வரலாறு திரும்பியது


வரலாறு திரும்பியது
x
தினத்தந்தி 19 Feb 2017 8:30 PM GMT (Updated: 2017-02-19T17:39:31+05:30)

ஜனநாயகத்தில் மாநில சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையான வெற்றியை பெறும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய சட்டமன்ற கட்சி தலைவராக ஒருவரை தேர்ந்தெடுப்பார்கள்.

னநாயகத்தில் மாநில சட்டசபை தேர்தலில் பெரும்பான்மையான வெற்றியை பெறும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய சட்டமன்ற கட்சி தலைவராக ஒருவரை தேர்ந்தெடுப்பார்கள். அந்த சட்டமன்ற கட்சி தலைவர் தான், முதல்–அமைச்சராக பொறுப்பேற்பார். ஒரு முதல்–அமைச்சர், பதவியில் இருக்கும்போது மரணமடைந்தால், மீண்டும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூடி, தங்களுக்காக ஒரு தலைவரை தேர்ந்தெடுத்து அவர், முதல்–அமைச்சராக பொறுப்பேற்பார். 3.2.1969–ல் முதல்–அமைச்சர் அண்ணா மறைந்த பிறகு புதிய முதல்–அமைச்சர், கருணாநிதியா? நெடுஞ்செழியனா? என்று ஒரு கேள்வி எழுந்த நேரத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடந்தபோது கருணாநிதி பெயரும், நெடுஞ்செழியன் பெயரும் முன்மொழியப்பட்டது. ஆனால், பெரும்பான்மையான உறுப்பினர்கள் கருணாநிதிக்கு ஆதரவு தெரிவித்ததைப்பார்த்து நெடுஞ்செழியன் நான் போட்டியில் இருந்து விலகிக் கொள்கிறேன். போட்டியில்லாமல் கருணாநிதியை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்றுகூறி விலகினார். கருணாநிதி சுமுகமாக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தி.மு.க.வில் இருந்து எம்.ஜி.ஆர். விலகி, அ.தி.மு.கவை தொடங்கி, 1977–ல் ஆட்சியமைத்தார். 24.12.1987 அன்று அவர் மரணமடைந்தவுடன் அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆரின் மனைவி வி.என்.ஜானகி அணி, ஜெயலலிதா அணி என்று இரண்டு அணிகள் உருவானது. அப்போது அ.தி.மு.க.வில் இருந்த 130 உறுப்பினர்களில் 33 பேர் மட்டுமே ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இருந்தனர். தனக்கு பெரும்பான்மை இருக்கிறது என்றுகூறி வி.என்.ஜானகி ஆட்சியமைத்தார். அப்போது, சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என்ற கவர்னரின் உத்தரவிற்கேற்ப 28.1.1988 அன்று சட்டசபை கூடியது. அந்த நேரத்தில் வரலாறுகாணாத அளவிற்கு அவையில் கலவரம் வெடித்தது. செருப்புகளும், சோடா பாட்டில்களும் வீசப்பட்டன. சபாநாயகருக்கு முன்னால் உள்ள உயரமான மேஜை கீழே தள்ளிவிடப்பட்டது. நாற்காலிகள் இருபக்கமும் வீசப்பட்டன. ஒலிபெருக்கிகள் தூக்கிவீசி எறியப்பட்டன. தமிழக அரசியல் வரலாற்றிலேயே இப்படியொரு சம்பவம் நடந்ததே இல்லையென்று சொல்லும் அளவிற்கு கடுமையான கலவரம் நடந்தது. அதைத் தொடர்ந்து ஆட்சி கலைக்கப்பட்டு, சிறிது காலத்தில் இருஅணிகளும் ஒன்றாக இணைந்து 1991–ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்று ஆட்சியமைத்தார்.

இப்போது, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5–ந் தேதி ஜெயலலிதா மரணமடைந்தவுடன் ஓ.பன்னீர்செல்வம் முதல்–அமைச்சராக பொறுப்பேற்றார். கடந்த பிப்ரவரி 5–ந் தேதி சசிகலா, அ.தி.மு.க சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, கவர்னரிடம் பிப்ரவரி 9–ந் தேதி தான் தேர்ந்தெடுக்கப்பட்டதை தெரிவித்து முதல்–அமைச்சராக பொறுப்பேற்க அழைக்கும்படி கேட்டுக் கொண்டார். பிப்ரவரி 14–ந் தேதி அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு தண்டனை விதித்ததையொட்டி அன்றே சட்டமன்ற கட்சி உறுப்பினர்கள் கட்சி கூட்டம் கூடி, எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு, பிப்ரவரி 16–ந் தேதி அவரும், அவர் தலைமையிலான அமைச்சரவையும் பதவியேற்றுக்கொண்டது. அந்த அமைச்சரவையும் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று கவர்னர் கூறியதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் சட்டசபை கூட்டம் நடந்தது. அவைக்கூட்டம் தொடங்கிய உடனேயே கடும் அமளி ஏற்பட்டது. புத்தகங்கள் கிழித்து எறியப்பட்டன. நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டன, ஒலிபெருக்கிகள் பிடுங்கி எறியப்பட்டன. 1988–ல் நடந்ததுபோல, சபாநாயகரின் மேஜை கீழே தள்ளிவிடப்பட்டது. 2 முறை அவை ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் கூடிய நேரத்தில் அமளியில் ஈடுபட்டதாக தி.மு.க உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்ட நேரத்தில், சபை காவலர்களின் நடவடிக்கையால் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டை கிழிக்கப்பட்டது. தி.மு.க.வை வெளியேற்றிய பிறகு, எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் 122 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆக மொத்தத்தில் 1988–ல் நடந்த வரலாறு அப்படியே திரும்பிவிட்டது. அ.தி.மு.க.வில் எம்.ஜி.ஆர் மறைந்த பிறகும், ஜெயலலிதா மறைந்த பிறகும், சட்டசபையில் ஒரே மாதிரியான சம்பவங்கள் அரங்கேறி விட்டன.

Next Story