் சரி, மாநிலம் என்றாலும் சரி, சமுதாயம் என்றாலும் சரி, நாங்கள் பண்டைய காலத்திலிருந்தே நாகரிகம் மிக்கவர்கள். எங்கள் மூதாதையர்களின் வாழ்க்கைமுறையும், வரலாறும் எங்களுக்கு மிகவும் பெருமையளிக்கிறது என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்வது வழக்கம். இந்தியாவை எடுத்துக்கொண்டால், சிந்துசமவெளி நாகரிகத்தைத்தான் பெருமையாக கூறிக்கொண்டிருக்கிறோம். ‘சிந்துசமவெளிதான் நாகரிகத்தின் தொட்டில்’ என்று எல்லோரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், சிந்துசமவெளி நாகரிகத்துக்கு முந்தைய நாகரிகமாக திகழ்ந்தது ‘தமிழ்நாடு’தான் என்பதை ஏதோ கொஞ்சநஞ்சம் செய்த அகழாய்வுகள் தெளிவாக கண்டுபிடித்துள்ளது. நெல்லை மாவட்டம், ஆதிச்சநல்லூரில் முதலாவது அகழாய்வுகள் மேற்கொண்ட ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர் டாக்டர் ஜாகர் என்பவர்தான் முதன்முதலாக தமிழகத்தின் பழங்கால வரலாற்றை கண்டுபிடித்தார். தமிழ்நாட்டில், குறிப்பாக ஆதிச்சநல்லூர்தான் நாகரிகத்தின் பிறப்பிடமாக இருந்ததை கண்டுபிடித்தார்.

ஆதிச்சநல்லூரில் ஆய்வுகளை மேற்கொண்டால், ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்களின் வாழ்க்கை முறையையும், அவர்கள் எந்தளவு நாகரிகம் படைத்தவர்களாக தங்கள் அன்றாட வாழ்க்கையை வசதிகொண்டதாக ஏற்படுத்திக்கொண்டார்கள் என்பதையும் அறியலாம் என்ற ஆர்வத்தில்தான் 1876–ம் ஆண்டு ஆதிச்சநல்லூருக்கு வந்தார். அங்கே வந்து பூமியை தோண்டிப்பார்த்தார். பூமிக்கடியில் பலவிதமான ‘‘மண்தாழிகள்’’ இருப்பதை பார்த்து, அவற்றை வெளியே எடுத்து பார்த்தநிலையில், பழங்கால மனிதர்கள் பயன்படுத்திய பல அரியபொருட்கள் மண்ணாலும், தங்கத்தாலும் செய்த பல அன்றாட பயன்பாட்டு பொருட்கள், தங்க ஆபரணங்களை கண்டுபிடித்துச்சென்றார். அங்குள்ள 114 ஏக்கரில் ஏதோ கொஞ்ச இடங்களில்தான், அவராலும் அவரைத்தொடர்ந்து இந்த நாள் வரை ஆராய்ச்சி மேற்கொண்டவர்களாலும் கண்டுபிடிக்கப்பட்டதே தவிர, இன்னும் முழுமையாக ஆய்வுகளை மேற்கொள்ளப்படவில்லை. இதுபோல, 114 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் அலெக்சாண்டர் ரியா என்ற ஆங்கிலேய ஆராய்ச்சியாளர் 37 இடங்களில் ஆய்வுகளை தொடங்கினார். இந்த இடங்களில் எல்லாம் இன்னும் பெரியளவில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பது தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில், 2 ஆண்டுகளுக்கு முன்பு மதுரைக்கு அருகேயுள்ள ‘கீழடி’ கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆய்வில் தமிழர்களின் நாகரிக வரலாற்று ஆவணங்கள் ஏராளமாக கிடைத்துள்ளன. ஆதிதமிழர்கள் வெறும் விவசாயத்தை மட்டுமே மேற்கொண்டார்கள். காட்டிலும், மேட்டிலும் வாழ்ந்தார்கள் என்பதை பொய்க்கும் வகையில், கீழடியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தமிழர்களின் கட்டிடக்கலை எவ்வளவு மேம்பட்டிருந்தது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 2 இடங்களில் தோண்டப்பட்ட குழிகளிலேயே 4,125 தொல்பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டு, மொத்தம் 100 ஆய்வுகளை மேற்கொள்ளலாம் என்றநிலையில், 10–ல் ஒருபங்கு மட்டும் நடத்திவிட்டு, அடுத்து அதைப்பற்றி கொஞ்சம்கூட அக்கறையில்லாமல் அதை அப்படியே விட்டுவிட்டது.

இந்த நிலையில், இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், இந்திய அகழாய்வுகள் தொல்பொருள் ஆய்வுத்துறை அடுத்தகட்டமாக கீழடியில் எப்போது அகழாய்வுகள் மேற்கொள்வோம் என்ற காலக்கெடுவை தெரிவிப்பதற்கு மறுத்துவிட்டார்கள். பொதுவாக, தமிழ் ஆர்வலர்கள் மத்தியில் ஒரு ஐயம் இருக்கிறது. சிந்துசமவெளி நாகரிகத்துக்கு முந்தைய நாகரிகம் தமிழர்கள் நாகரிகம் என்பது இப்போது அரசல் புரசலாக தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் இன்னும் தீவிரமாக அகழாய்வுகள் நடத்தினால், இந்திய வரலாற்றை திருப்பி எழுதவேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுவிடும். அதனால்தான் அகழாய்வுகள் இன்னும் தீவிரமாக நடத்தப்படாமல் இருக்கிறது என்று கருதுகிறார்கள். மத்திய அரசாங்கம் தமிழ்நாட்டில் அகழாய்வுகளை இன்னும் தீவிரப்படுத்தவேண்டும். இன்னும் தொல்பொருள்துறை அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட கலைப்பொருட்களை ஆய்வு செய்ய தமிழ்நாட்டில் பழம்பொருள் ரசாயன ஆய்வுக்கூடம் ஒன்றை உடனடியாக அமைக்கவேண்டும். அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் தங்கள் பகுதியில் எந்த இடங்களில் அகழாய்வுகள் மேற்கொள்ளலாம்? என்பதை ஆய்வு செய்து அரசுக்கு தெரிவிக்கவேண்டும்.

Next Story