பாலத்தை நெருங்கிவிட்டோம்: தாண்டித்தான் ஆகவேண்டும்!


பாலத்தை  நெருங்கிவிட்டோம்: தாண்டித்தான்  ஆகவேண்டும்!
x
தினத்தந்தி 13 Feb 2017 11:15 PM GMT (Updated: 2017-02-13T22:13:07+05:30)

பாலத்தை நெருங்கிவிட்டோம்: தாண்டித்தான் ஆகவேண்டும்!

பொதுவாக எந்த பிரச்சினையை எதிர்பார்த்துக்கொண்டிருந்தாலும், ஆங்கிலத்தில் ஒரு வழக்கு மொழி உண்டு. ‘வீ வில் கிராஸ் தி பிரிட்ஜ், வென் இட் கம்ஸ்’ என்பார்கள். அதாவது, பாலம் வரும்போது அதை தாண்டலாம் என்பதுதான் அதன்பொருள். மருத்துவக்கல்லூரி நுழைவுத்தேர்வுக்கு மட்டும் அல்லாமல், பொறியியல் கல்லூரி நுழைவுத்தேர்வும் அறிவிக்கப்பட்டுள்ள இந்தநிலையில், தமிழ்நாட்டில் இந்த பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்தியா முழுவதிலும் 3,288 பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. இதில், அதிகமாக பொறியியல் கல்லூரிகள் இருப்பது தமிழ்நாட்டில்தான். தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 527 ஆக இருக்கிறது. இந்த பொறியியல் கல்லூரிகளுக்கு எல்லாம் தமிழ்நாட்டில் மாணவர் சேர்க்கையின்போது, நுழைவுத்தேர்வு கிடையாது. பிளஸ்–2 தேர்வில் எடுத்த மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. பிளஸ்–2 தேர்வில் வெற்றிபெறும் பெரும்பான்மையான மாணவர்கள், பொறியியல் கல்லூரிகளில்தான் சேருகிறார்கள்.

இந்தநிலையில், மருத்துவப்படிப்புகளுக்கு எப்படி அகில இந்திய அளவில் தேசிய தகுதிக்காண் நுழைவுத் தேர்வு, அதாவது ‘நீட்’ அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறதோ, அதே அடிப்படையில்தான் 2018–ம் ஆண்டு முதல் நாடுமுழுவதிலும் பொறியியல் படிப்புக்கும், கட்டிடக்கலை படிப்புக்கும் மாணவர் சேர்க்கை நடைபெறவேண்டும் என்ற வகையிலான திட்டத்துக்கு மத்திய அரசாங்கம் ஒப்புதல் கொடுத்துவிட்டது. மத்திய அரசாங்கத்தின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி கவுன்சிலிடம் 2018–2019–ம் கல்வி ஆண்டு முதல் இதை நடைமுறைப்படுத்துவதற்கான தகுந்த வரைமுறைகளை அறிவிக்கவேண்டும் என்று கூறியுள்ளது. நாடுமுழுவதும் ஒரே கல்வித்தரத்தில் பொறியியல் படிப்பு இருக்கவேண்டும் என்ற நோக்கத்திலும், நன்கொடைகள் வாங்கப்படுவதை தவிர்க்கும் வகையிலும் இந்த முடிவுகள் எடுக்கப்படுவதாக கூறியுள்ளது. இந்த நுழைவுத்தேர்வு பல மொழிகளைக்கொண்ட இந்தியாவில் அதையெல்லாம் கருத்தில்கொண்டு, ஒரு நல்லமுறையை தேர்ந்தெடுத்து வகுக்கப்படவேண்டும் என்று கூறியுள்ளது. அதாவது, எப்படி ‘நீட்’ தேர்வை 10 மொழிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதோ, அதுபோல பொறியியல் படிப்புக்கான தேர்வையும் பல மொழிகளில் நடத்தவேண்டும். அனைத்து மாநிலங்களும், நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் பொறியியல் படிப்புக்கு நாடுமுழுவதும் ஒரே நுழைவுத்தேர்வை நடத்துவதற்கு ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கவேண்டும் என்றும் கேட்டிருக்கிறது.

‘நீட்’ தேர்வு என்றாலும் சரி, பொறியியல் படிப்புக்கான அகில இந்திய நுழைவுத்தேர்வு என்றாலும் சரி, ஒன்று தமிழக மாணவர்களுக்கு விலக்குப்பெறுவதை தமிழக அரசு உடனடியாக உறுதிப்படுத்த வேண்டும். அப்படி இல்லையென்றால், மாணவர்கள் அதற்காக தங்களை தயார்படுத்திக்கொள்ள வெளிப்படையாகவே தெளிவுப்படுத்திவிடவேண்டும். திடீரென பொதுநுழைவுத்தேர்வு என்றால் மாணவர்களால் அதை நிச்சயம் சந்திக்கமுடியாது. தமிழக கல்வித்திட்டத்தில் கேட்கப்படும் கேள்விகள் என்பது மாணவர்களின் மனப்பாடம் செய்யும் ஆற்றலை சோதிக்கும் வகையில்தான் இருக்கிறது. பாடங்களில் என்ன இருக்கிறதோ, அதை அப்படியே மனப்பாடம் செய்து, ‘சொன்னதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை’ என்பதுபோல, அப்படியே எழுதும் மாணவர்களுக்குத்தான் அதிக மார்க்குகள் கிடைக்கிறது. ஆனால், நுழைவுத்தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகள் மனப்பாட அறிவே இல்லாமல், பயன்பாடு சார்ந்து, ஆராயும் ஆற்றலை சார்ந்துள்ள பாடத்திட்டங்களில் இருந்தும், மாணவர்களின் அறிவாற்றலை சோதிக்கும் வகையிலும்தான் இருக்கும். அத்தகைய தேர்வுகள் எழுதவேண்டும் என்றால், நிச்சயமாக இப்போதுள்ள பாடத்திட்டங்களை சி.பி.எஸ்.இ. திட்டத்திற்கு நிகராக மாற்றியே தீரவேண்டும். எனவே, தமிழக அரசு இந்த 2 நுழைவுத்தேர்வுகள் வி‌ஷயத்தில் உடனடியாக முடிவுகளை மேற்கொள்ளவேண்டும். பாலம் வந்துவிட்டது தாண்டித்தான் ஆகவேண்டும்.


Next Story