வறட்சிக்காலத்தில் வேலைவாய்ப்பு!


வறட்சிக்காலத்தில்  வேலைவாய்ப்பு!
x
தினத்தந்தி 15 Feb 2017 9:30 PM GMT (Updated: 15 Feb 2017 5:53 PM GMT)

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் ஆட்சி அமைத்தவுடன், 2.2.2006–ல் பிரதமர் மன்மோகன்சிங் கொண்டு வந்த திட்டம்தான், ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டமாகும்’.

க்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் ஆட்சி அமைத்தவுடன், 2.2.2006–ல் பிரதமர் மன்மோகன்சிங் கொண்டு வந்த திட்டம்தான், ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டமாகும்’. தமிழ்நாட்டில் இதை 100 நாள் வேலை திட்டம் என்றால்தான் எல்லோருக்கும் தெரியும். கிராமப்பகுதிகளில் திறன்சாரா, ஆனால் உடல் உழைப்பை மேற்கொள்ள விருப்பமுள்ள வயது வந்தோர் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் 100 நாட்கள் கண்டிப்பாக வேலைவாய்ப்பை அளிப்பதை உறுதி செய்வதுதான் இந்தத் திட்டத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும்.

தமிழ்நாட்டில் இந்தத்திட்டம் 2.2.2006–ல் தொடங்கப் பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் திறன்சாரா உடல் உழைப்பு தொழிலாளர்களுக்கான சம்பளம் முழுவதும் மத்திய அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. கட்டுமானப்பொருட்களின் செலவு மற்றும் திறன் சார்ந்த தொழிலாளர்களின் ஊதிய செலவு என்று வந்தால், மத்திய அரசாங்கம் 75 சதவீதமும், மாநில அரசாங்கம் 25 சதவீதமும் வழங்க வேண்டும். ஆரம்பத்தில் இந்தத்திட்டத்தில் ஒரு நாள் சம்பளம் ரூ.64 என்று நிர்ணயிக்கப்பட்டதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தப்பட்டு, தற்போது 203 ரூபாய் ஒருநாள் சம்பளமாக வழங்கப்படுகிறது. முதலில் இந்தத் திட்டத்தில் நிறைய ஊழல் நடக்கிறது, முழுச்சம்பளத்தையும் கொடுக்காமல் குறைந்தளவு சம்பளம் கொடுத்து, ஏதோ கொஞ்ச நேரம் வேலை செய்து விட்டு வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள் என்று கூறப்பட்டது. ஆனால், இப்போது நேரடியாக அவர்களது வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்படுவதால், அந்த குற்றச்சாட்டுக்கு இடமில்லாமல் இருக்கிறது. ஆனால், வங்கிகளில் தாமதமில்லாமல் சம்பள பணத்தை போட வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக இருக்கிறது. இந்த ஆண்டு மத்திய பட்ஜெட்டில், கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ஒதுக்கிய தொகையைவிட கூடுதலாக ரூ.9,500 கோடி ஒதுக்கப்பட்டு, ரூ.48 ஆயிரம் கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தொகையை கொண்டு 5 லட்சம் பண்ணை குட்டைகள், 10 லட்சம் ‘கம்போஸ்ட்’ உரக்குழிகள் உருவாக்கப்படும் என்று உறுதிபட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசை பொறுத்தமட்டில், இந்தத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. இதில், பெண் பயனாளிகள் தேசிய அளவில் 55 சதவீதம் என்ற நிலைக்கு மாறாக, தமிழ்நாட்டில் மொத்த தொழிலாளர்களில் 85 சதவீதம் பேர் பெண்கள், 28 சதவீதம் பேர் ஆதிதிராவிடர்கள். ‘‘தற்போது நிலவும் வரலாறு காணாத வறட்சியை சமாளிக்க இந்த 100 நாள் வேலைதிட்டத்தின் வரம்பு 100 நாட்கள் என்பது 150 நாட்களாக உயர்த்தப்படும். ஏரிகள் தூர்வாருதல், குளங்கள் சீரமைத்தல் மற்றும் பாசன வாய்க்கால்கள் தூர்வாருதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்’’ என்று சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். நிச்சயமாக இது வரவேற்கத்தக்கது. மத்திய அரசாங்கம் கூறியபடி, பண்ணை குட்டைகள் அமைத்தல், ‘கம்போஸ்ட்’ உரக்குழிகள் அமைத்தல் போன்ற பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். இது மட்டுமல்லாமல், தற்போது ஐகோர்ட்டு உத்தரவின்படி, சீமைக்கருவேல மரத்தை தூரோடு பிடுங்கி எடுக்கும் பணி நடைபெற்றுவருகிறது. அந்தப்பணியையும் இந்தத்திட்டத்தோடு இணைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து பருவ மழை பெய்து, விவசாய பணிகள் தொடங்கும்வரை இந்த 150 நாட்கள் வேலைவாய்ப்பையும் கிராமப்புறங்களில் பயன்படுத்தினால், வேலைவாய்ப்புகள் வழங்கியது போல் இருக்கும். பொதுவாக, இந்தத்திட்டம் செயல்படுத்தப்பட்டபிறகு, கிராமங்களில் விவசாயப் பணிகளுக்கு ஆள் இல்லை என்கிறார்கள். ஆகவே, இந்தத்திட்டத்தை கிராமங்களில் சாகுபடி பணிகள் நடைபெறாத காலங்களில், அதாவது விதைப்பிலிருந்து அறுவடை முடியும் காலம்வரை பயன்படுத்தாமல், அதன்பிறகு மீண்டும் விதைக்கும் காலம்வரை பயன்படுத்தினால், விவசாயத்திற்கும் பாதிப்பு இருக்காது, அவர்களுக்கும் ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.

Next Story