வேலைவாய்ப்புகளை உருவாக்குவோமே!


வேலைவாய்ப்புகளை உருவாக்குவோமே!
x
தினத்தந்தி 21 Feb 2017 9:30 PM GMT (Updated: 21 Feb 2017 2:31 PM GMT)

முதல்–அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றவுடன், முதலாவதாக 5 கோப்புகளில் கையெழுத்திட்டார்.

முதல்–அமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்றவுடன், முதலாவதாக 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில், ஒரு உத்தரவு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தற்போது வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகை இருமடங்காக அதிகரிக்கப்படும் என்று மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் அறிக்கையில் கூறியிருந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலான உத்தரவாகும். இதன்படி, வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவுசெய்து குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் நிறைவுசெய்து, அதற்குள் வேலைகிடைக்காமல் காத்திருக்கும் 10–ம் வகுப்பு, 12–ம் வகுப்பு, பட்டப்படிப்பு ஆகிய கல்வித்தகுதிகள் கொண்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இப்போது வழங்கப்படும் உதவித்தொகையை இருமடங்காக உயர்த்தி ஆணையிட்டுள்ளார். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 45 வயதுவரையிலும், மற்றவர்கள் 40 வயதுவரையிலும் என்ற உச்சவரம்புக்கு உட்பட்டு, 3 ஆண்டுகளுக்கு மட்டும் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை பெறுபவர்களின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும். அவர்கள் அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களாகவோ, சுயதொழில் செய்பவர்களாகவோ இருக்கக்கூடாது. மேலும், பள்ளிக்கூடம், கல்லூரிகளில் அன்றாடம் பயிலும் மாணவ–மாணவிகளாக இருக்கக்கூடாது.

இந்த திட்டத்தின் அடிப்படையில், 10–ம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்களுக்கு தற்போது மாதந்தோறும் வழங்கப்படும் ரூ.100 உதவித்தொகை ரூ.200 ஆகவும், 10–ம் வகுப்பில் தேர்வு பெற்றவர்களுக்கு ரூ.150–லிருந்து ரூ.300 ஆகவும், பிளஸ்–2 தேர்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் 200 ரூபாய், ரூ.400 ஆகவும், பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்பு படித்தவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும் 300 ரூபாய், ரூ.600 ஆகவும் உயர்த்தி மாதந்தோறும் வழங்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, இந்த 4 இனங்களிலும் 55 ஆயிரத்து 228 பேர் உதவி பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், கடந்தஆண்டு நிலவரப்படி, 83 லட்சத்து 33 ஆயிரத்து 864 பேர் வேலைக்காக பதிவுசெய்து காத்திருக்கிறார்கள். வேலையில்லா திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த உதவித்தொகையை உயர்த்தி வழங்கியிருப்பது நிச்சயமாக அவர்களுக்கு உதவியாக இருக்கும். அந்தவகையிலும், தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றியிருப்பதும் நிச்சயமாக வரவேற்புக்குரியதாகும். அதுபோல, தமிழக அரசு இவ்வாறு உதவித்தொகையை 3 ஆண்டுகளுக்கு மட்டும் கொடுப்பதைவிட, அவர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகமாக உருவாக்குவதே சாலச்சிறந்ததாகும். 3 ஆண்டுகளுக்குள் வேலைகிடைக்கவில்லையென்றால் அதன்பிறகு என்ன செய்வார்கள்?.

இந்த ஆண்டு அரசின் வரிவருவாய் ரூ.90 ஆயிரத்து 691 கோடியே 87 லட்சமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டது. ஆனால், மாநிலத்தில் அரசுக்கு வருமானம்தரும் வணிகவரி, பத்திரப்பதிவுவரி, மோட்டார் வாகனவரிகள் எல்லாம் இன்றைய பொருளாதார சூழ்நிலையில் நிச்சயமாக இந்தளவு கிடைக்காது. அதேநேரம், இதுவரையே மானியம் மற்றும் உதவித்தொகைகளுக்காக ரூ.68 ஆயிரத்து 211 கோடியே 5 லட்சம் போய்விடுகிறது. இனி மேலும் அதிகமாகும். இது ஒருபுறமிருக்க, பாராளுமன்றத்தில் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தால் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ‘நாடுமுழுவதும் வேலையில்லா திண்டாட்டம் 0.3 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இதில், தமிழ்நாட்டில் மட்டும் 0.5 சதவீதம் உயர்ந்திருக்கிறது’ என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் உடனடியாக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டே ஆகவேண்டும் என்பதை இந்த ஆய்வு பட்டவர்த்தனமாக தெரிவிக்கிறது. மானியங்கள், உதவித்தொகை வேண்டியதுதான். ஆனால், அதைவிட வேலையில்லா திண்டாட்டத்தை போக்குவது மிகவும் முக்கியமாகும். எனவே, தமிழக அரசு உடனடியாக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் அதிகமாக்கும் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுத்தவேண்டும். புதியதொழில்கள் தொடங்கப்படுவதற்கு ஊக்கம் அளிக்கவேண்டும்.

Next Story