பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற தாமதம்


பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற தாமதம்
x
தினத்தந்தி 17 Feb 2017 8:30 PM GMT (Updated: 2017-02-17T19:42:48+05:30)

‘‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்; எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி!’’ என்று பாடினார், பாரதியார் அன்று.

‘‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்; எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி!’’ என்று பாடினார், பாரதியார் அன்று. தந்தை பெரியாரும் பெண்கள் விடுதலைக்காக அரும்பாடுபட்டார். இன்று எல்லாத் துறைகளிலும் பெண்கள், ஆண்களுக்கு இணையாக வந்தாலும், பாரதியார் கூறியபடி, சட்டங்கள் செய்யும் சட்டசபையிலும், பாராளுமன்றத்திலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு இல்லாமல் இன்னமும் பெண்களின் பங்கு மிகக்குறைவாக இருக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளில் தமிழகத்தை எடுத்துக் கொண்டால், தி.மு.க., அ.தி.மு.க.வும் தங்கள் பங்குக்கு பெண்களுக்கு இடஒதுக்கீடு செய்வதில் முழுமையான பங்காற்றி விட்டார்கள். தி.மு.க. ஆட்சிக்காலத்தில் 1996–ல் பஞ்சாயத்து முதல் மாநகராட்சி வரை உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா தாக்கல்செய்யப்பட்டு அது நிறைவேறியது.

கடந்த 2016–ம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது, அவரது பிறந்தநாளான பிப்ரவரி 24–ந்தேதிக்கு, 4 நாட்களுக்கு முன்பு உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்றி விட்டார். ஆனால் அதற்கு பிறகு இன்னும் உள்ளாட்சி தேர்தல் நடக்கவில்லை. சட்டசபையிலும், பாராளுமன்றத்திலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்படவேண்டும் என்றால், பாராளுமன்றத்தின், இருஅவைகளிலும் சட்டம் நிறைவேறவேண்டும். 1996–ம்ஆண்டு செப்டம்பர் 12–ந்தேதி தேவகவுடா பிரதமராக இருந்தபோது, பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையிலான மசோதா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அப்போது பாராளுமன்றத்தில் இதற்கு ஒப்புதல் கிடைக்காமல், கூட்டு பாராளுமன்ற குழுவுக்கு அனுப்பப்பட்டது. 1998–ல் வாஜ்பாய் ஆட்சிக்கு வந்தபோது இந்த மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, தம்பிதுரை சட்டமந்திரியாக இருந்தார். லல்லுபிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதாதளம், இதை கடுமையாக எதிர்த்து, அந்தக் கட்சியை சேர்ந்த ஒரு எம்.பி., சபாநாயகர் பாலயோகியிடமிருந்து இந்த மசோதா நகலை பிடுங்கி கிழித்தெறிந்தார். மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்தால் 1999–ல் இந்த மசோதா தாக்கல்செய்யப்பட்டு அப்படியே கிடந்துவிட்டது. 2002–ல் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டது. 2003–ல் பாராளுமன்றத்தில் இருமுறை தாக்கல் செய்யப்பட்டது. 2004–ல் பாராளுமன்ற தேர்தலின்போது, வாஜ்பாய் நாங்கள் ஆட்சிக்குவந்தால், நிச்சயமாக இந்த மசோதாவை நிறைவேற்றுவோம் என்று உறுதியளித்தார். ஆனால், 2004–ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து, அந்த அரசாங்கத்தின் சார்பிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, டெல்லி மேல்–சபையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால், பாராளுமன்றத்தில் நிறைவேறவில்லை.

கடந்த 21 ஆண்டுகளாக அனைத்து அரசாங்கங்களிலும் இந்த மசோதாவைப் பற்றி பேசப்படும், பாராளுமன்றத்திலும் தாக்கல்செய்யப்படும் இருந்தாலும் நிறைவேற்றமுடியவில்லை. தற்போது பா.ஜ.க. அரசாங்கம் பாராளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மையோடு இருக்கிறது. ஆனால், மேல்–சபையில் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை இல்லை. சமீபத்தில் மத்தியமந்திரி வெங்கையா நாயுடு பேசும்போது, ‘நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா, டெல்லி மேல்–சபையில் பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை கிடைத்தவுடன் நிறைவேற்றப்படும்’ என்று கூறியிருக்கிறார். ‘அலை எப்போது ஓயும், கடலில் எப்போது இறங்கி குளிக்க’ என்ற நிலைதான் இப்போது ஏற்பட்டுள்ளது. பெண்களுக்கு இடஒதுக்கீடு மசோதா என்பது வாஜ்பாயின் கனவு, காங்கிரசின் கனவு மற்றும் பல கட்சிகளின் ஆதரவுகள் இருக்கிறது. உடனடியாக மத்தியஅரசாங்கம் அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்தையும் கூட்டி, இந்த மசோதா நிறைவேறுவதற்கான முயற்சிகளை தீவிரமாக மேற்கொள்ளவேண்டும். இந்த மசோதாவை யாராவது எதிர்த்தால், அந்தகட்சிகளை நாட்டுக்கு அடையாளம் காட்ட வேண்டும்.


Next Story