21 ஆண்டுகள் நடந்த நீதியின் பயணம்


21  ஆண்டுகள்  நடந்த  நீதியின்  பயணம்
x
தினத்தந்தி 14 Feb 2017 9:30 PM GMT (Updated: 2017-02-14T23:24:52+05:30)

தமிழக அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவும் உற்றுப்பார்த்துக்கொண்டிருந்த ஒரு முக்கியமான வழக்கின் தீர்ப்பை, நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் கொண்ட பெஞ்சு, 570 பக்கங்களில் வழங்கியுள்ளது.

மிழக அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவும் உற்றுப்பார்த்துக்கொண்டிருந்த ஒரு முக்கியமான வழக்கின் தீர்ப்பை, நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் கொண்ட பெஞ்சு, 570 பக்கங்களில் வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பு நீண்ட நெடிய 21 ஆண்டுகால நீதி பயணத்தின் இறுதிபதிலாகும். 1991 முதல் 1996–ம் ஆண்டுவரை ஜெயலலிதா முதல்–அமைச்சராக இருந்தகாலத்தில், வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடியே 64 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாக அவர்மீதும், அவருடைய தோழியான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதும், தி.மு.க. ஆட்சிகாலத்தில் 1996–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 18–ந்தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கு, தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன், சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், 2003–ம் ஆண்டு நவம்பர் 18–ந்தேதி கர்நாடக மாநிலத்துக்கு மாற்றப்பட்டு, அங்கு இதற்காக ஒரு சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது. 5 நீதிபதிகளால் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கு கடைசியாக பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி ஜான்மைக்கேல் டி.குன்காவால் விசாரிக்கப்பட்டது. அவர் 2014–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27–ந்தேதி 1,136 பக்கங்கள் கொண்ட ஒரு விரிவான தீர்ப்பை வழங்கினார்.

ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும், 10 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடமுடியாது என்றும் தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. இதுபோல, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் 4 ஆண்டுகள் ஜெயில்தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. உடனடியாக அனைவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹார ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இந்த தண்டனையை எதிர்த்து 4 பேரும் கர்நாடக ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த நீதிபதி குமாரசாமி, 2015–ம் ஆண்டு மே 11–ந்தேதி ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரையும் விடுதலைசெய்து தீர்ப்பு வழங்கினார். இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உடனடியாக சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 7–ந் தேதியன்று தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

இந்தநிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டு, நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பை தள்ளுபடிசெய்து, சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான்மைக்கேல் டி.குன்கா வழங்கிய தீர்ப்பை உறுதிசெய்தது. அதாவது ஒரு செசன்சு கோர்ட்டு நீதிபதி வழங்கிய தீர்ப்பை உறுதிசெய்து, ஐகோர்ட்டு நீதிபதி வழங்கிய தீர்ப்பை தள்ளுபடி செய்தது. இதுமட்டுமல்லாமல், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் உடனடியாக பெங்களூரு கோர்ட்டில் ஆஜராகவேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கில் முதல்குற்றவாளியான ஜெயலலிதா மரணமடைந்துவிட்டதால், அவர் தொடர்பான வழக்குகள் விசாரணை அனைத்தும் விடுவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் அவரும் இந்த தண்டனையை அனுபவிக்கவேண்டிய கட்டாயநிலை ஏற்பட்டிருக்கும். பொதுவாக அவசரப்பட்டு வழங்கப்பட்ட நீதி, புதைக்கப்பட்ட நீதி, தாமதமாக வழங்கப்பட்ட நீதி, மறுக்கப்பட்ட நீதி என்பார்கள். ஆனால், இந்த நீதிமன்றத்தீர்ப்பு, புதைக்கப்படவும் இல்லை, மறுக்கப்படவும் இல்லை. ஆனாலும், 21 ஆண்டுகள் என்பது மிகவும் நீண்ட ஒரு பயணமாகும். குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு வாய்ப்பளிக்க நிச்சயமாக காலஅவகாசம் கொடுக்கப்படவேண்டும். ஆனால், இந்த வழக்கில் இறுதித்தீர்ப்பு கிடைக்க இவ்வளவு காலம், அதாவது 21 ஆண்டுகளாகிவிட்டது. ஆனால், ஒன்றுமட்டும் நிச்சயம். தாமதமானாலும், நீதியின் கரங்களிலிருந்து யாரும், எந்த வழக்கு என்றாலும் தப்பிக்கவே முடியாது என்பதுதான் இந்த வழக்கின் தீர்ப்பு கற்றுக்கொடுத்துள்ள பாடமாகும்.

Next Story