மீண்டும் தலையெடுக்கும் மேகதாது அணை பிரச்சினை


மீண்டும் தலையெடுக்கும் மேகதாது அணை பிரச்சினை
x
தினத்தந்தி 16 Feb 2017 8:30 PM GMT (Updated: 2017-02-16T19:32:50+05:30)

தற்போது, கடுமையான வறட்சி தமிழ்நாடு முழுவதும் நிலவி வருகிறது. விவசாயிகள் சொல்லொண்ணா துயரத்தை அடைந்து கொண்டிருக்கிறார்கள். குடிநீர் பஞ்சம் எல்லா இடங்களிலும் தலையெடுத்து விட்டது.

றைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா கடந்த செப்டம்பர் மாதம் 22–ந் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, டிசம்பர் 5–ந் தேதி மரணமடைந்து, அதன்பின் ஏற்பட்டுள்ள அரசியல் சுனாமியில் பல வி‌ஷயங்கள் குறிப்பாக மக்கள் பிரச்சினைகள், விவசாயிகள் பிரச்சினைகள், அரசின் கவனத்திற்கு வந்தும் உரிய நடவடிக்கை எடுக்க முடியாமல், தமிழகமே பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, கடுமையான வறட்சி தமிழ்நாடு முழுவதும் நிலவி வருகிறது. விவசாயிகள் சொல்லொண்ணா துயரத்தை அடைந்து கொண்டிருக்கிறார்கள். குடிநீர் பஞ்சம் எல்லா இடங்களிலும் தலையெடுத்து விட்டது. நிவாரணப் பணிகள் முழுவீச்சில் நடைபெற வேண்டிய இந்த காலகட்டத்தில், பணிகளில் எல்லாம் தொய்வு ஏற்பட்டுள்ளது. ‘நீட்’ நுழைவுத்தேர்வு பிரச்சினை தலைக்குமேல் தொங்கிக் கொண்டிருக்கும் கத்தியாக இருக்கிறது. மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லாததால், விவசாயப்பணி முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மேட்டூருக்கு தண்ணீர் வருவதில்லை. இன்னும் வராமல்போகும் அளவிற்கு கர்நாடக அரசாங்கம் மேகதாது அணையை கட்டுவதற்கு முயற்சிகளை தொடங்கி விட்டது. கர்நாடக மாநிலத்தில் உள்ள ராமநகரம் மாவட்டம், கனகாபுரத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை ரூ.5,912 கோடி செலவில் குடிநீருக்காகவும், மின்சாரம் உற்பத்திக்காகவும் கட்டப் போவதாக கர்நாடக அரசாங்கம் முடிவெடுத்து விட்டது. 66 டி.எம்.சி. தண்ணீர் தேக்கிவைக்கும் அளவிற்கு ஒரு அணையை கட்டுவதற்கு கொள்கை அடிப்படையில் கர்நாடக அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. மேட்டூர் அணைக்கு கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்துதான் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அந்த அணையின் கொள்ளளவே 49 டி.எம்.சி.தான். அதிலிருந்தே தண்ணீர் திறந்து விடமுடியாத நிலை ஏற்பட்டுக்கொண்டிருக்கும்போது, மேலும் 66 டி.எம்.சி. தண்ணீரை தேக்கி வைக்கும் அணையை கட்டினால் நிச்சயமாக தமிழ்நாட்டுக்கு தண்ணீரை கர்நாடக அரசாங்கத்தால் தரவே முடியாது. காவிரி நடுவர்மன்ற தீர்ப்புப்படி, 192 டி.எம்.சி. தண்ணீரை வழங்கி, மீதமுள்ள தண்ணீரை தேக்கிவைத்து பயன்படுத்தத்தான் இந்த அணையை கட்டுகிறோம் என்று கர்நாடக அரசு சொன்னாலும், யதார்த்த நிலையில் அது நிச்சயமாக அமல்படுத்த முடியாத ஒன்றாகும்.

மத்திய நீர்வள ஆணையத்திடமும், உச்சநீதிமன்றம் காவிரி பிரச்சினைக்காக நியமித்த கண்காணிப்பு குழுவிடமும், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடமும் இந்தத்திட்டத்தை தாக்கல்செய்து ஒப்புதல் பெறப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டும் முயற்சியை தொடங்குவது புதிது இல்லை. 1981–ம் ஆண்டு ஜனவரி 1–ந் தேதியே அப்போதைய முதல்–மந்திரி குண்டுராவ், ‘‘மேகதாதுவில் புதிதாக அணை கட்டப்போகிறேன். கன்னட மக்களுக்கு இது எனது புத்தாண்டு பரிசு’’ என்று அறிவித்தார். அப்போது மதுரை மத்தியதொகுதியில் இருந்து சட்டசபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த காமராஜ் காங்கிரஸ் தலைவர் பழ.நெடுமாறன், இதை அன்றைய முதல்–அமைச்சரான எம்.ஜி.ஆரின் கவனத்திற்கு கொண்டு வந்து, அதன் எதிரொலியாக எம்.ஜி.ஆர். அனைத்துகட்சி கூட்டத்தை உடனடியாக கூட்டினார். அந்தக் கூட்டத்திலும், தொடர்ந்து சட்டசபையிலும் பழ.நெடுமாறனையே தீர்மானம் கொண்டுவரச்சொல்லி நிறைவேற்றி, மேகதாது அணை அடிக்கல் நாட்டுவிழாவிற்கு ஜனாதிபதி சஞ்சீவரெட்டி செல்லாமல் தடுத்து நிறுத்தினார். அப்போது நிறுத்தப்பட்ட இந்த மேகதாது அணை பிரச்சினை 36 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் தலையெடுத்து விட்டது.

இப்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்று விட்டது. அன்று எம்.ஜி.ஆர். காட்டிய பாடத்தை பின்பற்றி உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தையும், சட்டசபையையும் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று மேகதாது அணை கட்டும் பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டவேண்டும். உடனடியாக இதை செய்யாவிட்டால், பிறகு வருத்தப்பட்டு பயனில்லை. காவிரி டெல்டா பாலைவனமாகி விடும். விவசாயிகள் எல்லாம் விவசாயத்தை விட்டுவிட்டு, வேறுவேலை தேடவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டு விடும்.


Next Story